Advertisement

உடல் வலி உள்ளோரே... படியுங்கள் இதை!

துாங்கும் முறை குறித்து கூறும், துாக்கவியல் மருத்துவர் ராமகிருஷ்ணன்: முதுகுவலி உள்ளோர், தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுத்து துாங்குவதே சிறந்தது. மல்லாந்து படுத்து, முழங்காலுக்கு அடியில் தலையணையை வைத்துக் கொள்ளலாம் அல்லது உடலில் இயல்பான வளைவைப் பாதுகாக்கும் வகையில், சுருட்டிய துண்டை, முதுகின் அடியில் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு பக்கமாகத் துாங்குபவர்கள், இரு முழங்கால்களுக்கும் நடுவில் தலையணையை வைத்து துாங்கலாம். இடுப்பு, முழங்கால் வலி இருப்பவர்களுக்கு, பிரச்னை சரியாக இது உதவும். சுருண்டு படுப்பது, இடுப்பு முதுகெலும்புப் பகுதியின் வலி குறைக்க உதவும். வயிறு தரையில் படும்படி குப்புறப்படுத்து துாங்குவது, கழுத்துக்கும், முதுகுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், அடிவயிற்றுப் பகுதியில் தலையணையை வைத்து துாங்கினால், பிரச்னையைத் தவிர்க்கலாம்.

ரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டால், குதிகால் வலி ஏற்படலாம். இவர்கள், முழங்கால்களுக்குக் கீழ் தலையணை வைத்து துாங்கலாம். சிலருக்குப் படுத்தவுடன் கால்கள் மரத்துப் போவது போலவோ, வலிப்பது போன்ற உணர்வோ ஏற்படும்; எழுந்து நடந்தால் சரியாகி விடும். இந்த நிலை பெரும்பாலும், சர்க்கரை நோயாளிக்குத் தான் ஏற்படும் என்பதால், உதாசீனப்படுத்த வேண்டாம்.

கழுத்து வலி உள்ளோர், தலையணையை தோள்களுக்கு மேல் வைத்து, சமமான நிலையில் கழுத்து இருக்கும்படி படுக்கலாம் அல்லது சுருட்டிய டவலை கழுத்துக்கடியில் வைத்துக் கொள்ளலாம். துாக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுபவர், குறட்டை விடுவோர், சுவாசத்தை பாதிக்கும் விதமாக தொண்டையிலும், நாக்கிலும் பிரச்னைகள் ஏற்படு வதைத் தவிர்க்க, ஒரு பக்கமாகவோ அல்லது குப்புறப்படுத்தோ துாங்கலாம்.

தோள்பட்டை வலி உள்ளோர், மல்லாந்து படுத்து துாங்கலாம். வலியில்லாத தோள்பட்டை பகுதியை வைத்து படுப்பதாக இருந்தால், ஒரு பெரிய தலையணையை, மார்பு உயரத்துக்கு வைத்து, அதில் கைகளைப் போட்டு, கட்டிப் பிடித்து துாங்கலாம். நெஞ்செரிச்சல் பிரச்னை இருப்போர், இரண்டு, மூன்று தலையணைகளை வைத்து, தலையை உயர்த்தி வைத்துப் படுக்கலாம். தினமும் மாலையில், வெந்நீரில் குளித்து துாங்கச் செல்லலாம். கால்வலி இருப்பவர்கள், துாங்க செல்வதற்கு முன், கால்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement