Advertisement

இது உங்கள் இடம்

தனிமனிதன் எப்படி கீழ்ப்படிவான்?

ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில், நீதித் துறையின் மிக உயர்ந்த அமைப்பு, உச்ச நீதிமன்றம். அதன் தீர்ப்புக்கு, அரசனாயினும், ஆண்டியாயினும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்.

'ஆறு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என, காலக்கெடு விதித்து, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது, உச்ச நீதிமன்றம்!தீர்ப்பை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தான், மத்திய அரசின் கடமை.ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, தமிழகத்திற்கு எதிர்மாறான கருத்தை கூறியுள்ளார். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, மத்திய - கர்நாடக அரசுகளுக்கு உண்டு.உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிடில், மத்திய அரசு மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கை, தமிழக அரசு தொடுக்கலாம்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற வைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் விளங்க வேண்டும்.

அதை விடுத்து, 'மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்' என, அரசியல் பண்ணினால், மக்கள் நம்ப மாட்டார்கள்!


ரஜினி கருத்தில் தவறு ஏதுமில்லை!

டாக்டர் ஆ.கலாநிதி, முன்னாள், எம்.பி., சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில், தனியார் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், நடிகர் ரஜினி பங்கேற்றார்.

அவர், மாணவர்கள் குறித்து பேசியதை, சில அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர். அதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் சொன்ன கருத்து ஒன்றும் புதிது அல்ல; யாருக்கும் எதிரானதும் இல்லை.பல ஆண்டுகளுக்கு முன், 'போஸ்டல் யூனியன்' என்ற அமைப்பு, கூட்டம் நடத்தியது. அதில், முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, நம்பூதிரிபாட் பங்கேற்றனர்.

அண்ணாதுரை, 'அரசியல் பற்றி, மாணவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்; ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியல் பற்றி தெரிந்தால் தான், உலகில் சிறந்த மனிதனாக இருக்க முடியும். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை, புரிந்து கொள்ள முடியும்' என, ஆங்கிலத்தில் பேசினார்.

அன்று, நான் உதவி பேராசிரியராக இருந்தேன். அண்ணாதுரை கூட்டத்திற்கு, தவறாமல் செல்வேன். ரஜினி பேசிய கருத்து, அண்ணாதுரை பல ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ள கருத்தை ஒத்துள்ளது.மாணவர்களுக்கு யார் வேண்டுமானாலும் அறிவுரை கூறலாம்; ரஜினி கருத்தில் தவறு ஏதும் இல்லையே!


ஏதாவது வழியில் திருந்த முயற்சி எடுங்களேன்!

எஸ்.அருள் செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: திருநங்கையர் அட்டூழியம் குறித்தும், அவர்களில் சிலர் நல்லோராக வாழ்கின்றனர் என்றும், வாசகர்கள் பலர், இதே பகுதியில் கடிதம் எழுதுகின்றனர்.

திருநங்கையரில் நற்குணம் உடையோராகவும், உடல் உழைப்பில் தான் வாழ வேண்டும் என, எண்ணம் உடையோர் பலர் உள்ளனர்.சில திருநங்கையர், தங்களை பெண்ணாக காட்டிக் கொள்வதற்காக, அதிகமாக செலவு செய்து, அலங்கார ஒப்பனை செய்து கொள்கின்றனர். இதன் காரணமாக, உடல் உழைப்பிற்கு அவர்கள் தயாராகவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவர்களிடம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் உண்டு. அவர்கள் அதிகமாக செல்வது, மது பார்களுக்கு தான்.பணத் தேவை அதிகம் இருப்பதால், கூட்டம் கூட்டமாக சென்று, வருவோர், போவோர், வாகனங்களில் செல்வோர் என, பலரை நிறுத்தி, 'மச்சான், மாமா...' என, வயதிற்குத் தக்க உறவு முறை வைத்து, அழைத்து, பிச்சை எடுக்கின்றனர்.

வியாபார ஸ்தலங்களுக்கு கூட்டமாக சென்று, பணம் கேட்டு, அடாவடி செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இவர்கள் அகன்று செல்வதற்கு, வியாபாரிகள் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.

திருநங்கையர் சிலரின் செயலால், அனேக இளைஞர்கள் பணத்தை பறி கொடுத்து பாதிப்படைந்து வருகின்றனர். இது போன்ற செயல்களால், அளவுக்கு அதிகமான வருவாய் கிடைப்பதால், ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்.இவர்களாகவே திருந்த வேண்டும் அல்லது இவர்களால் ஒட்டுமொத்த திருநங்கையரும் பாதிக்கப்படுவதால், இவர்களது அமைப்பினர் சம்பந்தப்பட்டோரை திருத்தி, மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்!

மாணவர்களுக்கு ஒழுக்க கல்வி கட்டாயம் தேவை!

அ.சரவணன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சென்னை பெருங்குடியில், 12 வயது சிறுமிக்கு, தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்ற செய்தி, நாளிதழில் வெளியானது; அதை படிக்கும் போது, நெஞ்சு பதறியது.

நெல்லை மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்புத் தலைவனை, அதே வகுப்பில் பயிலும் மாணவன், தன் மீது புகார் செய்தான் என்பதற்காக, அவனை, சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இது, மிகவும் கொடூரமான செயல்!

இந்நிலையில், '12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்தால், காமக் கொடூரனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படும்' என, ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது, வரவேற்கத்தக்கது.நாட்டின் எதிர்காலம், வகுப்பறையின், நான்கு சுவர்களுக்குள் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நல்ல ஆட்சியரால் தான், நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என, தெய்வத்திற்கு முன், ஆசிரியரை வைத்துள்ளோம். பெற்றோர் ஒரு குழந்தையை, உலகிற்கு தருகின்றனர். ஆனால், மாணவருக்கு உலகத்தையே தருகிறார், ஆசிரியர்.தன் குடும்பத்தில் ஒருவராக, மாணவனை கருதும் ஆசிரியரால் தான், அந்த மாணவருக்கு தேவையான கல்வியை, சரியான முறையில் வழங்க முடியும்.

இன்றைய திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், வலைதளங்களால், மாணவர்கள் அழிவுப் பாதையில் பயணிக்கின்றனர். இக்கால கட்டத்தில், மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி முறையில், ஒழுக்கக் கல்வியையும் சேர்த்து போதிக்க வேண்டும்.'சிறந்த ஆசிரியர்கள் என்போர், சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான, இடைவெளியை குறைப்போராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் துாங்கினால், நாடே துாங்கும்' என்றார், அண்ணாதுரை.ஆசிரியர்களே... மாணவர்களின் தனித் திறனை கண்டு, ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை விதைத்து, முன்னேற உதவுங்கள்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    பள்ளிகளில் படிக்கும் ஒற்றைப் பெற்றோரின் மற்றும் விளிம்புநிலைக்கு கீழ் உள்ள பெற்றோரின் பெண் குழந்தைகளை குறிவைத்துத்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன, அவர்களுக்காக பரிந்து யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில்.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று வருவது அவர் அந்த பதவிக்கு லாயக்கில்லை என்பதால் தான், சமீபத்தில் பிஷப் காட்டன் என்றொரு புகழ் பெட்ரா பள்ளி பெங்களூரில் உள்ளது, அதன் பீஸ் படிவம் வெளியானது, என்னென்னவோ பீஸ் கள், ஆனால் அவர்களின் ஆங்கில புலமையை கேட்டகிரி என்றொரு வார்த்தையின் ஸ்பெல்லிங்கில் வெளிக்காட்டியிருந்தனர், இந்த மாதிரி பள்ளிகளுக்கு சிறுபான்மை சலுகை வேறு, தூ என்று துப்ப தோன்றியது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement