Advertisement

டீ கடை பெஞ்ச்

'டார்ச்சர்' இன்ஸ்பெக்டரால் போலீசார் விரக்தி!



''எங்க தலைவர் சொன்னது, உண்மையா போச்சு பார்த்தீயளான்னு மார்தட்டுதாவ வே...'' என, தோள் துண்டால், பெஞ்சை உதறியபடியே அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சிக்காரங்க, இப்படி பெருமை அடிச்சுக்குறாங்க...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.

''ரஜினி மக்கள் மன்றத்துக்காரங்களை தான் சொல்லுதேன்... 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துல, சமூக விரோதிகள் கலந்துட்டாவ'ன்னு ரஜினி சொன்னாரே... அப்ப, அவரை எல்லாரும் திட்டி தீர்த்தாங்கல்லா வே...

''இப்ப, அந்த ஊர் மீனவர்கள், கிராம மக்கள் எல்லாம், 'எங்க போராட்டத்தை, மக்கள் அதிகாரம் அமைப்புக்காரங்க தான் துாண்டிவிட்டு, கலவரமா ஆக்கிட்டாவ'ன்னு குத்தம் சொல்லிட்டாவளே... ''இதை தானே, அன்னைக்கு எங்க தலைவரும் சொன்னாருன்னு, ரஜினி மக்கள் மன்றத்துக்காரங்க சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''ரிடையர் ஆகி பணத்தை வாங்க, படாதபாடு படறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்த துறையிலங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''சென்னையில, அரசு பள்ளிகள்ல வேலை பார்த்து, 'ரிடையர்' ஆன, இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதிய பண பலனை ஒரே தவணையா குடுத்துடணும்னு, போன வருஷம், அரசாங்கம் உத்தரவு போட்டது ஓய்...

''சென்னையில, முதல் கட்டமா, 27 பேருக்கு பணத்தை விடுவிக்க, வியாசர்பாடி பகுதியில இருக்குற ஒரு தலைமை ஆசிரியர், புரோக்கர் மூலமா கணிசமான தொகை வசூலிச்சிருக்கார்...

''இது போராதுன்னு, 'இன்னும் கொடுங்கோ'ன்னு, 'ரிடையர்' ஆனவாளை படுத்தி எடுக்கறாளாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''அங்கன போறது நம்ம குமாரும், செல்வநாயகமும் தான வே...'' என, அண்ணாச்சி சந்தேகம் கேட்க, அன்வர்பாய், 'ஆம்' என தலைமை அசைத்தார்.

''ஏடாகூடமா பேசிட்டு இருக்குறவர் மேல புகார் குடுக்க தயாராகிட்டு இருக்காங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.

''யாருப்பா அது...'' என்றார் அன்வர்பாய்.

''மதுரை ஆறாவது பட்டாலியன் போலீஸ்ல இருக்குற, இன்ஸ்பெக்டரை தான் சொல்றேன்... இவர், கவாத்து பயிற்சி எடுக்குறப்ப, ஆபாசமாவே பேசறாராமுங்க... ''என்ன தான் ஆண் போலீசாரா இருந்தாலும், இவர் பேச்சை கேட்டு பலரும் நெளியுறாங்க... அதுவும் இல்லாம, உணவு விடுதியிலயும், இன்ஸ்பெக்டர் வச்சது தான் சட்டமா இருக்குங்க...

''இவர், 'டார்ச்சர்' தாங்க முடியாம, சில போலீசார் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு மன உளைச்சல்ல தவிக்குறாங்க... இதனால, இவர் மேல உயர் அதிகாரிகளிடம் புகார் குடுக்க போலீசார் தயாராகிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''நம்ம மகாலிங்கம் வந்தா, ஆத்து பக்கம் வர சொல்லும் ஓய்...'' என்றபடி குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement