Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'துடிப்பான தேசம் வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், நாட்டை வழிநடத்த அனுபவம் தேவை என்ற கோணத்தில் சற்று யோசியுங்களேன்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் பார்த்திபன் பேட்டி: இளைஞர்கள் கையில் தான், அரசியல் இருக்க வேண்டும். 60, 70 வயதிற்கு மேல், மூச்சு வாங்கி உட்கார்ந்து இருப்பது, அரசியல் இல்லை. உங்கள் சுவாசத்தையே சீராக வைத்திருக்க முடியாத போது, அரசியலை எப்படி சீராக நடத்த முடியும்? இளைஞர்கள் கையில் நாடு வரும்போது தான், துடிப்பான தேசமாக மாற்ற முடியும். பதவி என்பது, மக்களுக்கு சேவையாற்ற கொடுத்த பொறுப்பு என்பதை, அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

'நம்பலாமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜு பேட்டி: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான், ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு மூடி உள்ளது. இந்த முடிவில், அரசு உறுதியாக உள்ளது. அங்கு வேலை பார்த்தவர்களுக்கு, மாற்றுப்பணி வழங்குவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், தனி இணையதள சேவை துவங்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஆலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, ஆலை சார்பில் செய்யப்பட்டதை விட, தரமான அடிப்படை வசதிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும்.

பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி: சென்னையில் நடந்த கூட்டத்தில், பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியதில், ஒரு வார்த்தைக் கூட மாற்றம் இல்லாமல் மொழிபெயர்த்தேன். அதில், தவறு ஏதும் இல்லை. தவறு இருப்பதாகக் கூறினால், அதற்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இது குறித்து, சமூக வலைதளங்களில் தவறான, 'மீம்ஸ்'களை பரப்புகின்றனர். அதற்கு, தி.மு.க., பண உதவி செய்கிறது. அழுகிய மூளை கொண்டவர்களுக்கு, நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தன் ஆசையை வெளிப்படுத்தும் வகையில், பேட்டி: ரஜினியின் ஆன்மிகம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசியல் தான், தமிழகத்தில் ஊழல் கட்சிகளை, முடிவுக்கு கொண்டு வரும். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, ரஜினி தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கட்சி துவங்கி, ரஜினி முதல்வராவது உறுதி.

தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு: புத்தகங்களை படிக்கப் படிக்க, மாணவர்களின் அறிவுத் திறனோடு, நற்சிந்தனைகளும் உயரும். எனவே, மாணவர் அனைவரும், எண்ணற்ற புத்தகங்களை படிக்க வேண்டும். தமிழக அரசு, கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும், வாரம் ஒருமுறை வாசிக்கும் பழக்கத்தை வகுப்புகளில் செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement