Advertisement

சொல்கிறார்கள்

பெண்களுக்கு சிறப்பாக கைகொடுக்கும்!



கர்நாடக நீதிமன்ற வழக்குகளில் கையெழுத்து புலனாய்வாளராக பணிபுரிபவரும், தென் மாநிலத்தின் பிரபல, 'கிராபாலஜிஸ்ட்'டுமான, பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண், சுசித்ரா தருண்: அப்பாவின் பூர்வீகம், கும்பகோணம் அருகே சுவாமிமலை. நான் வளர்ந்தது, பெங்களூரில். சிறு வயதிலேயே தந்தையை இழந்தேன். நடுத்தர குடும்பங்களுக்கே உரிய, பல சவால்களை எதிர்கொண்டு வளர்ந்தேன்.

பன்னாட்டு நிறுவனத்தில், பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். திருமணத்துக்கு பின், மூன்று முறை கருச்சிதைவுக்கு ஆளாகி, மன உளைச்சலால் அவதியடைந்தேன். புது வாழ்வை துவங்க, கையெழுத்து ஆராய்ச்சி கோர்ஸ் படித்தேன். கையெழுத்து தொடர்பான, 'கிராபாலஜி' பற்றி, பலருக்கும் தெரியவில்லை. பெரிய முதலீடு தேவையில்லாத, ஆனால், லட்சக்கணக்கில் வருமானம் தரக்கூடிய இத்துறை, பெண்களுக்கு சிறப்பாக கைகொடுக்கும்.

ஒருவரின் கையெழுத்தை, அது அவருடையது தானா என, அடையாளம் காணவும், அதை எழுதிய நேரத்தில், அவருடைய மனநிலையை ஆராயவும், கையெழுத்தின் வாயிலாக, ஒருவரின் குணங்களை மதிப்பிடவும், செயல்படக்கூடிய துறையே கிராபாலஜி. அந்த கோர்சை முடித்த நான், 2014ல், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட் ரைட்டிங்' பயிற்சி அமைப்பை துவங்கினேன். இதுவரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், படித்து பயனடைந்துள்ளனர். இப்போது, கர்நாடகாவின் பல நகரங்களில், பயிற்சி மையங்களை நடத்தி வருகிறேன்.

கிராபாலஜி கோர்சுடன், நாங்கள் கையெழுத்து சீர்திருத்தப் பயிற்சிகளும் அளிக்கிறோம். இந்த பயிற்சி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் நடத்தையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த கைகொடுப்பதால், வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் விவாகரத்து கோரிய கணவர், தன் மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவிருப்பதாக கூறியதுடன், அந்த ஆணுக்கு, அவர் எழுதிய கடிதங்களை ஆதாரமாகவும், கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

கடிதங்களை புலனாய்வு செய்ததில், அவை ஆணின் கையெழுத்தை ஒத்திருப்பதை அறிந்தேன். இதை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு முன், விவாகரத்து கேட்ட கணவரை, என் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தேன். பல விஷயங்களை பேசி, அவர் வசிக்கும் பகுதியில், ஒரு குறிப்பிட்ட தெருவுக்கு வழி கேட்டேன். என் மேஜையில் இருந்த பேப்பரில், 'ரூட் மேப்'பை, எழுதிக் காட்டினார்.

அவர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த காதல் கடிதங்களையும், என் அலுவலகத்தில் எழுதிய பேப்பரையும் ஆய்வு செய்து, அந்த கடிதத்தில் இருப்பது, அவருடைய கையெழுத்தே... 'ஸ்ட்ரோக்'குகளை மாற்றி எழுதி, தன் மனைவி மீது அபாண்டமாக பழி சுமத்தியதை, ஆதாரங்களுடன் நிரூபித்தேன். விரைவில் தமிழகத்தில், பயிற்சி பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement