Advertisement

படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும்!

பருவ வயது காலத்தில், பெண் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு குறித்து கூறும், ஊட்டச் சத்து நிபுணர், கற்பகம் வினோத்: பெண் குழந்தைகளில் பலர், 12 வயதைத் துவங்கும் போதே, பருவம் எய்தி விடுகின்றனர். அதனாலேயே, ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளுக்கு உணவின் மீதான கவனிப்பு, அதிகம் தேவைப்படுகிறது.

குறைந்தபட்சம் தினம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும். உடலின் இரும்புச் சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டை சாப்பிடலாம். இது, பருவ வயது பெண்களுக்கு, மாதவிடாய்க்காலச் சிக்கல்களைத் தீர்க்க உதவும். இல்லையென்றால், ரத்தச் சோகை, உயரம் அதிகரித்தல், எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

சைவப் பிரியர்கள், உடலின் இரும்புச் சத்து தேவைக்கு, பருப்பு வகைகள், நட்ஸ், விதைகளை உட்கொள்ளலாம். பால், சீஸ், தயிர் அவசியம் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் சத்துகள், இதயத்தைப் பாதுகாக்கும்; தசைகளை வலிமையாக்கும். எண்ணெய் நிறைந்த உணவுப் பொருள்களை உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும்.

பருவ வயது காலத்தில், பெண்களுக்கு ஏற்படும் பருமனே, நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமையலாம். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.காலை உணவைத் தவிர்க்கவோ, நேரம் தவறிச் சாப்பிடவோ கூடாது. இத்தகைய பழக்கங்கள், ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படக்கூடும். அத்துடன், ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.

உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, எடையை அதிகரிக்கவும் செய்யலாம். மதிய உணவைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தைகளிடையே நேர ஒழுக்கம் சரியாக இருக்கும். ஆனால், கல்லுாரி மாணவர்கள், நேரம் தவறிச் சாப்பிடுகின்றனர் அல்லது மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்கின்றனர்.

இத்தகைய பழக்கங்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றங்களையும், அது தொடர்பான வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஒரு நாளைக்கான உணவை, சிறிது சிறிதாக, ஆறு முறை சாப்பிடுவது, சீரான அளவு, மூன்று வேளை சாப்பிடுவது என, இரண்டுமே சரியான உணவுப் பழக்கம் தான்.ஒருவேளை சாப்பிடவில்லை என்றாலும், வைட்டமின், கார்போஹைட்ரேட், தாதுச் சத்துகள் போன்ற, உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகக்கூடும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement