Advertisement

தமிழகம் முன்னேற நல்ல செய்தி

தமிழகம் கடந்த வாரத்தில் சந்தித்த மிக நல்ல செய்தி, காவிரி ஆணையம் மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டதாகும். டெல்டா மாவட்ட விவசாயிகள், இனி தங்களது விவசாய உத்திகளை தெளிவுபடுத்தியாக வேண்டும். பயிர்க்காப்பீடு, அதிகளவு விளைவிக்கும் விவசாய நடைமுறை அமலாக்கம் தேவை.நாடு முழுவதும் சில மாநிலங்களில் அதிக கரும்பு விளைச்சல், அதனால் சர்க்கரை கூடுதல் கையிருப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சில பிரச்னைகள் எழுந்திருக்கின்றன.அதே போல, காய்கறி, பழங்கள் உற்பத்தி அதிக அளவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழகமும் விலக்கல்ல. வேளாண் பொருட்களை உரிய விலைக்கு விற்க நடைமுறை தேவை.தவிரவும், காவிரி ஆணையம் இனி உண்மை என்றாகி விட்டதால், மற்ற அம்சங்களுடன் இணைத்து, நீர் மேலாண்மை அணுகுமுறை மேற்கொண்டாக வேண்டும். பருவமழை இந்த ஆண்டு பொய்க்காது என்பதால், காவிரித் தண்ணீர் ஜூன் மாதத்தில் இருந்து, முறையாக கணக்கிடப்பட வாய்ப்புகள் அதிகம்.காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க, சுப்ரீம் கோர்ட் மேற்கொண்ட தெளிவான அணுகுமுறை ஒரு புறம் இருந்தாலும், அதற்கு நீர்வளத்துறை மத்திய அமைச்சர் கட்கரி மேற்கொண்ட முயற்சிகள், இதுவரை இருந்த மத்திய அரசு எடுத்த முடிவுகளை விட சிறப்பானது.தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., அரசு இந்த விஷயத்தில் மத்திய அரசிடம், சமயங்களில் முரணாக நடந்தாலும், காவிரி விவகாரத்திற்கு முடிவு வரும் என்பதை உணர்ந்திருந்தது. முதல்வர் பழனிசாமி தன் காலத்தில், ஏற்பட்ட சாதனை என்று பிரசாரம் செய்யலாம். மத்திய அரசைப் பாராட்ட விரும்பாத, தி.மு.க., உடனே, ஜூன் 12ல், மேட்டூர் தண்ணீர் திறப்பு தேவை என்கிறது.இந்த ஆணையத்தில் உள்ள பிரதிநிதிகளில் முக்கியமானவராக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர், எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டு இருப்பதால், தமிழகம் மேற்கொள்ளும் பல்வேறு அணுகுமுறைகள் வெளிப்படையாகலாம். காவிரி விவகாரம், கட்சி அரசியலில் இருந்து, மாறியிருப்பது நல்ல திருப்பமாகும்.அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருப்பதால், தி.மு.க., மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சிகள், நேரடியாக கர்நாடக அரசுப் பிரதிநிதிகளை சந்தித்து, ஆணையம் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்கலாம்.இது மீண்டும், பெரிய கோவிலுக்கு ராஜராஜனும், உலகமகாதேவியும் வந்த சமயத்தில் நல்ல சகுனமாக அமைந்திருக்கிறது. இக்கருத்து மூடக்கருத்து என்பதை விட, சோழ மன்னர்களைப் புகழ்ந்து, ஆட்சிக்கட்டிலில் சொகுசுகளை அனுபவித்த பலர் உண்டு.தமிழக கலாசாரத்தை அழிக்கும் இச்சிலை திருட்டை, 50 ஆண்டுகள், மவுனமாக அமுக்கிய செயலுக்கு வருந்துவரா என்று தெரியாது. சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்த எவரேனும் பிடிபட்டால், அவர்கள் வயதானவர்களாக இருந்தாலும், ஜாமின் தராமல் சிறையில் தள்ளி, தமிழரின் மாண்பைக் காக்க வேண்டும்.இது ஒரு புறம் இருக்க, 110 விதிகளை சபையில், எளிதாக அறிவிக்க முதல்வர் பழனிசாமி முன்வந்திருப்பது, அரசு ஸ்திரத்தன்மையை நோக்கி செல்வதன் அடையாளம். அதிலும், குரூப் - 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில், வயது வரம்பு உயர்த்தப்பட்டதாகும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வயது உச்ச வரம்பு, 35ல் இருந்து, 37 ஆகிறது.இது, அரசுப்பணிகளில் ஆர்வமுள்ள தகுதி பெற்றவர்களை, இவ்வாய்ப்பை பெற துாண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், இதனால் பயனுறுவது வரவேற்கத்தக்கது. இதே சமயத்தில் அரசுப்பணிகளில் உயர்பதவிகளில் இவர்களுக்கு உள்ள கோட்டாவில், முறைப்படி பதவிகள் தரப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மத்திய அரசுக்கு கூறிய யோசனைகள் அமலாகும் பட்சத்தில் நல்லது.அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பது, டிஜிட்டல் நடைமுறைகளை கையாளுவதில் சரியான பயிற்சி, லஞ்ச ஊழலற்ற தெளிவான நிர்வாகம் வரும் நடைமுறை, அமலாகும் நேரத்தில் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் வெளிப்படைத் தன்மை கொண்ட நிர்வாகம் ஏற்பட துணை புரியும்.புதிது புதிதாக ஏற்படும் மாற்றங்களை விவாதிக்கும், தளமாக சட்டசபை மாறி, எளிதாக நீதிமன்றங்களால், புறக்கணிக்கப்படாத சட்ட முன்வடிவுகளும் வந்தால், தமிழக நிர்வாகம் மேம்பட அதிக வழிகள் பிறக்கலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement