Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி பேட்டி: பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., துணை போவதாகக் கூறுகின்றனர். மத்தியில், பா.ஜ., ஆளுகிறது. மாநிலத்திற்கு நிதி வேண்டும் என்றால், பிரதமரிடம் தான் கேட்க வேண்டும்; அமெரிக்க அதிபரிடமா கேட்க முடியும்? தமிழகத்தில் எத்தனை கட்சிகள் வந்தாலும், அ.தி.மு.க., - தி.மு.க., மட்டுமே களத்தில் நிற்கும். மற்ற கட்சிகள் காணாமல் போகும்.

தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி: டெங்கு, பன்றிக் காய்ச்சலால், தமிழகத்திற்கு பாதிப்பு இருப்பது குறித்து, மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. மத்திய அரசின் சுகாதார நிறுவனங்கள், தமிழகத்தில் ஆங்காங்கே, மருத்துவ முகாம் அமைக்கலாம். டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை ஒழிக்க, போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு செயல்பட வேண்டும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

த.மா.கா., தலைவர், வாசன் பேட்டி: பா.ஜ.,வை வலுவாக எதிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சி தலைவர்கள், ராகுலை சந்தித்து வருகின்றனர். பா.ஜ.,வை வீழ்த்தக்கூடிய கட்சிகளை வரவேற்கிறோம். காங்., கட்சியுடன், த.மா.கா.,வை இணைக்கும் எண்ணமில்லை. லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து, த.மா.கா., போட்டியிடும்.

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: சபரிமலை ஆணையத்தின் நிர்வாகம், கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அது உலகம் முழுவதும் வாழும், கோடிக்கணக்கான அய்யப்ப பக்தர்களுக்கு சொந்தமானது என்பதை, அரசு நினைவில் கொள்ள வேண்டும். சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசு, மக்களின் பக்கம், அதாவது பக்தர்களின் பக்கம் நிற்கும்.

தி.மு.க., மருத்துவர் அணி செயலர், டாக்டர் என்.எஸ்.கனிமொழி பேட்டி: டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழப்பது, தொடர்கதையாகி வருகிறது. இது, ஜனவரி வரை போகும். இந்நேரத்தில், 'மெடிக்கல் எமர்ஜென்சி'யை, அரசு அறிவித்து இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில், பலமுனைகளில் இருந்தும் எடுத்திருக்க வேண்டும். அரசு அதில், அறவே தோல்வி அடைந்து விட்டது.

தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா பேட்டி: இப்போதும் அதே பலத்துடன், தே.மு.தி.க., உள்ளது. எந்தக் கட்சியாலும், எங்களின் ஓட்டு வங்கியைத் தொடக்கூட முடியாது. இப்போது, நிறைய கட்சிகள் முளைத்திருக்கின்றன. ஆனால், மக்கள் மனதில் யார் இடம் பிடிக்கப் போகின்றனர் என்பது தான், சவாலான விஷயம். வரும் தேர்தலில், எங்களின் பலத்தை மீண்டும் நிரூபிப்போம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement