Advertisement

டீ கடை பெஞ்ச்

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு மூடுவிழா?



''விதிகளை மீற, துணை போறாங்க...'' என, டீக்கு குரல் கொடுத்தபடியே, விஷயத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''தமிழகத்துல, பத்திரப்பதிவு தவிர, சீட்டு நிறுவனங்கள், சங்கங்களின் பதிவு பணிகளையும், பதிவு துறை செய்யுதுங்க... இதுக்காக, மாநில, மாவட்ட அளவுல, பதிவுத் துறையில, தனி பிரிவே செயல்படுதுங்க... ''தமிழகம் முழுக்க, அடுக்குமாடி குடியிருப்புகள்ல, ஏராளமான சங்கங்கள் இருக்கு... இதுல, நிறைய சங்கங்கள், லட்டர் பேடு அளவுல தான் இருக்குங்க...

''இந்த சங்கங்கள்ல, நிறைய விதிமீறல்கள், நிதி முறைகேடுகள் நடக்குது... இதை, பதிவு துறை அதிகாரிகள் கண்டுக்காம, அந்த சங்கங்களை பதிவு பண்றது, புதுப்பிக்கறதுன்னு, மோசடிக்கு துணையா இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''மதுரை, தி.மு.க.,வுல தியாகராஜன் கை ஓங்குது வே...'' என்றார் அண்ணாச்சி.

''பி.டி.ஆர்., பழனிவேல்ராஜன் மகனா... இப்ப, எம்.எல்.ஏ.,வா கூட இருக்காரே... அவர் தானே பா...'' என்றார் அன்வர்பாய்.

''அவரே தான்... சமீபத்துல, மதுரை மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் சிலரது பதவிகளை பறிச்சாவளே... இதுல, சீனியர்கள் ஓரம் கட்டப்பட்டதை வரவேற்றாலும், கட்சிக்காக, துரும்பை கூட துாக்கி போடாத சிலருக்கும், பதவி குடுத்திருக்காவ வே... ''நிறைய பேர் மேல புகார் போனாலும், வேலுசாமி, ஒச்சுபாலு பதவிகளை மட்டும் தான் பறிச்சிருக்காவ...

''ஸ்டாலின் மருமகன் சபரீஷனுக்கு நெருக்கமானவர் தியாகராஜன்... இவர் சிபாரிசுப்படி தான், இந்த மாற்றங்கள் நடந்திருக்குன்னு, மதுரை, தி.மு.க.,வினர் சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''பள்ளிகளை மூடிடுவா போலிருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''தனியார் பள்ளிகள் அதிகமாகுறதும், அரசு பள்ளிகள் மூடப்படுறதும், இப்ப சகஜமாயிடுச்சே பா...'' என்றார் அன்வர்பாய்.

''நான் சொல்ல வந்தது, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை... தமிழகத்துல, 20க்கும் மேற்பட்ட அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இருக்கோல்லியோ... இதுல, 1,880 சீட்கள் இருக்கு ஓய்... ''இந்த வருஷம், மாணவர் சேர்க்கைக்கு, 821 பேர் மட்டும் தான் விண்ணப்பிச்சிருக்கா... ஏன்னா, ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியை முடிச்சிட்டு, 2.50 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணிட்டு, வேலைக்காக காத்திருக்கா ஓய்...

''அதுவும் இல்லாம, அரசு பள்ளிகள்ல, இடைநிலை ஆசிரியர்களுக்கு, வேலைவாய்ப்பும் குறைஞ்சிடுத்து... 2008ல இருந்து, ஆறுல இருந்து எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்களை தான் நியமிக்கறா... ''இதனால, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடுவிழாவை நோக்கி போயிண்டு இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement