Advertisement

அதாகப்பட்டது மகாஜனங்களே

நடிகர் மற்றும் இயக்குனர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாக அறிமுகமாக, அவரது ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் எனும் தெலுங்கு நடிகை தமிழுக்கு வர, சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரில் சிவரமேஷ்குமார் தயாரிப்பில், இன்பசேகர் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படமே
"அதாகப்பட்டது மகாஜனங்களே".

எதிர்பாராத சூழலில் செக்யூரிட்டி நண்பனுக்கு உதவபோய் துப்பறிவாளன் ஆன ஒரு மேடை கச்சேரி கிடாரிஸ்ட் கலைஞனுக்கு, அதன் மூலம் கிடைக்கும் காதலும், வாழ்க்கையும் தான் "அதாகப்பட்டது மகாஜனங்களே" படத்தின் காமெடி, கலர்புல், கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!

சாதிக்க முடியாமல் போன ஒரு தபேலா கலைஞரின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்பிற்குரிய ஒரு கிடாரிஸ்ட் மகனாக, அந்த மகனும் ஒரு பெரிய கிடாரிஸ்ட்டாக சாதிக்க முடியாது தவிக்கும் படியான பாத்திரத்தில் அறிமுக நாயகராக உமாபதி ராமையா அறிமுகம் என்பது குறையாக தெரியாத அளவிற்கு அசத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக உமாபதியின் ஜோடியாக தெலுங்கு நடிகை ரேஷ்மா ரத்தோர், த்ரிஷா சாயலில் வந்து போகிறார். டூயட் டில் நன்றாகவே ஆடுகிறார் பாடுகிறார். கொஞ்சம், நடிக்கவும் செய்திருக்கிறார் பேஷ்., பேஷ்!

உமாபதியின் காமெடி நண்பர் கருணாகரன், நாயகரின் அப்யாவாக வரும் ஆர்.பாண்டியராஜன், நாங்கெல்லாம் வில்லனாகக் கூடாதா? எனக் கேட்டபடி காமெடி வில்லன் ஆக வரும் மனோபாலா, நாயகியின் அப்பா ஆடுகளம் நரேன், போலீஸ் யோக்ஜேப்பி, மகனுக்காக ஒரே ஒரு சீனில் சும்மா வந்து போகும் தம்பி ராமையா.... உள்ளிட்ட எல்லோரும் கச்சிததம்.

தொழில்நுட்ப கலைஞர்களில், ஜி.மதனின் படத்தொகுப்பில், ஒருசில இடங்கள் நீள நீளமாய் இருப்பது படக்காட்சிகள் சிலவற்றை நாடகத் தன்மையோடு காட்சி அளிக்க செய்வது சற்றே பலவீனம்! பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், தேர்வு செய்யப்பட்டிருக்கும் லொகேஷன்களும் ஹாசம், வாசம்.

டி.இமான் இசையில், பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில் வரும் "டபுள் ஓ.கே...", "ஏணடி நீ என்னை நீ இப்படி ஆக்குனே...", "அந்த புள்ள மனசை...", "இதுக்குதானே ஆசைப்பட்டேன்..." ஆகிய நான்கு பாடல்களும், அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் இந்தப் படத்திற்கு பெரிய பலம்.

இயக்குனர் இன்பசேகரின்,, எழுத்து , இயக்கத்தில் ஒரு சில இழுவைக் காட்சிகள் , சில , பல லாஜிக்குறைகள் இப்படத்தில் அதிகம் இருப்பது சற்றே பலவீனம்!

இயக்குனர் இன்பசேகரின் எழுத்து, இயக்கத்தில், "வாழ்க்கையில ஒரு பிரச்சினை வந்துச்சுன்னா, நாம எல்லோரும், இதுக்கு முடிவு இப்படித்தான் இருக்கும். நாம எப்படியும் தப்பிச்சிடுவோமுன்னு... யோசித்து வைத்திருப்போம். ஆனா, விதி வசத்தால் எதிர்பாராத முடிவு ஒன்று நாம் யோசித்தற்கு மாறாக வரும் போது சிரிப்பதா ? அழுவதா ..? என்று தெரியாது ... என்னடா, இப்படி ஆயிடுச்சேன்னு ... அந்த விஷயத்தை கொஞ்ச, கொஞ்சமாக மறப்போம் ... இல்லையா .?!" அதையே மென்மையான மெஸேஜாகக் கொண்டு வந்திருக்கிறது இத்திரைப்படம் .

அதே மாதிரி ,இந்தப் படத்தில் இடம் பெறும் ., "வச்சப் பொருள வச்ச இடத்துல தேடுறதை விட்டுட்டு கண்ட இடத்துல தேடுறது தான் பிரச்சினையே ... ", "எப்போ நம்ம குளோஸ் பிரண்டுக்கு பொண்ண புடிச்சுதோ அப்பவே நமக்கு சனியன் புடிச்சது ...." என்பது உள்ளிட்ட கருத்தாழமிக்க காமெடி வசனங்களும், அழகிய பாடல் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கும் பெருவாரியான காட்சிப் பிழைகள் சாமான்ய ரசிகனுக்கு தெரியா அளவிற்கு வசீகரீக்கிறது என்பது ஆறுதல்!

ஆக மொத்தத்தில், "அதாகப்பட்டது மகாஜனங்களே - நிச்சயம் தம்பி ராமையாவின் வாரிசைக் காண வருவார்கள் அவரது ரசிகர்களே!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement