Advertisement

டீ கடை பெஞ்ச்

ஸ்டாலின் டிரைவருக்கு திடீர், 'கல்தா' ஏன்?



''தினகரன் கூட்டத்துல, நிறைய பேர் மொபைல் போனை பறிகொடுத்துட்டாங்க...'' என்றபடியே வந்தார் அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிரா, தினகரன், ஊர் ஊரா போய் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட்டு இருக்காரே... சமீபத்துல, திருவண்ணாமலைக்கு போயிருந்தாருங்க... ''அவரோட ஆட்கள், மாவட்டம் முழுக்க இருந்து, ஆட்களை திரட்டிட்டு வந்தாங்க... ஆர்ப்பாட்டம் முடிஞ்சு பார்த்தா, 50 பேருக்கும் மேற்பட்டவங்களின் மொபைல் போன்கள் மாயமாகிடுச்சு... நிறைய பேர் பணத்தையும், திருடங்க அடிச்சுட்டாங்க...

''எல்லாரும் கூட்டமா, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாங்க... கோர்ட், கேஸ்னு அலைய முடியாதுன்னு நினைச்சு, பாதி பேர் திரும்பிட்டாங்க... 16 பேர் மட்டும், புகார் குடுத்துட்டு போனாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அதிகாரியை மாத்தணும்னு கோரிக்கை வச்சும், கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்த துறையிலங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''நாகை மாவட்ட மீன்வளத் துறை பெண் அதிகாரியை தான் சொல்றேன்... இவங்க வந்ததுல இருந்து, பிரச்னைகள் அதிகமாகிட்டதா மீனவர்கள் புலம்பறா ஓய்... மீனவ கிராமங்களுக்கு இடையில ஏற்பட்ட சின்ன பிரச்னையை, பெண் அதிகாரி, சுமுகமா கையாள தவறிட்டதால, மீனவ கிராமங்கள், ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு கெடக்கு...

''புதுசா வந்த, 30க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை, பல மாசமா பதிவு செய்யாம இருக்காங்க... அரசு தர்ற நிவாரணத் தொகை, சலுகைகள், 40 சதவீத மீனவர்களுக்கு கூட போக மாட்டேங்கறது... இதனால, பெண் அதிகாரியை மாத்தணும்னு, மீனவர்கள், சென்னை வரைக்கும் கோரிக்கை வச்சுருக்கா... ஆனா, யாரும் கண்டுக்கலை ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''நேத்து, ரீனா செல்வினை, சர்ச் வாசல்ல பார்த்தேன்... அந்தோணிசாமி அண்ணனை கேட்டதா சொல்லச் சென்னாங்க வே...'' என்ற அண்ணாச்சி, ''ஸ்டாலின் கார் டிரைவரை, வீட்டுக்கு அனுப்புன கதை தெரியுமாவே...'' எனக் கேட்டு நிறுத்தினார்.''அவருக்கு என்ன பா பிரச்னை...'' என்றார் அன்வர்பாய்.

''ஸ்டாலின் காருக்கு, ரெண்டு டிரைவர்கள் இருக்காவ... இதுல, பாலுன்னு ஒருத்தரை சமீபத்துல, வேலையை விட்டு துாக்கிட்டாவ வே... ஸ்டாலின், காருக்குள்ள பேசிட்டு வர்ற விஷயங்களை, உளவுத் துறைக்கு சொல்லிட்டதா, இவரை துாக்கிட்டாங்கன்னு முதல்ல சொன்னாவ...

''ஆனா, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருத்தர் சமீபத்துல சினிமாவுக்கு போயிருக்காங்க... அவங்களை திரும்ப அழைச்சிட்டு வர்ற வேலையை, பாலுகிட்ட ஒப்படைச்சிருக்காவ... பாலு போகாம, வேற ஒரு டிரைவரை அனுப்பி வச்சுட்டாரு... அந்த கோபத்துல தான், அவரை அனுப்பிட்டதா சொல்லுதாவ...

''பாலுவோ, 'வேலையை விட்டெல்லாம் அனுப்பலை... ஒரு வாரம் கழிச்சு, திரும்பவும் போயிடுவேன்'னு சொல்லிட்டு இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement