Advertisement

காற்றிலிருந்து லாபகரமான எரிபொருள்!

வாகனப் புகையால் காற்றில் கலக்கும் கார்பன் - டை - ஆக்சைடை திரும்பவும் எடுத்து, எரிபொருளாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கார்பன் இன்ஜினியரிங்.
கனடாவை சேர்ந்த இந்நிறுவனம், காற்றை உறிஞ்சி, அதிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடை பிரித்து, திரவ ஹைட்ரோ கார்பன் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை வெள்ளோட்டம் பார்த்துள்ளது.
இதுபோன்ற முயற்சிகள் ஏற்கனவே நடந்துள்ளன. என்றாலும், அவற்றுக்கு அதிகமாக செலவு பிடிக்கும் என்பதால் பிரபலமாகவில்லை.
காற்றிலிருந்து கரியமில வாயுவை எடுத்து ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு எரிபொருளை உருவாக்க, 67 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.
ஆனால், கார்பன் இன்ஜினியரிங் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் மூலம், 6,700 ரூபாய்க்கே ஒரு மெட்ரிக் டன் எரிபொருளை உருவாக்க முடியும் என, அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவழ்ந்து செல்லும் காற்றை, விசிறிகள் மூலம் இழுத்து, ஒரு ஆலையில் செலுத்தி, கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை திரவ ஹைட்ராக்சைடு மூலம் பிரித்தெடுத்து, கார்பனேட் வில்லைகளாக மாற்றுகின்றனர் கார்பன் இன்ஜினியரிங்கின் விஞ்ஞானிகள்.
பின் திட வடிவத்திலுள்ள கார்பனேட்டை சூடாக்கி, மீண்டும் சுத்தமான கார்பன் - டை - ஆக்சைடாக மாற்றுகின்றனர்.
அடுத்து அந்த வாயுவை வைத்து திரவ வடிவிலான செயற்கை ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்கின்றனர். இதை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். அதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது.
கார்பன் இன்ஜினியரிங் தனது பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2015ல் ஒரு மாதிரி ஆலையை துவங்கியது.
அது குறைந்த செலவில் எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட பின், 'ஜூல்' என்ற எரிசக்தி ஆய்விதழில் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.
காற்று மாசை வைத்தே, மாசில்லாத எரிபொருளை தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பது இனிதான் தெரியும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement