Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - காத்திருக்கும் காலம்

குறிக்கோளுடன் பணியாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 4-ம் இடமான துலாம் ராசிக்கு செல்வது சிறப்பானது அல்ல. அவரால் நன்மை கிடைக்க சில காலம் நீங்கள் காத்திருப்பது அவசியம். மன உளைச்சல், உறவினர் பகை உருவாகலாம். 2018 பிப்.14-ல் விருச்சிக ராசிக்கு மாறிய பின், திருமணம் சுப நிகழ்ச்சி நடந்தேறும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார வளம் பெருகும். பெண்களால் மேன்மை கிடைக்கும்.

ராகு உங்கள் ராசியில் இருப்பது சுமாரான நிலையே. அவரால் முயற்சிக்குரிய பலன் கிடைக்காமல் போகலாம். கேது 7-ம் இடமான மகரத்தில் இருப்பதால் வீண் அலைச்சல், எதிரி தொல்லை, உடல்நலக்குறைவு ஏற்படலாம்.

சனிபகவான் தற்போது 5-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். அவரது 7-ம் இடத்து பார்வையால் ஓரளவு நன்மை உண்டாகும். 2018 டிச.19-ல் சனி, தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை மேலோங்கும்.

இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம்.2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
திட்டமிட்ட செயலை நிறைவேற்ற விடாமுயற்சி தேவைப்படும். வருமானம் திருப்தியளித்தாலும் செலவு பல வழிகளில் உண்டாகும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகி விலகும்.

சுபவிஷயத்தில் பொறுமை தேவைப்படும். உறவினர்களிடம் நெருக்கம் வேண்டாம்.
தொழில், வியாபாரத்தில் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை. வியாபார விஷயமாக வெளியூரில் தங்க நேரிடும்.
பணியாளர்கள் உழைப்புக்கேற்ற வருமானம் காண்பர். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற காத்திருக்க நேரிடும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். விவசாயிகள் அதிக
முதலீடு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் குருபகவான் சாதகமான இடத்துக்கு வருவதால் உங்கள் ஆற்றல் மேம்படும். கணவன்-, மனைவி இடையே அன்பு மேலோங்கும். தடைபட்ட சுப
நிகழ்ச்சி இனிதே கைகூடும். பொருளாதார வளம் சிறக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக அதிகரித்து கொண்டே இருக்கும். புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். அரசு வகையில் இருந்த பிரச்னை மறையும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த கோரிக்கை எளிதில் நிறைவேறும். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்கும். ஏப்.9-க்குப் பின் பணிச்சுமை உண்டாகலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏப்.9க்கு பின் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைஇருக்காது. வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரின் அன்பை பெறுவர். ஆடை, அணிகலன் சேரும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.9-க்கு பின் சற்று பொறுமை தேவை.

பரிகாரம்:
* வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
* சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய்தீபம்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

Advertisement
 
Advertisement