Advertisement

ஆன்மிக அறிவியல்!

ஆன்மிக உணர்வு, மூளையில் எந்தப் பகுதியில் ஏற்படுகிறது... இந்தக் கேள்விக்கு விடை அறிய பல ஆய்வுகள் நடக்கின்றன. அண்மையில், 'செரிப்ரல் கார்டெக்ஸ்' இதழில் வெளியாகியுள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வு, அந்தக் கேள்வியின் ஒரு கோணத்திற்கு விடை கண்டிருக்கிறது.
மதம் சார்ந்த அல்லது மதத்திற்கு அப்பால் இயற்கையுடன் அல்லது பிரபஞ்சத்துடன் இரண்டரக் கலந்துவிட்டது போன்ற உணர்வை ஆன்மிக உணர்வு என்று சொல்லலாம். இத்தகைய அனுபவம் ஏற்பட்டுள்ளதாக கருதும், 27 பேரிடம், யேல் விஞ்ஞானிகள் விரிவான ஆய்வை நடத்தினர். தன்னைவிட பெரிய சக்தியுடன் தொடர்பு கொண்டது போன்ற ஆன்மிக உணர்வை ஏற்படுத்திய தருணங்களை விஞ்ஞானிகளிடம் அவர்கள் விவரித்தனர்.
பின் அவர்களை, எப்.எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவியில் கிடத்தி, அவர்கள் நேர்காணலின்போது பதிவு செய்த உரையாடலை ஒலிபரப்பினர். அதைக் கேட்கும்போது மீண்டும் அந்த ஆன்மிக அனுபவத்தை அவர்கள் தங்கள் மனக் கண் முன் கண்டனர். அப்போது அவர்களது மூளையில் எந்தப் பகுதி அதிகம் துாண்டுதல் அடைகிறது என்பதை, எப்.எம்.ஆர்.ஐ., கருவி பதிவு செய்தது.
ஆய்வில் பங்கேற்றோரில் பெரும்பாலானோருக்கு, நெற்றிக்கு பின்னால் உள்ள பகுதிக்கும், நடு மண்டைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும், 'பரியேடல் கார்டெக்'சில் துாண்டுதல் அதிகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
“ஆன்மிக அனுபவங்களுக்கு ஒருவரது வாழ்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் திறன் உண்டு என்பது, உளவியல் மருத்துவர்களின் கருத்து. இத்தகைய அனுபவத்திற்குப் பின்னே உள்ள நரம்பியல் செயல்பாடுகளை புரிந்துகொள்வது, ஒருவரை தோல்விகள், கவலைகளிலிருந்து மீட்டெடுப்பதில், உளவியல் மற்றும் மருத்துவ துறையினருக்கு உதவியாக இருக்கும்” என்கிறார், யேல் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான மார்க் பொடென்சா.
ஆன்மிக அனுபவங்களுக்கு பரியேடல் கார்டெக்சைத் தவிர, மூளையின் பிற பகுதிகளும் காரணமாக இருக்கலாம் எனவும், அதை மேற்கொண்டு நடக்கும் ஆராய்ச்சிகள் கண்டறியக்கூடும் எனவும் யேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement