Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., முதன்மை செயலர், துரைமுருகன் அறிக்கை: 'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை' எனக் கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து, தன் கட்சி அமைச்சர்களை, அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வைத்துள்ளார். அது போல், முதல்வர் பழனிசாமியும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். ஸ்டாலினின் கட்டளையை ஏற்று, தி.மு.க., - எம்.பி.,க்களும், ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் பேட்டி: தமிழகத்தில், வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது, அனைவரும் வியக்கும் வகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மேலான தரம் கொண்டதாக இருக்கும். புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், அரசு பள்ளிகளை நோக்கி வருவர்.

'இந்தளவு தைரியமாய் நீங்க பேசினாலே, பலருக்கும், காதில் புகை வருமே... அதையும் சமாளிக்கணும்... முடியுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி பேட்டி: நான் எதற்காக, அ.தி.மு.க., பக்கம் போக வேண்டும்... மாநில கட்சிகள் தயவு இல்லாமல், காங்., தனித்தே ஜெயிக்கக் கூடிய பலமுள்ள தொகுதி விளவங்கோடு. அத்தொகுதியை என்னிடமிருந்து தட்டிப் பறிக்க, இப்போதிருந்தே பல, காங்., தலைவர்கள் முட்டி மோதுகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட அரசியலும், இதில் கலந்திருக்கிறது. இவர்கள் தான், என் மீது அவதுாறுகளை பரப்பி வருகின்றனர்.

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் அறிக்கை: அரசியல் களத்தில், புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும், ஜனநாயக வழக்கம் தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட, தி.மு.க.,வுக்கு மட்டுமே, ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்பதே, தமிழக மக்களின் மனதில் உள்ள எண்ணம்.

'நீங்க சர்ட்டிபிகேட் குடுக்கறதை விட, மக்கள் குடுக்கணும்ங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன் பேட்டி: குஷ்புவுக்கு, மக்களிடையே நல்ல செல்வாக்கு இருக்கிறது. மேடைகளில் விஷய ஞானத்துடன் பேசுபவர்; நல்ல சிந்தனையாளர். அதனால் தான், நான் மாநில தலைவராக இருந்தவரை, அவரை கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினேன். ஆனால், இப்போது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், ஏன் அவரை சரிவர பயன்படுத்தவில்லை என, தெரியவில்லை. குஷ்பு போன்றவர்களை சரியாக பயன்படுத்தினால் தான், கட்சி வளர்ச்சியடையும்.

பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி பேட்டி: முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என, ராகுல் கூறுவதை, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ராகுலின் பேச்சில், தேசப்பற்று இல்லை. கொலையாளிகளிடம், ராஜிவ் குடும்பத்தினர் இந்த அளவுக்கு கருணை காட்டுவது ஏன்... இதில், வேறு ஏதோ விஷயம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    ராஜிவ் கொலையில் சர்வதேச சதி உள்ளதாகவும், விடுதலைப்புலிகளை வைத்து இதை முடிந்ததாகவும் செய்தி வந்தது. பின்னர் அந்த விஷயம் வெளியில் வராமல் இருக்க விடுதலைப்புலிகளையே கருவறுத்து செய்துவிட்டதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதில் பரிதாபம் என்னவென்றால் ஒன்றுமறியாத லட்சக்கணக்கான தமிழர்களை நம்பவைத்து கொன்றதுதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement