Advertisement

சொல்கிறார்கள்

கூழாங்கல்லை உடலில் தேய்த்து சுத்தப்படுத்துவதா!



சுத்தத்தை வலியுறுத்தி, ஊர் ஊராக விழிப்புணர்வூட்டும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீலாவதி: திருச்சியில் உள்ள கல்லுாரியில், பி.ஏ., படித்துக் கொண்டிருந்தபோது, என்.எஸ்.எஸ்., 'கேம்ப்'புகாக, கரூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மலை கிராமங்களான கடவூர், தோகைமலை, பாலவிடுதி உள்ளிட்டவற்றுக்கு சென்றேன்.

அப்போது அங்குள்ள பெண்கள், மாதவிடாய் சம யத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்தனர். சுத்தம் என்றால் என்ன என, எங்களிடம் கேட்காத குறை தான். 'பணக்காரர்கள் தான் சோப்பு போட்டு குளிப்பர்; நாங்கள் கூழாங்கல்லை உடம்பில் தேய்த்து அழுக்கை போக்கிக் கொள்வோம்' என, அந்த மக்கள் சொன்னது, மிகவும் வேதனையாக இருந்தது.

கல்லுாரி படிப்பு முடித்து, எனக்கு திருமணமானதும், என் கணவரிடம், கிராம மக்களின் நிலையை சொன்னேன். 'அவர்களுக்கு என்னால் முடிந்தவரை சுத்தத்தைப் பற்றி வலியுறுத்த விருப்பம். அவர்களுக்கு தேவையான சோப்பையும், டவலையும் நீங்கள் வாங்கித் தர முடியுமா?' என்றேன். அவரும் பச்சைக்கொடி காட்டினார்.

கடந்த, 10 ஆண்டுகளாக, கிராமம் கிராமமாக பள்ளிகளுக்கு சென்று வருகிறேன். அங்குள்ள மாணவர்களுக்கு சுத்தத்தை பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். சிறுநீர் கழித்ததும், அந்த இடத்தை எப்படி சுத்தமாக்க வேண்டும் என்று நான் சொல்ல ஆரம்பித்ததும், மாணவர்கள் முதலில் சிரிப்பர்.

'சுத்தமில்லாமல் இருந்தால் என்னென்ன நோய் வரும்; சுத்தத்தை கடைப்பிடித்தால் நாம் ஆரோக்கியமாக வாழ்ந்து, 100 வயதையும் தாண்டலாம்' என, பொறுமையாக எடுத்துச் சொன்னதும், 'மேடம், இனிமே கை கழுவாம நான் சாப்பிட மாட்டேன்' என, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.

கரூர் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு சென்று, சுத்தம் பற்றி பேசி இருக்கிறேன். கரூரைத் தாண்டியும் விழிப்புணர்வை விரிவாக்கலாம் என்று நினைத்தேன். என்னுடன், தோழியர் ஐந்து பேர் சேர்ந்து கொள்ள, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார் வழியாக, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் என, கிட்டத்தட்ட, 900 கி.மீ., துாரம் வரை, ஒரு வாரம், கிராமம் கிராமமாக பயணித்தோம்.

அந்த கிராம மக்களுக்கு, சுத்தத்தைப் பற்றி மட்டுமல்ல, பெண்கள் உடல்நலன், மார்பக புற்றுநோய், மாதவிடாய் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றியும் விழிப்புணர்வு ஊட்டினோம். பள்ளிகளில் மட்டுமல்ல, ஏதாவது ஒரு பொது இடத்தில், சுத்தத்தைப் பற்றி ஒரு மணி நேரமாவது பேசுவதும், என் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Gopi - Chennai,இந்தியா

    நல்லவிஷயம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement