Advertisement

எந்த நோயும் நெருங்காத உணவு முறை!

எந்த பருவத்தில், என்ன உணவு சாப்பிடலாம் எனக் கூறும், உணவியல் நிபுணர், தாரிணி கிருஷ்ணன்: நவம்பர், டிசம்பர், ஜனவரி தவிர்த்து மற்ற மாதங்களில், காலையில் பெரும்பாலும் பழைய சாதம் தான், நம் உணவாக இருந்தது; அதுதான் நம் உடலுக்கு நல்லது. சாதத்தில் தண்ணீர் ஊற்றி, ஒருநாள் இரவு முழுவதும் வைத்து இருப்பதால், அதில், நல்ல, 'பாக்டீரியா' உருவாகி விடும். அதை சாப்பிடும் போது, உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து விடும்.

மதிய உணவில், முதலில் பாயசம் அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். அது, உணவு செரிமானத்துக்கு தேவையான அமிலங்களை சுரக்கச் செய்யும். நம் அன்றாட வேலைகளை செய்ய, புரதச் சத்து அவசியம். அதற்காக, காய்கறிகள், சாம்பாருடன் சேர்த்து, சாதம் சாப்பிட வேண்டும். சாம்பாரில் ஏராளமான மருத்துவ குணம் அடங்கிய பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும், துவரம் பருப்பு, புரதச்சத்து நிறைந்தது. மஞ்சள் துாள், கேன்சரை தடுக்கும். மிளகு, மல்லி ஆகியவை, சளி, இருமலை சரி செய்யும்; செரிமான சக்தியை மேம்படுத்தும்.

கறிவேப்பிலையில், இரும்புச்சத்தும், புளியில், இரும்புச்சத்தோடு, நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.சாம்பாருக்கு அடுத்ததாக, செரிமான சக்தியை மேம்படுத்துவது, ரசம். கடைசியாக தயிர், மோருடன் உணவை நிறைவு செய்ய வேண்டும்.வாரத்தில் ஓரிரு நாட்கள் தவிர, மற்ற நாட்களில் உணவில் பருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அசைவ உணவுகள் சாப்பிடுபவர்கள், முட்டை, மீன், கோழிக்கறி போன்ற உணவுகளை, வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை சாப்பிடலாம்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை, மொச்சை போன்ற தானிய வகைகள் அதிகமாக கிடைக்கும். அந்த காலங்களில் தானிய வகைகளை, உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.கோடைக் காலத்தில், பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர் காய்கறிகள் அதிகமாக கிடைக்கும்; அப்போது அவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் போன்ற கலவை உணவுகளை, அடிக்கடி சாப்பிடக் கூடாது. இரவில் இட்லி, தோசை, அடை போன்ற உணவுகளை சாப்பிடலாம். இதுதான் சரியான உணவு முறை. இதைப் பின்பற்றினால், எந்த நோயும் நெருங்காது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    சர்க்கரை நோயாளிகளுக்கு பழைய சாதம் ஏற்றதல்ல.. அதே போல அவர்கள் இட்லி, தோசை தவிர்க்க வேண்டும்..... அதுவும் இட்லி மாவை சர்க்கரை நோயாளி இருக்கும் வீட்டில் ஒரு வாரத்துக்கு குளிர்சாதனத்தில் வைத்து உபயோகிப்பது எமனை விரைவில் வா என்று அழைப்பது போலாகும் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement