Advertisement

இது உங்கள் இடம்

வெளிநாட்டு கொள்கையிலும் மோடி சாதிக்கணும்!

வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரம், கேரள மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: மத்தியில், பா.ஜ., ஆட்சி ஏற்பட்ட நான்கு ஆண்டுகளில், 19 மாநிலங்களில் அக்கட்சியின் ஆட்சி பரவியிருப்பது மகத்தான செயல்! பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால், தொழில் வணிக மற்றும் அன்னிய முதலீடுகளுக்கான வாய்ப்பு பெருகி வருகிறது.அண்டை நாடுகளான, நேபாளம், மியான்மர், மாலத்தீவு, மொரீஷியஸ், இலங்கை போன்ற நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அந்நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.

மாலத்தீவில் உள்நாட்டு பிரச்னை நிலவுகிறது. அந்நாட்டு அதிபர், 'எங்கள் நாட்டு விஷயங்களில், இந்தியா தலையிடக் கூடாது' என, வெளிப்படையாகவே கூறுகிறார். இதிலிருந்து, அவர் சீனாவின் நட்பை ஏற்படுத்தி இருக்கிறார் என தெரிகிறது. பக்கத்து நாடுகளின் நட்பை இழந்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்!

நேபாளமும், பல்வேறு விஷயங்களில், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது. மீனவர்கள் பிரச்னையால், இலங்கை நாட்டுடன் மோதல் போக்கு நிலவுகிறது.இலங்கை அரசுடன், மத்திய அரசு இணக்கமாக செயல்பட்டு, இந்திய - இலங்கை மீனவர்கள் ஒற்றுமையாக வாழ வழி வகை செய்ய வேண்டிஉள்ளது. இதே பிரச்னை குஜராத் மாநிலத்திலும் நிலவுகிறது.

பாக்., படையினரால் தாக்கப்படும் இந்திய மீனவர்களை காப்பாற்ற, மத்திய அரசு ஓடோடி உதவுகிறது. அதே மாதிரியான நடவடிக்கை கச்சத்தீவிலும் தொடர வேண்டும்.மீனவர்களின் வாழ்விடங்களுக்கு சென்று, சமீபத்தில் தமிழக கவர்னர் புரோஹித் குறைகளைக் கேட்டார். மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில், நாடு முன்னேற்றப் பாதையில் சென்றாலும், அண்டை நாடுகளுடன் கசப்புணர்வு நிலவுகிறது. வெளிநாட்டு கொள்கை யில் மாற்றத்தை ஏற்படுத்தி, அண்டை நாடுகளுடன் நட்புணர்வை, மோடி ஏற்படுத்துவார் என நம்புவோம்!

நாட்டு நடப்பை போட்டு உடைத்த வருணுக்கு பாராட்டு!

அ.பூங்கோதை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நேரடி மக்களாட்சி முறை தான், இந்தியாவிற்கு தேவை; மக்கள் சொல்வதும், நினைப்பதும் நடக்க வேண்டும். பிரிட்டனில், 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு, பிரதமருக்கு மனு அனுப்பினால், பிரதமர் அலுவலகம் அடுத்த, 48 மணி நேரத்திற்குள், அதற்கு பதில் அளித்தாக வேண்டும்.

ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு, பார்லிமென்டிற்கு மனு அனுப்பினால், அடுத்த கூட்டத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் விவாதம் நடத்தப்பட்டே ஆக வேண்டும். இங்கு, சாமானியன் குரல், சபையில் எதிரொலிப்பது இல்லை. வெளிப்படையாக, எதையும் விவாதிப்பதில்லை. உலகின் அழகான நகரங்களில் ஒன்றான, தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில், தண்ணீர் கிடையாது.

பெங்களூரில், 9 சதவீத நிலத்தடி நீர் இருப்பதாகவும், 30 ஆண்டுகளில் அதுவும் முற்றிலும் வறண்டு போகும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில், வேலையின்மை பிரச்னை உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சியால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 75 ஆயிரம் பொறியாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாட்டில் உள்ள, 500 முன்னணி கல்லுாரிகளில், 5 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கிறது. இந்திய கல்வித் துறை, தரமானதாக மாறுவதற்கு பதிலாக, பகட்டானதாக மாறியுள்ளது.

கல்விக்கு ஒதுக்கப்பட்ட, 1.3 லட்சம் கோடி ரூபாயில், 87 சதவீதம், கட்டுமானப் பணிக்கே செலவிடப்பட்டுள்ளது. கட்டுமானம் மட்டுமே தரத்தின் அடையாளம் அல்ல. நம் முன்னோர் மரத்தடியில் படித்த அறிவாளிகளாக இருந்துள்ளனர். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாமல், எந்த மாற்றத்தையும் நம்மால் கொண்டு வர முடியாது.

இப்படி எல்லாம், சமீபத்தில், கோவை தொழில் நுட்பக் கல்லுாரியில் நடந்த விழாவில், 'நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞரின் பங்கு' என்ற தலைப்பில், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,யான வருண் பேசினார்.

'அரசியல் சீர்திருத்தத்திற்காகவே, எம்.பி.,க்களை திரும்பப் பெறும் மசோதா ஒன்றை கொண்டு வந்தேன். அதற்கு ஆதரவு இல்லை' என மனம் வருந்தினார், வருண்! ஆளும் கட்சியாக இருந்தாலும், நாட்டு நடப்பை போட்டு உடைத்த, வருணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

ஆர்.கே.நகர் போல், 'கோட்டை' விட்டுடாதீங்க!

எம்.கே.பெரியசாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்றைய பிரதமர், இந்திராவின் உதவியுடன், எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைத்தார், கருணாநிதி. சர்வாதிகாரியை போன்ற இந்திராவுக்கு, 'என்றும் மக்கள் என் பக்கம்' என்பதை, அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்., உணர்த்தினார்.

கடைசி காலத்தில், எம்.ஜி.ஆரின் செல்வாக்கை உணர்ந்தார், இந்திரா; அவருடன் கூட்டணியை ஏற்படுத்தினார்; இது, வரலாறு!எம்.ஜி.ஆருக்கு பின், ஜெயலலிதா திறம்பட, அ.தி.மு.க.,வை நிர்வகித்து, ஆறு முறை முதல்வரானார். இன்று அவர் மறைவால், மாபெரும் இயக்கம் தள்ளாடுகிறது.ஜெயலலிதா மறைவு, கருணாநிதி சுகவீனத்தை பயன்படுத்தி, கட்சியை கமல் துவக்கி விட்டார்; ரஜினி, அதற்கான உத்வேகத்தில் உள்ளார்.

சமீபத்தில், சென்னை அருகே, தனியார் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்த ரஜினி, 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை ஏற்படுத்துவேன்' என்றார்.'தற்போது நடப்பது, எம்.ஜி.ஆர்., ஆட்சி தானே... இது கூட, ரஜினிக்கு தெரியவில்லையே' என, அமைச்சர்கள் சீறி பாய்ந்து உள்ளனர்.

எம்.ஜி.ஆரை நம்பி கெட்டோர் யாரும் இல்லை; நம்பாமல் கெட்டோர் பலரும் உண்டு. அவர் கஷ்டப்பட்டு உருவாக்கிய, இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ள ஆட்சியாளர்கள், இதை கருத்தில் கொண்டால், பிழைத்துக் கொள்வர். இல்லையென்றால், ரஜினியிடமோ, கமலிடமோ தோற்க நேரிடலாம்.

'எம்.ஜி.ஆர்., தந்த நல்லாட்சியை கொடுப்பேன்' எனக் கூறி, அவரது உண்மை விவசுவாசிகளுக்கு வலை விரித்துள்ளார், ரஜினி. ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., சுதாரிக்காவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்பட்ட நிலை, அடுத்த சட்டசபை பொதுத்தேர்தலில், அத்தனை தொகுதிகளிலும் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Guna - Chennai,இந்தியா

    ஜெயலலிதா ஏன் 6 முறை முதல்வரானார் என்ற கேள்விக்கு சரியான பதில் என்ன?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement