Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்:சட்டசபை ஒரு மாதிரியாக, வித்தியாசமாக நடக்கிறது. எனவே தான், மாதிரி சட்டசபையை நாங்கள் நடத்தினோம். பெரும்பான்மை இல்லாதபோதும், திட்டங்கள் போடப்படுகின்றன; சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இது, ஜனநாயக விரோதம்.

டவுட் தனபாலு: அதெல்லாம் கிடக்கட்டும்... 'வீராப்பு பேசி, நீங்க ஆரம்பித்த, மாதிரி சட்டசபையையே, உங்களால முழுசா நடத்த முடியலை... பாதியில் மூட்டை கட்டி வைத்து, சட்டசபைக்கு வந்துட்டீங்க... இந்த விவகாரத்தில், தி.மு.க., மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவை தக்க வைக்க முடியாத நீங்க, பெரும்பான்மை குறித்தெல்லாம் பேசலாமா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்:ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு, ஆதரவு தெரிவிக்கிறேன்.



டவுட் தனபாலு: உண்மையிலேயே, கோரிக்கைக்குத் தான் ஆதரவா... இல்லை, கூட்டணிக் கட்சியான, பா.ஜ.,வை வெறுப்பேற்ற, இப்படிப் பேசுறீங்களா... ஏன் இந்த, 'டவுட்'னா, மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தை ஏற்க மறுக்குறீங்க; ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சிக்குறீங்க; பா.ஜ., அளிக்கும் விருந்தில், பங்கேற்பதை தவிர்க்குறீங்க... இதெல்லாம் தான், அந்த சந்தேகத்துக்கு காரணம்...!


அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன்:பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அழிவை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை, மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ளனர்.



டவுட் தனபாலு: நாட்டுல, எது எதுக்கோ போராட்டம் நடக்குது... நீங்க சொல்வது உண்மையாக இருந்தால், ஆளும்கட்சி, எம்.எல்.ஏ.,க்களை மக்கள் முற்றுகையிட்டு, உங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி, வலியுறுத்தி இருப்பாங்களே... குறைந்தபட்சம், அ.தி.மு.க., தொண்டர்களாவது, தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பாங்களே... இது எதுவுமே நடக்காத போது, நீங்களா ஒரு கதைகட்டுவது சரியா என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

    ஸ்டாலின் அவர்களே, உங்களால் கட்சி நடத்த முடியாது என்று மொத்த திமுகவினரும் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் நினைப்பது அழகிரி இருந்தால் இந்நேரம் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்று. ஆகையால் நீங்கள் வேறு ஒருவரிடம் கட்சியை ஒப்படைத்து, பழையபடி, TV சீரியல்லில் நடிக்க போங்கள்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement