Advertisement

சுக பிரசவம் நடந்தும் சாவு எதனால்?

'நஞ்சுக்கொடி' குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், நிர்மலா விஜயகுமார்: நஞ்சுக்கொடிக்கு ஆங்கிலத்தில், 'ப்ளசென்டா' என்று பெயர். ஒரு பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது, அவரது நஞ்சுக்கொடி, 22 - 25 செ.மீ., நீளம் வரை இருக்கும்; இது, அமெரிக்கப் பெண்களின் அளவு. இந்தியப் பெண்களுக்கு, 20 செ.மீ., நீளம் இருக்கும். ஓர் அங்குல அளவு தடிமனும், 0.5 கிலோ எடையும் கொண்டது நஞ்சுக்கொடி.

கரு உண்டானவுடனேயே, அதை வளர்ப்பதற்காக நஞ்சுக் கொடியிலிருந்து, ஹெச்.சி.ஜி., என்ற வேதிப்பொருளான, 'ஹார்மோன்' உற்பத்தியாகி, கர்ப்பிணியின் ரத்தத்தில் கலந்து, சிறுநீரில் வெளியேறும். ஒரு பெண் கருவுற்றிருப்பதை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் மூலம் கண்டறிய முடிவது, இதனால் தான். கருவில் இருக்கும் சிசுவுக்கு, அம்மாவிடமிருந்து ஊட்டச்சத்து கிடைப்பதற்கு உதவி செய்வது, நஞ்சுக்கொடி தான்.

தட்டை வடிவில் இருக்கும் நஞ்சுக்கொடி, செயல் அளவில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கும். ஒரு பகுதி, அம்மாவின் ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும்; மற்றொரு பகுதி, அந்த ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, தொப்புள்கொடி வழியாக சிசுவுக்கு அனுப்பும். இந்த இரண்டு வகை ரத்தங்களும், ஒன்றுடன் ஒன்று கலந்து விடாமலிருக்க, இரண்டு பகுதிகளுக்கு இடையேயும், ஜவ்வு போன்ற ஓர் அமைப்பு இருக்கும். கர்ப்பிணிக்கு ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால், அது, சிசுவுக்குப் பரவாமல் இருக்கவே, அம்மாவின் ரத்தம், கருவுக்குச் செல்வதற்கு முன், சுத்தப்படுத்தப்படுகிறது. மேலும், கர்ப்பிணி சாப்பிடுகிற மாத்திரைகளின் வீரியம் கூட, சிசுவுக்குப் போய் சேராது. வடிகட்டி போல நஞ்சுக்கொடி செயல்படுகிறது.

குழந்தை பிறந்த, 15 - 20 நிமிடங்களில், தாயிடமிருந்து நஞ்சுக்கொடி வெளியே வந்து விடும்; வந்தே ஆக வேண்டும். அப்படி வராமல் இருந்தால், தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மரணம் கூட நேரிடலாம். சுகப் பிரசவம் நடந்தும் ஒரு பெண் மரணமடைகிறாள் எனில், அதற்கு நஞ்சுக்கொடி முழுவதும் வெளியே வராமல், கர்ப்பப்பையில் எங்காவது ஒட்டிக் கொண்டிருப்பதும் காரணமாக இருக்கலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement