Advertisement

சொல்கிறார்கள்

3 ஆண்டு வரை தாமதித்தால் பிரச்னையில்லை!



இன்சூரன்ஸ் பாலிசி இழப்பீடு பெறுவது குறித்து கூறும், எல்.ஐ.சி., நிறுவனத்தின், தென்மண்டலப் பிரிவு மேலாளர் தாமோதரன்: பாலிசிதாரர் மரணமடைந்தால், அவரது இறப்புச் சான்றிதழை முதலில் பெற வேண்டும். அதன்பின், அவருடைய பாலிசி முகவரை அணுகினால், இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர, அனைத்தையும் அவரே செய்து தருவார்.

முகவர் தொடர்பில் இல்லாத சூழலில், அந்த பாலிசிக்குரிய கிளை அலுவலகத்தை அணுகினால், விண்ணப்பம் தருவர். அதில், பாலிசி, வாரிசுதாரர், இறப்புச் சான்றிதழ் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், அதைச் சரிபார்த்த பின், வாரிசுதாரரிடம், 'க்ளைம்' தொகையை ஒப்படைப்பர்.

லைப் இன்சூரன்ஸ் பாலிசியை, க்ளைம் செய்யும் ஆண்டுகளின் அடிப்படையில் இரண்டாகப் பிரிப்போம். பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் எனில், 'இயர்லி க்ளைம்' என்போம்; இதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஏனெனில், ஏதேனும் தகவல் மறைக்கப்பட்டு உள்ளனவா என்பதை விசாரித்து அறிய வேண்டியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் எனில், 'நான் இயர்லி க்ளைம்' என்போம். இதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப எண்ணிக்கை குறைவாக இருக்கும்; விசாரணையும் தேவைப்படாது. மேலும், பாலிசிதாரர் இறந்த பின், இழப்பீட்டை கோர, மூன்று ஆண்டு வரை தாமதித்தால் பிரச்னையில்லை. அதற்குப்பின் எனில், தாமதத்துக்கான காரணத்தை விசாரித்தே கொடுப்போம். அதிகபட்சமாக, ஏழு ஆண்டு வரை தாமதித்தவர்களுக்கு, இழப்பீட்டைத் தந்திருக்கிறோம்.

பாலிசியில் குறிப்பிட்டுள்ள வாரிசுதாரரும் இல்லாத சூழலில், அவர்களின் மகன் அல்லது மகள், வாரிசுச் சான்றிதழை கொடுத்து, தொகையை பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அனைவருக்கும் அந்த தொகையை சமமாக பகிர்ந்தளிப்போம். சந்தேகத்திற்குரிய நோயால் பாலிசிதாரர் மரணமடைந்தால், என்ன நோய், எவ்வளவு காலம், எங்கே சிகிச்சை, என்னென்ன மருந்து என்பதையெல்லாம் ஆய்வு செய்வோம்.

பாலிசி துவங்கியதில் இருந்தே நல்ல முறையில் பிரீமியத்தைக் கட்டியுள்ள சூழலில், மூன்று ஆண்டுகள் தாண்டிய பின், உடல்நலக்குறைவால் ஏற்படும் மரணங்கள் குறித்து, எந்தக் கேள்வியும் எழுப்ப மாட்டோம். பாலிசிதாரர் கொலையை, இரண்டு விதமாக பார்ப்போம். அந்த கொலையில் பாலிசிதாரருக்கும் பங்கு உள்ளதா அல்லது பாலிசிதாரருக்கும், நேரடித் தொடர்பு இல்லாமல் வேறு ஏதேனும் காரணத்துக்காக கொலை நடந்து உள்ளதா என்பதே.

பாலிசிதாரர் யாரையாவது கொலை செய்து, அதற்கு எதிர்வினையாக இவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தால், அதற்கான க்ளைமை தர மறுக்க வாய்ப்புள்ளது. பாலிசிதாரரின் கொலை தொடர்பாக நாங்களே தனியாக விசாரணை நடத்துவோம். காவல் துறையில் அறிக்கை, கெமிக்கல் அனாலிசிஸ் ரிப்போர்ட்டை ஆய்வு செய்து, கொலைக்கான காரணத்தைக் கண்டறிவோம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement