Advertisement

கலெக்டர் கந்தசாமி அண்ணன்...

அது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


அது ஒரு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஏழை எளிய மக்கள் கையில் மனுவும் கண்ணில் கண்ணீரும் மனதில் வேதனையையும் சுமந்து கொண்டு மெள்ள மெள்ள நகர்கின்றனர்.

எப்படியும் அதிகாரியை பார்த்துவிடுவோம் அவர் மூலமாக நமது கோரிக்கை தீரும் என்ற கடைசி நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் முறைக்காக காத்திருக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வரிசையில் நிற்பவர்களை ஏறடுத்து பார்க்கிறார் அவர்களில் ஒரு சிறிய வயது பெண்ணின் ஏழ்மைக் கோலமும் கண்களில் குடிகொண்டிருந்த சோகமும் இவரது மனதை நெருடுகிறது.

அருகே வரச்சொல்லி என்ன தாயி உன் பிரச்னை என விசாரிக்கிறார்?

ஆனந்தி என்ற அந்தப் பெண் கனத்த விம்மலுடன் தன் கதையை விவரி்க்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனி கிலுப்பை என்பதுதான் அவரது சொந்த ஊர்.

தந்தை வெங்கடேசன் கூலி தொழிலாளி தாய் அனிதா சத்துணவு அமைப்பாளர் ஒரு தங்கை அமுதா ஒரு தம்பி மோகன் பாட்டி ராணி

கூலித்தொழிலாளியான தந்தை வெங்கடேசன் இறந்து போன நிலையில் தாய் அனிதாதான் சத்துணவு அமைப்பாளராக இருந்து குடும்பத்தை நடத்திவந்தார், இந்த நிலையில் திடீரென தாய் அமுதாவும் இறந்து போனார்,நடமாட முடியாத பாட்டியும் சிறிது நாளில் இறந்து போனார்.

இப்படி குடும்பத் தலைவர்கள் அடுத்தடுத்து இறந்து போன நிலையில் ஒரே நாளில் குழந்தைகள் மூன்று பேரும் ஆதரிப்பாரின்றி தனித்துப் போயினர், ஒரு வாய் சாப்பிட்டியா? என்று கேட்கக்கூடி ஆள் இல்லாமல் தவித்துப் போயினர்.

எவ்வளவு நாள்தான் அழுவது, பசிக்கிற வாயிறுக்கு கண்ணீர் உணவாகாதே?

பிளஸ் டூ முடித்த 19 வயது ஆனந்தியும் 17 வயதான அமுதாவும் விவசாய கூலி வேலைக்கு சென்றனர் அதில் வரும் சொற்ப வருமானத்தில் பசியாறவும் தம்பியை படிக்கவும் வைத்தனர் ஆனாலும் வருமானம் போதாததால் குழந்தைகள் மூவரும் பட்டினிக்கு பழக்கப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில்தான் தன் தாய் பார்த்த சத்துணவு அமைப்பாளர் வேலையை தனக்கு கொடுத்தால் தங்கை தம்பியுடன் கவுரமாக பிழைத்துக் கொள்வோம் என எழுதிய மனுவுடன் ஆனந்தி ஆட்சியரை பார்க்க வந்திருந்தார்.

அரசாங்க விதிப்படி 21 வயது ஆனால்தான் சத்துணவு அமைப்பாளர் வேலை தரமுடியும் என்ற நிலையில் மனுவை வாங்கி வைத்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஆனந்தியை நம்பிக்கையுடன் போம்மா நல்லது நடக்கும் என்று சொல்லி அனுப்பினார்.

இது நடந்து சில நாளாயிற்று

திடீரென ஒரு நாள் ஆனந்தியின் வீட்டு வாசலில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கார் வந்து நிற்கிறது காரில் இருந்து இறங்கிய ஆட்சியர் கந்தசாமி கையோடு கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை மூன்று பேருக்கும் கொடுக்கிறார் பிறகு வீட்டில் என்ன இருக்கு? பழைய கஞ்சியா? பராவாயில்லை வாங்க ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லி குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.

பின்னர் ஆட்சியர் கந்தசாமி தமிழக அரசு முத்திரையிட்ட ஒரு பேப்பரை ஆனந்தியின் கையில் கொடுக்கிறார் ‛படித்துப்பாரும்மா' என்கிறார்.

நடுங்கும் விரல்களுடன் பேப்பரில் உள்ள வாசகத்தை ஆனந்தி படிக்கிறார் படித்து முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர் பொங்க பெருங்குரலெடுத்து அழுது ஆட்சியரின் காலில் விழுந்து வணங்குகிறார்

ஆனந்தியின் தாய் அனிதா பார்த்த சத்துணவு அமைப்பாளர் வேலையை ஆனந்திக்கு கொடுப்பதற்கான அரசாங்க உத்திரவுதான் அந்த முத்திரைதாளில் இருந்தது.

எப்படி நடந்தது இது

ஆனந்தி மனு கொடுத்துவிட்டு போன பிறகு ஆட்சியர் கந்தசாமி சிறப்பு அனுமதியின் பேரிலும் சட்டத்தின் படியும் ஆனந்திக்கு அவர் கேட்ட சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைக்க எடுத்துக் கொண்ட தாயுள்ள முயற்சியின் பலன்தான் அது.

இதற்கு பிறகும் தொடர்கிறது ஆட்சியரின் கனிவு

சத்துணவு அமைப்பாளர் வேலை பார்த்துக் கொண்டே தொலை துாரக்கல்வியில் பட்டப்படிப்பு படிப்பதற்கான அனுமதியும் அதற்கான முழுக்கட்டணத்தையும் தான் ஏற்றுக்கொண்டதாக சொல்லி அதற்கான ஆவணங்களை கொடுக்கிறார்.

அடுத்த ஆனந்தியின் தங்கை ரெகுலர் மாணவியாக எவ்வித கட்டணமும் இல்லாமல் கல்லுாரி படிப்பை தொடர உண்டான சான்றுகளை வழங்குகிறார்.

கடைசியாக தன் வாகனத்தின் பின் இருந்து இறக்கிய புத்தும் புது சைக்கிளை ஆனந்தியின் தம்பி மோகனுக்கு பரிசாக கொடுத்து பள்ளிக்கு நடந்து போகவேண்டாம் சைக்கிளில் போய் வா எனச் சொல்லி வாழ்த்துகிறார்.

நாம்தான் கடைசியாக என்று சொல்லிவிட்டோம் ஆனால் கலெக்டர் கந்தசாமி அங்கு இருந்து கிளம்புகையில் இது கடைசி இல்லை ஆரம்பம்தான் அவ்வப்போது வருவேன் ‛ஒரு அண்ணனாக' என்று சொல்லிக்கிளம்புகிறார்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Ramakrishnan.R - Chennai,இந்தியா

    My heart felt wishes to Mr.Kandasamy I.A.S. District Collector of Thiruvannamalai District.

  • Johnsekar - chennai,இந்தியா

    நல்ல விஷயம் .எல்லா கலெக்டரும் இப்படி இருந்தால் நாடு நன்றாக இருக்கும் .. வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement