Advertisement

'மொத்தமும் அவருக்கு என்கிறாரோ...'

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டிருந்த வைகை அணை நீரை, ராமநாதபுரம் பகுதி ஊரணிகளுக்கு திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மணிகண்டன், 'ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை தொகுதி, எம்.எல்.ஏ.,வான, 'தமாஷ்' நடிகர், கருணாஸ், பரமக்குடி, எம்.எல்.ஏ., டாக்டர் முத்தையா சுத்தமாக செயல்படவே இல்லை. சுருக்கமாக சொன்னால், மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கும் சேர்த்து, நான் ஒருவனே, எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்து, என்னால் முடிந்த உதவிகளை, மக்களுக்கு செய்து வருகிறேன். பொறுப்பில்லாத, எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரத்தில் உள்ளனர்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'மாவட்டத்தில் வசூலாகும் மொத்தமும் தனக்கு மட்டுமே, மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு பங்கே கிடையாது என, நசுக்காக சுட்டிக் காட்டுகிறாரே' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், 'கலகல'வென சிரித்தனர்.
'சீட்' வாங்க என்னமாய், 'ஐஸ்' வைக்கிறாரு!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம், மதுரையில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான, ராஜன் செல்லப்பா, 'அ.தி.மு.க., ஆட்சியை, பலரும் விமர்சனம் செய்கின்றனர். அதை தாங்கிக் கொள்ளும் சக்தி, முதல்வருக்கும், அமைச்சரவைக்கும் உண்டு. இன்று, அ.தி.மு.க.,வின் தாயாக, தந்தையாக இருப்போர், இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும் தான். இவர்கள், தலைமை ஏற்காமல் இருந்திருந்தால், இலைகள் உதிர்ந்து, கட்சி சிதறி காணாமல் போயிருக்கும். ஜெயலலிதாவின் கனவு, கானல் நீராகி போய் இருக்கும்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'இவரோட ஆதரவாளருக்கு, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்ல, 'சீட்' வாங்க, 'ஆஹோ, ஓஹோ...' என, முதல்வரையும், துணை முதல்வரையும் புகழ்றாரு' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
'சும்மா உதார் விட்டால் ஜெயிக்க முடியாது!'
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திற்கு, கூ ட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு வந்தார்.அப்போது, அவரிடம், 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்?' என, நிருபர்கள் கேட்டனர்.அமைச்சர், 'உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு, அஞ்சும் கட்சி, அ.தி.மு.க., அல்ல; தேர்தல்களை கண்டு, ஒரு போதும் அஞ்சாத கட்சி. ஆணித்தரமாக அடித்து சொல்கிறேன்... தேர்தலுக்கு, அ.தி.மு.க., என்றுமே பயப்படாது' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி போன்று, திருப்பரங்குன்றம், திருவாரூர் போன்ற தொகுதிகளையும், தினகரன் போன்ற ஆட்களிடம், 'கோட்டை' விட்டு விடாமல், அமைச்சர் ராஜு போன்றோர், பாடு பட வழியை தேடாமல், சும்மா வாயால் உதார் விடக்கூடாது...' எனக் கூற, மற்ற நிருபர்கள் பலமாக சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement