Advertisement

மீண்டும் ஒலியை மிஞ்சும் அதிவேக விமானங்கள்!

ஒலியின் வேகத்தை மிஞ்சிப் பறக்கும் பயணியர் விமானங்கள் இன்று இல்லை. விரைவில் இந்த நிலை மாறும் என, விமானத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டு தனியார் துறை நிறுவனங்கள், சொந்த விமானங்களை வாங்க விரும்புவது, சர்வதேச பயணியர் அதிகரித்து வருவது ஆகியவற்றை இலக்கு வைத்து, 'ஏரியோன் சுப்பர்சோனிக், ஸ்பைக் ஏரோஸ்பேஸ், பூம் சூப்பர்சோனிக்' போன்ற விமான நிறுவனங்கள், ஒலியை மிஞ்சும் வேகமான ஜெட் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளன.
ஒலியை மிஞ்சும் வேகத்தை, 'மாக்' என்ற அளவையால் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். இதை, 'சூப்பர்சோனிக்' வேகம் என்றும் அழைப்பர்.
ஐரோப்பிய தயாரிப்பான, 'கான்கார்டு' ரக விமானங்கள் மாக் 2 வேகத்தில் (மணிக்கு, 2140 கி.மீ.,) பறந்தன. 1976ல் துவங்கிய கான்கார்டு விமான சேவை, 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
ஜூலை, 2000த்தில் ஏற்பட்ட மோசமான கான்கார்டு விபத்து, அமெரிக்காவில் நடந்த செப்டம்பர், 11 தாக்குதல் ஆகியவற்றை அடுத்து, கான்கார்டு விமானத்திற்கு வரும் பயணியரின் வரத்து வெகுவாகக் குறைந்தது.
பிரிட்டன் மற்றும் பிரான்சின் கூட்டுத் தயாரிப்பான கான்கார்டு, மொத்தமே, 20 விமானங்களைத்தான் உருவாக்கியது. அதில், 14 மட்டுமே வர்த்தக சேவையில் இருந்தன.
மொத்தம், 128 பயணியரை சுமக்கும் திறன் கொண்டது கான்கார்டு. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர்சோனிக் விமானங்கள் அதைவிட குறைந்த அளவு பயணியரையே சுமக்கும்.
விமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி முன்னேற்றங்களால், குறைந்த அளவு பயணியர் பறக்கும் சூப்பர் சோனிக் விமானங்களை லாபகரமாக இயக்க முடியும் என, விமானத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement