Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அந்த திட்டத்திற்கு, விவசாயிகள், பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தால், உங்களுடன் சேர்ந்து, இத்திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருகிறேன்.

டவுட் தனபாலு: மக்களின் சந்தேகத்தை போக்கி, நாட்டின் வளர்ச்சி குறித்து விளக்கி, அவர்களின் சம்மதத்தை பெற வழிவகுக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை... மாறாக, அவர்களின் சிறுசிறு அதிருப்தியையும் ஊதிப் பெரிதாக்கி, அதில் குளிர்காய நினைப்பவர்கள், இங்கு பெருகிட்டாங்களே... இப்பவாவது மனம் திருந்தி, மாநில முன்னேற்றத்துக்காக யோசிச்சீங்களே... உங்களை பாராட்டுறதுல, ஒரு, 'டவுட்'டும் இல்லே...!

---

சிவசேனா, -எம்.பி., சஞ்சய் ராவத்: இந்திராவை போல நாட்டுக்கு பெரும் பங்காற்றிய தலைவர்கள் வேறு யாருமில்லை. நெருக்கடி அமல்படுத்தப்பட்ட தினத்தை, 'கறுப்பு தினம்' என்று கூறினால், தற்போதைய அரசின் ஆட்சியில், பல கறுப்பு தினங்கள் உள்ளன.

டவுட் தனபாலு: பா.ஜ., மீதுள்ள அதிருப்தியால், காங்கிரசையும், அதன் தலைவர்களையும், மானாவாரியாக பாராட்டி வர்றீங்க... வரும் தேர்தல்களில், பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொள்வதாகச் சொல்லும் நீங்க, காங்கிரசுடன் கைகோர்க்க ஏதும் திட்டம் வெச்சிருக்கீங்களா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

-------------------

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு: தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவுத் துறை நிதியில், 84 கோடி ரூபாயை எடுத்து, இலவச காஸ் ஸ்டவ் வழங்கப்பட்டது. இதனால், கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டன.

டவுட் தனபாலு: ஒரு விஷயத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை, மற்றொரு விஷயத்துக்கு மாற்றக் கூடாது... நிர்வாகச் சீர்கேட்டுக்கு, அது தான் அடித்தளம்னு சொல்ல வர்றது புரியுது... போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்தில் கைவைத்து, பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்கியது குறித்த கேள்வி, 'இதெல்லாம் சகஜம்'னு, அரசு சொல்லுச்சே... அதை எப்படிப் பார்க்குறீங்க என்ற, 'டவுட்'டையும் கொஞ்சம் விளக்குங்களேன்...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement