Advertisement

குப்பைமேனி இலை சோப்!

ரசாயனம் இல்லாத சோப் தயாரிக்கும், சென்னையைச் சேர்ந்த நந்தினி: ஆசிரியராக இருந்த நான், குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக, வேலையை விட்டேன். பாரம்பரிய மருந்து, அரிசி மீதான ஆர்வத்தால், பாரம்பரிய அரிசி கடை நடத்தினேன்; பொருளாதார குறைபாடால், அதை மூடிவிட்டேன். நரம்பியல் மருத்துவரான என் கணவரிடம் வரும் நோயாளிகள் பலருக்கு, தோல் வியாதியும் சேர்ந்தே இருக்கும். அப்போது தான், ரசாயனம் இல்லாத, இயற்கை சோப்பு தயாரிக்கலாம் என்ற யோசனை வந்தது.

நான் தயாரித்த சோப்பை பயன்படுத்திய அவர்களுக்கு, தோல் பிரச்னையும் சரியானது. இதைத் தொடர்ந்து, என் கணவரும், என்னை ஊக்கப்படுத்தினார். சோப் தயாரிக்க தேவையான முக்கிய மூலப்பொருள், என்.ஓ.எச்., எனப்படும், 'சோடியம் நைட்ராக்சைடு' ரசாயனம். இது, தேங்காய் எண்ணெய், நல்ணெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் உள்ளிட்டவற்றில் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி சோப் செய்யலாம்.

தவிர, குப்பைமேனி இலையை எண்ணெயில் ஊற வைத்து, சோப் செய்யலாம். நான் தயாரித்த சோப்களில் பெரிதும் பலன் தந்த சோப், குப்பைமேனி இலை சோப் தான்! அதே மாதிரி கோரைக்கிழங்கு பவுடர், சந்தனத்துாள், அதிமதுரத் துாள், ஆட்டுப்பால், பால் பவுடரிலும் சோப் தயாரிக்கலாம்.

இயற்கை முறையில் சோப் மட்டு மின்றி, கொட்டாங்குச்சி அல்லது காய்ந்த மூங்கில் தண்டை எரித்துக் கிடைக்கும் கரியை பயன்படுத்தி, கண் மை செய்கிறேன். கொத்தவரங்காய் மற்றும் கிழங்கு பவுடர், ஜாதிமல்லி, சீத்தாப் பழத்தின் துாள், வெட்டிவேர் கொண்டு ஷாம்புவும் தயாரிக்கிறேன்.

குங்குமப்பூ, கற்றாழை ஜெல் பயன்படுத்தி, சருமத்துக்கான க்ரீம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களில் இருக்கும் மெழுகை பயன்படுத்தி, இயற்கை லிப்ஸ்டிக் மற்றும் ஹேர்டை தயாரிக்கிறேன். இயற்கை சோப் தயாரிக்க நினைக்கும், கஷ்டப்படும் பெண்களுக்கு, இலவசமாக சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கு சிறுதொழிலையும் ஏற்படுத்தி தருகிறேன். இந்தத் தொழிலுக்காக அரசு உதவியையும் வாங்கிக் கொடுக்கிறேன்.

தொடர்புக்கு: 9840490961.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement