Advertisement

மனிதனின் மனதை புரிந்துகொள்ளும் ரோபோ!

மனிதனும், ஹியூமனாயிடு எனப்படும் மனித வடிவ ரோபோக்களும், சகாக்களாக சேர்ந்து வேலை செய்யும் காலம் விரைவில் வரப்போகிறது. அப்போது, மனிதர்கள் சொல்வதை புரிந்து கொண்டு வேலை செய்யும் திறன், ரோபோக்களுக்கு அவசியம்.
இதற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம். அதன் செயற்கை நுண்ணறிவுத் துறையிலுள்ள ஆய்வாளர்கள், 'பாக்ஸ்டர்' என்ற மனித வடிவ ரோபோவை, தங்கள் மனதாலும், சைகையாலும் கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கி உள்ளனர்.
ஒரு ஆய்வாளர் மூளையின் மின்னலைகளை உணரும், இ.இ.ஜி., சாதனத்தை தலையில் அணிந்தபடி பாக்ஸ்டர் ரோபோ செய்யும் வேலையை கவனிக்கிறார்.
அந்த ரோபோ, தவறான இடத்தில் துளையிடும் கருவியால் துளை போடப் போகும்போது, ஆய்வாளரின் மூளையில் அது தவறு என்று தோன்றுகிறது. அதை மின்னலைகள் மூலம் படிக்கும் ரோபோ, உடனே தன் வேலையை நிறுத்திவிடுகிறது.
அடுத்து, அந்த ஆய்வாளர் இடது அல்லது வலது பக்கம் “கையை நகர்த்து” என்பதுபோல சைகை செய்ய, அவரது கைகளில் கட்டப்பட்டிருக்கும் உணரி, ரோபோவுக்கு தகவலை அனுப்புகிறது.
அதை ரோபோ புரிந்துகொண்டு, இடம் அல்லது வலப் பக்கமாக தன் கைகளை நகர்த்தி துளையிடுகிறது.
இயந்திரங்களுக்காக மனிதன் மாறுவதைவிட, மனிதர்களின் இயல்பான செய்கைகளை ரோபோக்கள் புரிந்துகொள்வது நல்லதுதானே!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement