Advertisement

இது உங்கள் இடம்

உலகம் போற்றும் காலம் வரும்!சொ.இந்திரா செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாட்டில், ஜி.எஸ்.டி., வரி அமலாக்கத்திற்கு பின், மத்திய, மாநில அரசுகளின் வருமானம் அதிகரித்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.குறிப்பாக, கறுப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், இதுபோன்ற சீர்திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஜி.எஸ்.டி., வரியில் நிலவும் குறைபாடுகளை களைய, நிர்ணய குழுவால் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விகிதத்தை மாற்றியும், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, பல பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளன!

தற்போது நடைமுறையில் உள்ள, 12 சதவீத மற்றும் 18 சதவீத வரியை, ஒரே வரியாக ஒருங்கிணைக்கும் திட்டமும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும், ஜி.எஸ்.டி.,யில் பெறும் உள்ளீட்டு வரிப்பயனை, நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் மீது, தக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, கொள்ளை லாப தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., வரி, பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிறிய நிறுவனங்களுக்கு எதிராக இருப்பது போன்றும், வதந்தி பரப்பப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு நடைமுறை இரண்டு, மூன்றாண்டு காலம் நீடித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்திற்கு மேல் மேம்படும்.

வணிகர்கள் மற்றும் நுகர்வோர் நலன், கறுப்பு பண ஒழிப்பு போன்றவற்றில், நல்லதொரு முன்னேற்றத்தை அடைய முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி, உலகளவில் பேசப்படும் காலம் வெகுதுாரத்தில் இல்லை. ஜூலை 1ஐ, ஜி.எஸ்.டி., தினமாக அறிவித்து, மத்திய அரசு கொண்டாடுவது வரவேற்கத்தக்கது!

----

'புண்ணியவான்' பாவ கணக்கை பழனி தீர்ப்பாரா?என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான், மதுரையில் இருந்து, ராமநாதபுரத்திற்கு தனியார் பஸ்சில் பயணம் செய்தேன்; கட்டணம், 75 ரூபாய்; ஓட்டை, உடைசல் நிறைந்த அரசு பஸ்சின் கட்டணம், 93 ரூபாய்; வழியில் எங்கும் நிறுத்தாமல் செல்லும் அரசு பஸ்சில் கட்டணம், 100 ரூபாய். தனியார் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும், கட்டண வித்தியாசம், 18 முதல், 25 ரூபாய் வரை உள்ளது.

கடும் டீசல் விலை உயர்விலும், மக்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை தந்து நல்ல பெயர் எடுத்து வருகின்றன, தனியார் பஸ் நிறுவனங்கள். ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி இறைத்ததால், அரசு பஸ்கள், இன்று கடும் நஷ்டத்தில் இயங்குகின்றன. அரசு நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து கழகங்கள் எல்லாம் தரம் தாழ்ந்து போனதற்கு காரணம், அரசு ஊழியர்களிடம் சேவை மனப்பான்மை குறைந்து போனது தான்!

மாத ஊதியம், 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும், மன நிறைவோடு பணியாற்றுகின்றனர், தனியார் நிறுவன ஊழியர்கள்; மாதம், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும், அரசு பஸ் ஊழியர்கள், பயணியரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்கின்றனர். நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகங்களைக் காப்பாற்ற, அரசு நினைப்பது நியாயமே இல்லை. பஸ்களை, மீண்டும் தனியாரிடம் ஒப்படைத்தால், குறைந்த கட்டணத்தில், மக்கள் பயணம் செய்ய வழி ஏற்படும்.

அன்று, லாபத்தில் இயங்கிய தனியார் பஸ்களை அரசுடமை ஆக்கி, இன்று கோடிக்கணக்கில் நஷ்டத்தில் தவிக்க விட்ட புண்ணியவான், முன்னாள் முதல்வர் கருணாநிதி. திருவாளர் செய்த பாவத்திற்கு, பரிகாரம் தேட, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு முயற்சிக்க வேண்டும். படிப்படியாக, அரசு பஸ்களை, தனியார் மயமாக்கினால், மாநிலம் போக்குவரத்து துறையில், சுபிட்சம் அடையும்!

---

விழிப்புணர்வுடன் இருங்கள்!ஆர்.கீர்த்திப்ரியன், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்; காவிரி மேலாண்மை வாரியத்தை, உடனே அமைத்திடுங்கள்' என, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து, தமிழகத்தில் போராட்டங்களை நடத்தின. நீதிமன்ற உத்தரவால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசால் அமைக்கப்பட்டு, அதன் கூட்டமும் வெற்றிக்கரமாக நடந்து முடிந்து விட்டது.

'போராட இனி ஒன்றுமே இல்லையே' என கருதிய, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு, சேலம் எட்டு வழிச்சாலை பிரச்னை கிடைத்து விட்டது. கண்ணை மூடி, திட்டத்தை எதிர்க்கின்றன. திட்டத்தை எதிர்த்து போராடிய, சேலத்தை சேர்ந்த சில விவசாயிகள் கைதாகினர். இதற்கு அஞ்சிய, 'லெட்டர் பேடு' கட்சித் தலைவர்கள், 'ஜகா' வாங்கி, ஓட்டம் பிடித்தனர்.

சேலம் - சென்னை சாலை விரிவாக்கத்துக்கு, முதலில், கடும் எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், சட்டசபையில், 'எட்டு வழிப்பாதை வேண்டாம் என, நான் சொல்லவில்லை; விவசாயிகளும், மக்களும் ஏற்றுக் கொண்டால், நானும் ஏற்றுக் கொள்கிறேன்' என, அந்தர் பல்டி அடித்துள்ளார்.

'சாலை ஆய்வுப் பணிகள், 75 சதவீதம் முடிந்து விட்டன' என, தமிழக அரசு கூறியுள்ளது. விளைநிலம், 9,600 ஏக்கரை கொண்ட இப்பாதை விரிவாக்கம் எளிதானது. இதில், பல தீயசக்திகள் நுழைந்து, அதை கடின பணியாக மாற்ற முயல்கின்றன.

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்காக, நீண்ட நாட்கள் தீர்வு காணப்படாமல் இருந்தது. சின்னியம்பாளையம், இருகூரை சேர்ந்த இருவர், 'நிலத்திற்கான இழப்பீடாக அதிக விலையை, தமிழக அரசிடம் கேளுங்கள்' என, மக்களிடம் பிரசாரம் செய்துள்ளனர். மேலும், நோட்டீஸ்களையும் வினியோகித்து, திட்டத்தை குட்டிச்சுவராக்க முயற்சிகளையும் செய்தனர்.

சின்னியம்பாளையம் கிராம முன்னாள் பேரூராட்சி தலைவர் தந்த புகாரில், மேற்படி இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க, லெட்டர் பேடு கட்சிகளுடன், 'கையேந்தும் போர்வையாளர்'கள் அலைகின்றனர். காவல் துறையினரும், மக்களும் விழிப்புடன் இருந்தால், அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம், இது. சுயநலத்தை விட்டு, பொது நலம் கருதி, நல்ல திட்டங்களை வரவேற்க வேண்டும்!

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Private bus operators are owned by political party benamis,black money hoarders. g.s.rajan, Chennai

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பேருந்துகளை அரசுடமை ஆகியதே சிலரைபழிவாங்கும் நோக்கத்தில் தான் என்பது ஐம்பது வயது தாண்டியவர்களுக்கு தெரியும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement