Advertisement

'ப்ரிஜ்ஜில்' வைத்த உணவு, 'டேஞ்சர்!'

உணவு விஷமாவது குறித்து கூறும், இரைப்பை, குடலியல் சிறப்பு மருத்துவர் ஜீவன்குமார்: நோய்க் கிருமிகள் கலந்த உணவைச் சாப்பிடுவதால், வரும் ஒவ்வாமை தான், 'புட் பாய்சன்' - உணவு விஷமாதல். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தான், உணவை விஷமாக்குகின்றன. வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்றவை, இதன் பொதுவான அறிகுறி; சிலருக்குப் பசியின்மை, களைப்பு, அடிவயிற்றில் வலி, மயக்கம், தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள், ஒரு நாளுக்கு மேல் தொடர்ந்தால், மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

பாதிப்புகளின் தன்மையை பொறுத்து, சில நேரங்களில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். கூடவே, காய்ச்ச லும் இருந்தால், வயிற்றுப்போக்கு நிற்பதற்கான மருந்துகளையும், நோய் எதிர்ப்பு மருந்துகளையும் உட்கொள்ள வேண்டியிருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டானால், உடலில் அதிகளவில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால், சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம். உடலில் சோடியம் அளவு குறைந்திருந்தால், 'குளூக்கோஸ்' செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே, காய்கறிகள், பழங்கள், கீரைகளை, நன்றாகக் கழுவிய பின் பயன்படுத்த வேண்டும். கெட்டுப்போன உணவுகளால் மட்டுமல்ல; சுகாதார மற்ற தண்ணீராலும் பிரச்னை ஏற்படலாம் என்பதால், தண்ணீரில் கவனம் தேவை. சுகாதாரமில்லாத இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில், சமைக்காத உணவுகளான பச்சை காய்கறிகள், தயிர், மில்க் ஷேக் போன்றவற்றை தவிர்க்கலாம். ஏனெனில், குளிர்ந்த உணவுகளில், கிருமிகளின் தாக்கம் அதிகம் உருவாக வாய்ப்பு உண்டு. சூடான உணவுகளே பாதுகாப்பானவை.

சமைப்பவரும், பரிமாறுபவரும், கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன், கை கழுவுவதும், நகங்களைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். உணவுக்கும் ஆயுள் உண்டு என்பதால், சமைத்த உணவு, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், கிருமித்தொற்று காரணமாக, கெட்டுப் போகத் துவங்கும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த உணவுகளை, உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement