Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை..

அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி பேட்டி: நான் இப்போதும், அ.தி.மு.க., காரன் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலர் மட்டுமே, எனக்கு தலைவர். அ.தி.மு.க.,வில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திருப்தியாக இல்லை. கட்சி ஆட்சியை நடத்தாமல், ஆட்சி தற்போது கட்சியை நடத்துகிறது.

'ஊரைக் கொள்ளையடித்தவர்கள், ஜாதி வெறியைத் துாண்டியவர்களுக்கெல்லாம் சிலை எடுக்குறீங்க... படேலுக்கு சிலை வைப்பது வேஸ்ட்டான்னு யாராச்சும் கேட்டுறப் போறாங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: சர்தார் வல்லபாய் படேல், உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சிதறிக் கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்ததில், பெரும் பங்காற்றி இருக்கிறார். அவரை போற்றுவது, அவருடைய பங்களிப்பை, அடுத்த தலைமுறைக்காக நினைவு கூர்வது வரவேற்கத்தக்கது. அதற்காக, 3,000 கோடி ரூபாய் கொட்டியிருப்பது, இந்தியாவில் பட்டினி, பசியுடன் வாழும் ஏழை, எளிய மக்களை கேவலப்படுத்துவதாக, வி.சி., கட்சி கருதுகிறது.

இந்திய கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா பேட்டி: ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக, கேரள அரசு செயல்படுவதாகக் கூறி, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., போன்ற அமைப்புகள், கேரள மாநிலத்தை கலவர பூமியாக்கி வருகின்றன. சபரிமலை விவகாரத்தை வைத்து, தமிழகத்திலும் கலவரத்தை துாண்ட, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் சதி செய்கின்றன. இதை, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து, முறியடிக்க வேண்டும்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: தீபாவளி அன்று, பொதுமக்கள் பட்டாசு வெடிக்க, இரண்டு மணி நேரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்; அதிக முதலீடு செய்து, கடைகளை வைத்துள்ள பட்டாசு விற்பனையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள், பட்டாசு வெடிக்க கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும்.

'பல்லை, 'நரநர'ன்னு கடிக்கவும், வாய்ப்பு ஏற்படுது சார்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: ஆண்டிற்கு ஒருமுறை, பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை சிதைப்பதை, மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் நிறைய, 'மீம்ஸ்'களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement