Advertisement

'எம்.பி.,யும், துணை சபாநாயகரும் பாசனம் பெறுகின்றனரே!'

ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகள், திருப்பூரில், பேரணி நடத்தினர். நிறைவில், துணை சபாநாயகர், ஜெயராமன், எம்.பி., மகேந்திரன் முன்னிலையில், கலெக்டர் பழனிசாமியிடம், அவரது அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், திட்டக் குழு தலைவர், பரமசிவம், 'பி.ஏ.பி., எனப்படும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 4.25 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இதில், எம்.பி., மகேந்திரனின், 200 ஏக்கர் நிலம், துணை சபாநாயகர், ஜெயராமனின், 50 ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகிறது' என்றார்.விவசாயி ஒருவர், 'துணை சபாநாயகர் மற்றும் எம்.பி., வச்சுருக்கற நில விபரத்தை, பரமசிவம் அண்ணாச்சி, பொது இடத்துல வச்சு போட்டு உடைச்சுப் புட்டாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள், சத்தம் போட்டு சிரித்தனர்.

டி.ஜி.பி., 'போட்டு' உடைச்சிட்டாருல்லா...!
ஓய்வு பெற்ற போலீசார் இணைந்து உருவாக்கிஉள்ள, 'வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்' அமைப்பு சார்பில், 'சட்டவிரோதமாக ஒன்று கூடுவோரை கையாள்வது எப்படி?' என்ற தலைப்பில், பயிற்சி கருத்தரங்கு, கோவையில் நடந்தது. ரயில்வே கூடுதல், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, 'கலவரம் போன்ற நேரங்களில், போலீசார் சுதாரித்து, அதைத் துாண்டும் நபர்களை, விரைந்து கைது செய்து விட்டால் போதும்; கலவரம் பெரிதாகாமல் தடுத்து விடலாம். ஆனால், அதை செய்யாமல், சம்பந்தமே இல்லாத ஆட்களை பிடித்து வைத்து, 'கணக்கு' காட்டக் கூடாது' என்றார். அதற்கு, போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவரும், உண்மை வெளிப்பட்டதை கை தட்டி ஆரவாரம் செய்தனர்.மூத்த நிருபர் ஒருவர், 'இதுவரை, கலவரம் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்பில்லாத நபர்களை பிடித்தே, 'கணக்கு' காட்டுறாங்க என்பதை, டி.ஜி.பி., 'போட்டு' உடைச்சிட்டாரே...' எனக் கூற, மற்ற நிருபர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்


.'திருப்பரங்குன்றம் கழகத்திற்கு ராசியில்லையே...!'

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மதுரையில் நடந்தது. அங்கு வந்த முதல்வர், பழனிசாமியிடம், 'தேர்தல் என்றாலே, முதல் ஆலோசனை கூட்டம், மதுரையில் தான் நடத்துகிறீர்களே...' என, நிருபர்கள் கேட்டனர்.அதற்கு முதல்வர், 'மதுரை, ராசியான மாவட்டம். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, முதலில் நடந்தது, மதுரையில் தான். 32 மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளோம். அ.தி.மு.க., முதன்முதலாக வெற்றி பெற்றது, மதுரை மாவட்டத்தில் தான். எனவே, மதுரையில் தொட்டது துலங்கும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'மதுரை, ராசியான ஊர் தான். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதி மட்டும், அ.தி.மு.க.,வுக்கு ராசி இல்லையே... இங்கு ஜெயிச்ச, அ.தி.மு.க., இந்த இரண்டு வருஷத்துல, இரண்டு இடைத்தேர்தலை பார்த்துருச்சு. 'ஓட்டுக்கு துட்டு கிடைக்கும் என்பதால், வாக்காளர்களுக்கு ராசி தான்' எனக் கூற, மற்ற நிருபர்கள், நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement