Advertisement

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) (குறை தீர்க்கிறார் குரு பகவான்)

தர்மநெறி தவறாத தனுசு ராசி ராசி அன்பர்களே!

ராசிக்கு 9ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு 8-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். உறவினரால் பிரச்னை, முயற்சியில் தடை குறுக்கிடலாம்.ராசிக்கு 3-ம் இடமான கும்பத்தில் இருந்து கேது 2ம் இடமான மகரத்திற்கு வருகிறார். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. திருட்டு போகவும் வாய்ப்புண்டு.

சனிபகவான் தற்போது 12-ம் இடத்தில் இருக்கிறார். ஏழரை சனி காலம் என்பதால் துன்பம் அனுபவித்து இருப்பீர்கள். ஆனால் சனியின் 7-ம் பார்வை மூலம் பொருளாதார வளம் சேரும். டிச. 18ல் உங்கள் ராசிக்கு மாறுவதால் உடல்நலம் பாதிக்கலாம். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்படலாம்.10-ம் இடத்தில் உள்ள குரு பகவானால், சிரமம் குறுக்கிட்டாலும் அவரது பார்வை பலத்தால் குறையனைத்தும் தீரும். அவர் செப்.1ல் 11-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பானதாகும். அவரின் 7, 9-ம் இடத்து பார்வையால் நன்மை அதிகரிக்கும். 2018 பிப்.13-ல் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அதன்பின் நன்மை பெற இயலாது.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவு உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முயற்சியில் தடை குறுக்கிடலாம். முக்கிய விஷயங்களை குடும்ப பெரியவர்களின் ஆலோசனை பெற்று நிறைவேற்றவும். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடலாம். கணவன், -மனைவி இடையே கருத்துவேறுபாடு தலைதூக்கும். ஆக. 31க்கு பிறகு நிலைமை சீராகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலுக்கு ஆளாகலாம். அரசு வகையில் பிரச்னையை தவிர்க்க வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக. 31-க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும்.

பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். சிலர் பதவி அல்லது பொறுப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம். குருவின் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகும். ஆக. 31-க்கு பிறகு நன்மையை எதிர்பார்க்க முடியும். கலைஞர்கள் விடாமுயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்றால் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆக. 31-க்கு பிறகு நன்மை அதிகரிக்கும்.

2018 ஜனவரி– 2019 பிப்ரவரி ராகு-, கேது இரண்டும் சாதகமற்று இருந்தாலும் குருபலத்தால் தடைகளை முறியடிக்கும் வலிமை உண்டாகும். 2018 பிப். 13-க்கு பிறகு கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விருந்து, விழா என செல்ல வாய்ப்புண்டாகும். வாகனப் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுக வாய்ப்புண்டு. பொருள் திருடு போக வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணம் வெற்றி பெறும். பணியாளர்கள் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். 2018 பிப்.13-க்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். குருபகவான் 2018 ஏப். 9- முதல் செப்.3 வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இதனால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். 2018 பிப். 13-க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். விவசாயிகள் சிறப்பான பலன் பெறுவர். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

பரிகாரம்: வெள்ளியன்று நாக தேவதை வழிபாடு சனிக்கிழமையில் அனுமனுக்கு அர்ச்சனை, பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய்தீபம்

Advertisement
 
Advertisement