Advertisement

காத்திருக்கும் கரியே வைரம்!

இந்த உலகில் வாழும் அனைவருமே ஏதேனும் ஒன்றிற்காகவோ, ஏதோ ஒருவருக்காகவோ காத்திருந்து கொண்டு தான் இருக்கிறோம். தாயின் பத்து மாத காத்திருத்தல், மாணவப் பருவத்தினரின் தேர்வு முடிவிற்கான காத்திருத்தல், அன்றாட வாழ்வில் பேருந்திற்காக காத்திருக்கும் மக்கள், காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் காதலன், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், அயல் நாட்டில் வேலை செய்யும் கணவனின் வருகைக்காக காத்திருக்கும் மனைவி என காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

இதைத் தான் நாலடியார்அடக்கம் உடையாரை அறிவிலர் என்று எண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா.. மடைத்தலையில்ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்வாடி இருக்குமாம் கொக்கு'என்று கூறுகிறது. தனக்கான மீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போலவே பொறுமையாய் காத்திருப்பவரையும் அறிவிலாதவர் என்று எண்ணிக் கருதி விட வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார் ஔவைப் பாட்டி. வள்ளுவமும் கூடகாலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்'என்று கூறுகிறது.தக்க காலத்திற்காக காத்திருப்பவரே வாழ்வில் வெற்றி பெற இயலும் என்பதே காத்திருத்தலின் சிறப்பு. காத்திருக்கும் கரியே வைரம் ஆகிறது.

காத்திருத்தலின் சிறப்பு :
எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு செய்யக் கூடாது. பதறாத காரியம் சிதறாதுஇப்படியெல்லாம் பெரியோர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். காத்திருத்தலின் மற்றுமொரு வார்த்தைகள் தான் அவை.மற்ற மரங்கள் எல்லாம் வேகமாக வளர்வதைக் கண்ட மூங்கில் மரங்கள் கடவுளிடம் சென்று கேட்டதாம். நாங்கள் எப்போது தான் வெளியே வருவது என்று. அதற்கு கடவுள் சொன்னாராம்; 4ஆண்டுகள் உள்ளே தவமிருங்கள்.வெளியே வரும் போது உங்களைப் புல் இனமென்று நினைத்தவர்கள் வியக்குமளவு பிரம்மாண்ட உயரத்தை அடைவீர்கள் என்றாராம். நாமும் கூட புல்லாங்குழலாக மாறக் காத்திருந்தால் அழகிய இசையாகலாம்.

சிலையாகும் வரை அடி தாங்கும் கற்கள் போல காத்திருக்கலாம். படிக் கற்களாவதும்,சிலையாவதற்கும் உள்ள சில மணி நேர காத்திருப்புகளே,சிலையாக வணங்கப்படுவதும்,படியாக மிதிக்கப் படுவதுமானதாகும்.விதைத்தவுடன் அறுவடை செய்ய முடியாது.நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் காத்திருப்புகளால் ஆனது தான். இவை வெற்றிக்கான காத்திருப்புகளாக இருக்கலாம்.காத்திருப்பின் இறுதியில் தோல்வியாக இருந்தாலும் பரவாயில்லை. அதை அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.தென்றலுக்காக காத்திருக்கும் போது புயல் வந்தாலும் கலங்காமல் பயணிக்கலாம்.

சிறு சிறு சலனங்களாலும், ஏமாற்றங்களாலும் உந்தப் பட்டு காத்திருப்பைத் தவிர்த்தால் இலக்குகளை அடைய முடியாது.

இலவு காத்த கிளி :
சிக்னலில் சில நிமிட காத்திருப்பை விரும்புவதில்லை பலரும். சாலை பயணங்களில் பலரை முந்திச் செல்ல நினைத்து வாழ்க்கையில் முந்திக் கொள்கின்றனர்.காதலிக்கும் போது பல மணி நேரங்கள் காத்திருக்கும் காதலனோ, கணவனாக மாறும் போது காத்திருக்கத் தயாராய் இல்லை. நம் சுய விருப்பங்களே இந்த காத்திருப்பை நிர்ணயிக்கின்றன. நமக்கு பிடித்த காரியங்களுக்காக காத்திருக்கின்றோம்.

இலவு காத்த கிளி கதை தெரியுமா உங்களுக்கு? காட்டில் உள்ள மரத்தில் பழங்களையும், கொட்டைகளையும் தின்று வளர்ந்த கிளிகள், மரங்கள் எல்லாம் பட்டுப் போன பின் உணவுக்காக வேறு இடத்தை நோக்கி சென்றுவிட ஒரு கிளி மட்டும் அங்குள்ள இலவ மரத்தைக் கண்டதும்“ஆகா! எவ்வளவு காய்கள் இந்த மரத்தில் இருக்கின்றன.

இவை பழுத்தால் நமக்கு பல மாதங்களுக்கு உணவாகும்” என்று எண்ணியது. அந்த மரத்திலேயே கிளி தங்கியது. இலவங்காய்கள் எப்போது பழுக்கும், எப்போது நமக்கு வயிறு நிறையும் என்ற ஏக்கத்துடன் கிளி காத்திருந்தது.ஆனால் காலந்தான் கடந்தது. காய்கள் பழுக்கவில்லை. மாறாக இலவ மரத்தின் காய்கள் காய்ந்து உடைந்து பஞ்சாக பறந்தது. இதைப் பார்த்த கிளி ஏக்கத்துடன் உயிரை விட்டது. நடக்காத ஒன்றிற்காக காத்திருத்தல் என்பது கூட இப்படித் தான் நமது காலத்தை விரயமாக்கி விடும். சில விஷயங்கள் கிடைக்காது என்று தெரிந்த பிறகு சீ..சீ.. இந்த பழம் புளிக்கும் என்று விலகிச் செல்லும் நரி போல அதனை விட்டு விடுதலையாகி விட வேண்டும். அமாவாசை அன்று நிலாவிற்காக காத்திருத்தல் என்பது இயலாத காரியம் தானே.

நிச்சயமற்ற காத்திருத்தல் :
நிச்சயமற்ற காத்திருத்தலிற்காக மனதை செலுத்தி ஏமாற்றமடைவதை விட சரியான இலக்குகளுக்கான காத்திருத்தலே வெற்றியைத் தருவதோடு மகிழ்வையும் தரும்.

அது போல காத்திருத்தலை விரும்பாத மனிதர்களும் இருக்கிறார்கள். திரையரங்குகளில் வரிசையில் காத்திருக்காதவர்களாலே தானே அதிக விலை டிக்கெட் முறை கேடாக விற்பனை நடக்கிறது. மருத்துவர் குறித்த நாள் வரை காத்திருக்காமல், நல்ல நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற நினைக்கும் பெற்றோர், இப்படி காத்திருப்புகளை தனக்கான வசதிக்காக மாற்றிக் கொள்ளும் மனிதர்கள் வாழ்க்கைப் பாதையில் இருந்து சற்றே மாறிச் செல்கின்றனர். காத்திருத்தல் என்பது ஒரு ஒழுக்கம். அதனை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். தன் முறை வரும் வரை காத்திருத்தல் என்பது சுய ஒழுக்கம். காத்திருத்தல் என்பது தவம். காத்திருத்தல் என்பதுஇலக்குகளை அடையும் பாதை.

காத்திருத்தல் என்பது பயனுள்ளதாகவும், குறிக்கோளை நோக்கியதாகவும் இருப்பதே சிறப்பு. வாய்ப்புகள் தரும் தருணங்களுக்காக காத்திருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயி போல, வண்ணத்துப்பூச்சியாய் மாறக் காத்திருக்கும் கூட்டுப் புழு போல, நம்பிக்கையை உறுதியாக ஊன்றி விட்டு வெற்றிக்காக காத்திருங்கள். நினைத்தது கை கூடும் வரை காத்திருப்போம். சவால்கள் நிறைந்த உலகில் ஜெயிக்க புதிய முயற்சிகளும்,வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. விடியலுக்காக காத்திருக்கும் சூரியனாய், மாலை நேரத்திற்காக காத்திருக்கும் நிலவாய் காத்திருப்போம்.

ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொ.பள்ளிக.மடத்துப்பட்டிbharathisanthiya10@gmail.com
வாசகர் பார்வை:
நலத்திட்டம்நாட்டு நலப்பணித்திட்டம் கற்று தரும் சிந்தனைகளை விளக்கியது 'நாடு போற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்' கட்டுரை.- கண.கணேசன், திருச்சுழி.
சமூக பணிஇளம் வயதில் சமூக பணிகளில் ஈடுபட வேண்டும் என இளைஞர்களுக்கு வழிகாட்டிய 'நாடு போற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்' அருமை.- ரா.சத்தியசீலன், மதுரை.
வாழ்க்கை கல்விமாணவர்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தரும் வாழ்வியல் திட்டம் 'நாடு போற்றும் நாட்டுநலப்பணி திட்டம்' என்பதை உணர்ந்தேன்.- பி.வீரமோகன், மானாமதுரை.
வல்லமை வழிவாழ்வில் நாம் உயர்ந்திட தினமும் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது 'வழி நடத்தும் வல்லமை வேண்டும்' கட்டுரை.- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
சமூக சேவைமாணவர்ளுக்கு சமூக சேவை குறித்து தெளிவாக புரிய வைத்த 'நாடு போற்றும் நாட்டுநலப்பணித்திட்டம்' கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.- கே.திவ்யதர்ஷினி பிரியா, தேனி.
தலைமை பண்புதலைமை பண்பில் இருந்து பிறருக்கு வழிகாட்டும் வழிமுறைகளை கூறிய 'வலி நடத்தும் வல்லமை வேண்டும்' கட்டுரைக்கு பாராட்டுக்கள்.- கே.ஷிவானி, ராமேஸ்ரவம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement