Advertisement

வாழும் இடமெல்லாம் வனம்

மேற்கு தொடர்ச்சி மலைஎங்கும் பெய்யும் மழையை, அங்குள்ள சோலை காடுகள் 'ஸ்பான்ஜ்' போன்று பிடித்து வைத்துக் கொள்கிறது. இந்த மாதிரி காடுகளில் இருந்துதான் தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற நதிகள் நீரோடி சமதளங்களில் பாய்ந்து விவசாயத்தையும், பல்லுயிர்களுக்கும் நீர் ஆதாரமாகவும் விளங்குகின்றன. 'நீரின்றி அமையாது உலகு' என்பதில், இந்த நீருக்கு ஊற்றுக்கண் காடுகளே.அதிலும் இளமை மாறா, பசுமை மாறா சோலை காடுகளே தண்ணீருக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இயற்கை நமக்கு அளித்த கொடைதான் காடுகள். காடுகள் விலை மதிப்பிட முடியாத சொத்து. பூமியில் மனிதன் உள்பட பல உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக காடுகள் இருந்து வருகின்றன.நாம் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறோம். அதை மரங்கள் சுவாசித்து அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஆக்ஸிஜன் இலவசமாக கிடைப்பதால் அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. 'மனிதன் இல்லாமல் மரங்களால் வாழ முடியும். மரங்கள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது'.

இணையில்லா சக்திஇந்த உலகில் ஈடு, இணையில்லாத சக்தி இயற்கை மட்டுமே, நமக்கு பூவாக, காயாக, கனியாக, கிழங்காக, கூரையாக, விறகாக, பல வகையிலும் அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் அதன் அருமை தெரியாமல் இயற்கைக்கு எதிராக நாம் செயல்படும்போது, ஆழிப்பேரலைகள், நிலநடுக்கம், எரிமலை, பூகம்பம் என அழிவை சந்திக்க வேண்டியுள்ளது.இயற்கை பற்றிய நுட்பமானப் பதிவுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட இலக்கியங்களில் நிறைந்திருப்பது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு. உயிர் சூழலுக்கு ஏற்ப நிலங்களை வகைப்படுத்தும் அறிவியலுக்கு முன்னோடியாக திகழ்கிறது. தொல்காப்பியத்தின் திணைக்கோட்பாடு, ஓரறிவு மரத்தில் இருந்து ஆறறிவு மனிதன் வரை வகைப்படுத்தியதை நவீன அறிவியல் வியந்து நோக்குகிறது.
''ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்திங்கள் போற்றுதும்... திங்கள் போற்றுதும்மாமழை போற்றுதும்...மாமழை போற்றுதும்' என இயற்கை வாழ்த்து சொன்னது... சிலப்பதிகாரம்.நுாறு பூக்களை வகைப்படுத்தும் குறிஞ்சிப்பாட்டு, தலை சிறந்த தாவரவியல் பதிவாகும். நம் முன்னோர்கள் இயற்கையை போற்றினர். பாதுகாத்தனர். அதைச் சார்ந்தே வாழ்ந்தனர். இயற்கையை இம்சிக்காமல் அதோடு இயைந்து வாழ்ந்த போது தமிழகம் தழைத்திருந்தது. மாதம் மும்மாரி மழை பெய்தது. நாடு செழித்தது. குற்றால குறவஞ்சி போன்ற நமது இலக்கியங்களில் விவரிக்கப்படும் இயற்கை பதிவுகளுக்கு அத்தகைய செழுமையான வளங்களே காரணம்.

தனியார் காடுகள் வளர்ப்புமனிதனின் பேராசையால் வளங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் இயற்கை வளங்களை, காடுகளை காப்பது நமது தலையாய கடமையாகும். தேசிய வனக் கொள்கையின்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பசுமை போர்வையின் பரப்பு 21.76 சதவீதம்தான் உள்ளது. இதை அதிகரிக்க ஏற்கனவே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை (ரிசர்வ் பாரஸ்ட்) நீட்ட முடியாது. இதற்கு ஒரே வழி தனியார் நிலங்களில் காடு வளர்ப்பதுதான். இது சமுதாய கடமை. வனக்கொள்கையை நிறைவேற்ற வாருங்கள் என்று விவசாயிகளிடம் சொன்னால் யாரும் மரம் வளர்க்க முன் வருவதில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்களை பொறுத்தவரை பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.எனவே இந்த மரத்தை வளர்த்தால் இவ்வளவு பணம் வரும் எனச் சொன்னால்தான் மரம் வளர்க்க முன் வருவார்கள். குறுகிய கால மரப்பயிர்களான சவுக்கு, தைலமரம், பெருமரம் (பீநாரி), மலை வேம்பு போன்றவை 5 முதல் 6 ஆண்டுகளில் அறுவடைக்கு வந்து விடும். மலைவேம்பு தற்போது ஒரு டன் ரூ.8 ஆயிரம் விலை போகிறது. பிளைவுட் கம்பெனிகள், டி.என்,பி.எல்., போன்றவை நல்ல விலை கொடுத்து வாங்கி கொள்கின்றனர்.தேக்கு, குமிழ், வேங்கை, வாகை, சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி போன்றவை நீண்ட கால மரப்பயிர்கள். 12 முதல் 20 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். மரப்பயிரும் பணப்பயிரே.

ஒரு மரம் ஒரு லட்சம் ரூபாய்செஞ்சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தை பொறுத்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் 150 மரங்கள் நடவு செய்து, அதில் 100 மரங்கள் மட்டும் நன்றாக விளைகின்றன என வைத்துக் கொண்டாலே ஒரு மரம் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் என விற்றாலே ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். 2010ல் திருப்பத்துார் அரசு சந்தனக்கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி கிரேடு' செஞ்சந்தனமரம் ரூ.655 லட்சத்துக்கு விலை போனது.தற்போது நாம் உடனடியாக செய்ய வேண்டியது மரம் வளர்ப்புதான். அதிகரித்து வரும் புவி வெப்பம், மறைந்து வரும் மழை ஆகிய பாதிப்புகளில் இருந்து ஓரளவுக்காவது நம்மை காத்துக் கொள்ள உதவுவது மரங்கள்தான். பூமித்தாயின் மார்பகங்களில் முகம் புதைத்துப் புனித நீரைச் சுவைக்கும் வாயாக வேர்கள், வான்மழையின் கருணைக்காக கையேந்தி நிற்கும் கைகளாக அழகிய கிளைகள், சூல்கொண்ட மேகங்கள் கால் கொண்டு பூமிக்கு நடந்து வரும், படிகளாக பச்சை மரங்கள், விண்ணையும் மண்ணையும் இணைக்கின்ற இணைப்பு பாலங்களாக, சத்தமில்லாத சமூக சேவகர்களாக, பல உருவங்களில் பூமியை தாலாட்டிக் கொண்டிருக்கின்றன.வெட்டி அழிக்க வருபவர்களையும், அரவணைத்து நிழல் தந்து, கனிதந்து காப்பாற்றும் அற்புதமான உயிரினம் மரம். மனிதனுக்கு உணவு, பல்வேறு உயிரினங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் தாவரங்கள், மனித இனத்துக்கு இயற்கை அளித்த அருட் கொடை.

மரம் வளர்ப்போம்பிள்ளைகள் பெற்றோர்களை தவிக்க விட்டு வெளிநாடு செல்லும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டில் அதிகமாகி வரும் முதியோர் இல்லங்களே அதற்கு சாட்சி. ஆனால் நீங்கள் நட்டு வைக்கும் மரங்கள் உங்களை என்றைக்கும் கைவிடாது. காப்பாற்றும். 'இதைத்தான் பெத்த பிள்ளை கைவிட்டாலும், வச்ச பிள்ளை கைவிடாது' என்ற பழமொழி உரைக்கிறது.மரங்களை பற்றி அறிவை அதன் அருமையை, தேவையை முதலில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். குறைந்த பட்சம் ஒவ்வொரு குழந்தையும் 2 மரக்கன்றுகளை நடவு செய்ய வைத்து, அந்த குழந்தையின் கையால் நீரூற்றி வளர்க்க செய்யுங்கள். அதன் அழகை ரசிக்க கற்றுக் கொடுங்கள். பள்ளி, கல்லுாரிகளில் ஒவ்வொரு மாணவனும் 5 மரக்கன்றுகளை வளர்க்க சொல்லி அதற்கு மதிப்பெண் கொடுங்கள்.நகரங்களில் குடியிருப்பவர்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் இடம் இல்லையே என்று கவலைப்படாமல் பொது இடங்களில் அருகிலுள்ள பள்ளிகளில், சாலையோரங்களில், கண்மாய் கரையோரங்களில் நடவு செய்து பராமரியுங்கள்.இப்போது வேப்பம்பழம் சீசன், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேம்பு விதைகளை சேகரித்து ஆங்காங்கு தரிசு நிலங்களில் துாவுங்கள். பனங்கொட்டைகளை சேகரித்து, கண்மாய் கரையோரங்களில் நடவு செய்யுங்கள். வாய்ப்பிருக்கும் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மரம் வளருங்கள். உணவு உற்பத்தி செய்பவர்கள் வரப்புகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் உங்கள் தோட்டத்தை சுற்றிலும் மரம் வளருங்கள். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், வீடுகளில் மரம் வளருங்கள்.மழைக் காலம்தான் மரங்கள் நடவுக்கு சரியான நேரமாகும். வீடுகள், வீதிகள், சாலைகள், வெற்றிடங்கள் எல்லாம் மரக்கன்றுகளால் நிறையட்டும். பாரெல்லாம் பசுமை படரட்டும். வீடெல்லாம் மகிழ்ச்சி நிரம்பட்டும்... வாழ்க மரம், மகிழ்க மனம்.- ரா.ராஜசேகரன்முன்னாள் உதவி வனப்பாதுகாவலர்,திண்டுக்கல். 94424 05981

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • abdul rajak - trichy,இந்தியா

  உயிரினங்களை பயன் பெரும் வகையில் கனி வர்க்க மரங்களே நல்லது . பணமும் கிடைக்கும் . புண்ணியமும் கிடைக்கும் .

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  தேக்கு மற்றும் சந்தன மரங்களை நட்டு வளர்ப்பது சுலபம் ஆனால் மரம் பெரிதானவுடன் அதை பாதுகாப்பது கடினம் ... எந்த நேரத்திலும் அது திருட்டுத்தனமாக வெட்டப்படலாம் ... அதனால் வேம்பு மற்றும் கனி தரும் மரங்களை வளர்க்கலாம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வீட்டில் ஒரு மரம் வளர்த்தால்... பறவைகள் அங்கே தங்கும்... நீங்கள் அனைவரும் விடும் கார்பன்டை ஆக்ஸைடை கிரகிக்கும்... உயிர் காற்றாகிய ஆக்சிஜனை வெளியே விடும்... . சுத்தமான காற்றை தரும்... மழை வர காரணம் ஆகும்... பசும்தால் உரம் கிடைக்கும்... மரங்கள் காய்கனிகள் தரும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு மரம் வளர்த்தால் ஓராயிரம் உயிர்கள் உடன் வாழும்

 • nicolethomson - bengalooru,இந்தியா

  செஞ்சந்தன மரத்தை வளர்த்து வந்தால் கேரளத்தின் அதனை திருடி சீனாவிற்கு விற்பதற்காக கொலையும் செய்ய தயங்க மாட்டார்களே எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement