Advertisement

உறியடி

தினமலர் விமர்சனம்
நடிகர்கள் : விஜய் குமார், ஹென்னா பெல்லா, மைம் கோபி, சந்த்ரு, ஜெயகந்த், சிவபெருமாள்

இயக்குநர் : விஜய் குமார்
விஜய் குமார் எனும் புதியவர் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகராக நடித்தும் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் வித்தியாசமும், விறுவிறுப்பு மான கதைக்களமும், காட்சிப்படுத்தலும் கொண்ட திரைப்படம் தான் உறியடி.
திருச்சி பகுதியில் தங்கள் வயதிற்கே உரிய ஜாலித்தனத்துடன் கூடவே கொஞ்சம் முரட்டு சுபாவத்துடன் வாழ நினைக்கும் ஹாஸ்டல் வாசிகளான கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்கும், அந்த ஏரியாவில் ஜாதிய அரசியலால் நாலு காசு பார்க்க நினைக்கும் ஒரு ஹைவேஸ் தாபா ஹோட்டல் உரிமையாளரின் சுய நலத்தால் ஏற்படும் மறைமுக, நேர்முக முட்டலும், மோதலும் தான் உறியடி மொத்தப்படமும்!
இந்த மெல்லிய கதையை எத்தனைக்கு எத்தனை வலிமையாக, திறமையாக, புதுமையாக சொல்ல முடியுமோ? அத்தனைக்கு அத்தனை அழகாக சொல்லி இருக்கிறார் இப்பட இளம் கதாநாயகரும், இயக்குனருமான விஜய்குமார். என்ன? கொஞ்சம் இரத்தவாடை, குத்து, வெட்டு கொடூரங்கள் மட்டும் தூக்கலாக தெரிவது உறுத்தலாக இருக்கிறது. அதற்குத்தான் சென்சார் ஏ சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டதே... என்பது கவனத்திற்குரியது.
இயக்குனர் - கதாநாயகர் விஜய் குமார் மாதிரியே, மைன்ட் முழுக்க ஜாதீய பாலிடிக்ஸுடன் திரியும் தாபா உரிமையாளர் மைம் கோபி, நாயகரின் நச்-டச் நண்பர்கள் சந்துரு, ஜெயகந்த், சிவபெருமாள், மற்றும் கஞ்சா குடுக்கி சிட்டிசன் சிவக்குமார் உள்ளிட்டோரும் யதார்த்த நடிப்பில் பிண்ணி பெடலெடுத்திருக்கின்றனர். அதிலும் ஹாஸ்டல் நண்பர் அந்த குவாட்டர் - கார்த்திக்கும், கஞ்சா குடுக்கி லாட்ஜ் ஒனரின் வில்லத்தனமும் வாவ்" என்று வாய் பிளக்க வைக்கின்றன. இதில் நாயகியாக வரும் ஹென்னா பெல்லா இப்படத்திற்கு தேவையான அளவு ஊறுகாயாய் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார்.
பவுல் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவும் , அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்கா பலம்!
மசாலா காபி (?)யின் இசையில், சொக்க வச்ச பச்சக்கிளி சுத்தவிட்டு போனதென்ன... , பாடலும் க்ளைமாக்ஸ் டெக்னிஷியன் லிஸ்ட் ரன்னிங்கில் இடம்பெறும் அக்னி குஞ்சொன்று கண்டேன்....பாடலும் ஹாசம்! இப்பட நாயகர், இயக்குனர் விஜயகுமாரின் பின்னணி இசையும் மிரட்டல். அதே மாதிரி விக்கியின் யதார்த்த சண்டை பயிற்சியும் மாஸ்மிரட்டல்!
என்னை வளர்த்தவனா நீ? என் வளர்ச்சிக்கே வில்லன்..., இதுல ஏதும் விஷம் கலந்து டலேயே.... , நம்ம ஜாதிய சார்ந்த ஒவ்வொரு தனுக்கும் தான், தான் இந்த ஜாதி கட்சிக்கு தலைவன்ற எண்ணம் ஏற்படணும்.... ஆனா காலம் பூரா தலைமையா நாம தான் இருக்கணும்... எனும் யதார்த்த நையாண்டி அரசியல் வசனங்களும், தாபா ஹோட்டல் செட்-அப்புகள் உள்ளிட்டவைகளும், தமிழ் சினிமாவுக்கு சற்றே, புதுசாக தெரிவது உறியடி-யை புதியவர் விஜய்குமார் எழுத்து, இயக்கத்தில் உயர்த்திப் பிடிக்கின்றன.
அதே நேரம், ஓவர் போதைக்காட்சிகள், ஓவர் இரத்த வாடை, இம்மாம் பெரிய ஜாதிய கொலைகள்-அடிதடி மொத்தப் படத்திலும் ஒரு இடத்திலும் போலீஸே எட்டிப்பார்க்காதது (காமெடி லாட்ஜ் சீனில் காம நெடியுடன் ஒரு போலீஸ் ஒடுவதெல்லாம் கணக்கில் வாராது!)... உள்ளிட்ட குறைகளை ஒதுக்கிவிட்டு ரசிகன் ரசனையுடன் ரசித்தானென்றால், தமிழ் சினிமாவில், "உறியடி - நல் உயரமடி!"

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement