Advertisement

தத்தெடுக்கப்பட்ட குழந்தையே மூத்த வாரிசு!

வேலுார் மாவட்டம், திருப்பத்துார், பசுமை நகரில் இருக்கும், 'கிராமப்புற மேம்பாட்டு ஊக்கு விப்பு சேவைகளுக்கான சமுதாயம்' என்ற, தத்தெடுப்பு மையத்தின் இயக்குனர், என்.தமிழரசி: மத்திய அரசின், 'மத்திய தத்து வள ஆதார மையம்' நடத்தும், அதிகாரபூர்வமான வலைதளமான, www.cara.nic.in தான், விண்ணப்பிக்க வேண்டும்.

இதில், அகில இந்திய அளவில் பதியப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். பதிவு மூப்பும் தேசிய, மாநில, மாவட்ட அளவில் என, தனித்தனியே வரிசைப்படுத்தப்படும். திருமணமாகி, இரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். வயது, 25க்குள் இருக்கக் கூடாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களை, தத்தெடுக்க முடியாது.

தனி நபர் தத்தெடுப்பதாக இருந்தால், அவருக்கு, 30 - 55 வயதிற்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத மற்றும் தனி நபராக இருக்கும் ஆண்கள், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது. இதற்குரிய ஆவணங்களாக, பான்கார்டு, பாஸ்போர்ட், பிறப்புச் சான்று, மருத்துவச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, சம்பள ரசீது, வருமான வரிச் சான்று கொடுக்க வேண்டும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பெறப்பட்ட ஆளறிச் சான்று, திருமணப் பத்திரிகை மற்றும் தத்தெடுக்கும் தம்பதியரின் போட்டோ, அருகிலுள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் என, அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.பதிவுக் கட்டணமாக, 6,000 ரூபாயும், விசாரணைச் செலவாக, 2,000 ரூபாயும், சட்ட ஆய்வுகள் முடிந்து, குழந்தை தத்து கொடுக்கப்படும் போது, பராமரிப்புச் செலவாக, 40 ஆயிரம் ரூபாயும், செலுத்த வேண்டும்.

பெற்றோரிடம் குறுக்கு விசாரணை செய்து, திருப்தியானால் மட்டுமே, நீதிபதி அனுமதி வழங்குவார்.இரண்டு மாதத்திற்கு பின், பெற்றோர், குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நீதிமன்றம், முழு திருப்தி அடைந்துவிட்டால், குழந்தை பிறந்த தேதி, பெற்றோராக, தத்தெடுப்பவர்களின் பெயரை குறிப்பிட்டு, பிறப்புச் சான்றிதழ் தருவர்.

தத்தெடுத்த தம்பதியினருக்கு, அதன்பின், குழந்தை பிறந்தால் கூட, தத்தெடுக்கப்பட்ட குழந்தை தான், சட்டப்படி மூத்த வாரிசாக இருக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement