Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நல்ல திட்டம்...' என, பாராட்டத் தோன்றினாலும், இதிலும், 'சிபாரிசு' நடக்குமே என்ற கவலை தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: மொழிவழி மாநிலங்கள் பிரிந்த தினத்தை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநில அரசுகளே, விழா எடுத்துக் கொண்டாடுகின்றன. அதைப்போல், தமிழக அரசும், மொழிவழி மாநிலம் அமைந்த தினத்தை, அரசு விழாவாகவே கொண்டாட வேண்டும். தமிழர் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழகம் அமைக்க உயிர் நீத்த உத்தமர்களுக்கும், போராடி சிறை சென்ற போராளிகளுக்கும், இந்நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: இலங்கையில், ராஜபக்சே பிரதமரானது முதல், தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், இது நல்ல செய்தி அல்ல. அவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை, இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு: அரசு நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள், நேர்மையாகவும், கடமை தவறாதவராகவும், பணியில் அர்ப்பணிப்பும், வெளிப்படைத் தன்மை நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில், உங்களின் நடத்தை, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம், தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுமக்களுக்கு நீங்கள், முன்மாதிரியான தலைவர்களாக இருக்க வேண்டும்.

'அவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற சண்டை பத்தி, முழு மூச்சா படிச்சிட்டு தான் அறிக்கை விடுறீங்களா... சந்தேகமா இருக்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: தன்னாட்சி அதிகாரம் கொண்ட, ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் தலையிடுவதை, மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தடுமாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சீராக்க, மத்திய அரசுக்கு திறமை இல்லை என்றாலும், தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளை, மீட்க முடியாத அளவுக்கு சிதைத்து விட வேண்டாம்.

'அடடடே... காந்திய கொள்கைகள் உங்களுக்குப் பிடிச்சிருந்தா, கம்யூ., பக்கம் போயிருக்க மாட்டீங்களே... இப்போது, திடீர்ன்னு காந்தி மேலே என்ன பாசம்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி பேட்டி: குஜராத் மைந்தர்களுக்கு, நினைவகம் கட்டி வருவதாகக் கூறும் பிரதமர் மோடி, அதே மாநிலத்தில் பிறந்த, இந்திய அரசியலில் மட்டுமின்றி, மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற காந்திக்கு, உலகிலேயே மிக உயரமான சிலையை அமைக்காதது ஏன்? காந்தியின் மதச்சார்பற்ற கொள்கையை, பா.ஜ.,வினர் விரும்பவில்லை. அதனால் தான், அவருக்கு சிலை அமைக்கவில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement