Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த் மனைவி பிரேமலதா பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பது, சந்தேகம் தான். அதற்குள், சட்டசபை தேர்தலே கூட வரலாம். உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் என, எந்த தேர்தலாக இருந்தாலும், எதையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். விஜயகாந்த் தன்னை ஒருபோதும், கறுப்பு, எம்.ஜி.ஆர்., என, கூறிக் கொள்ளவில்லை.

தி.மு.க., இளைஞரணி செயலர், மு.பெ.சாமிநாதன் பேட்டி: காவலர்கள் பல இடங்களில், வாட்டி வதைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மேலதிகாரிகள், அதிகமான பணிச்சுமையை கொடுக்கின்றனர். இதனால் ஏற்படும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிகாரிகளால் மட்டுமின்றி, பலவகையில் காவலர்கள், மனச்சுமைக்கு ஆளாகின்றனர். அவர்களின் விபரீத முடிவுகளுக்கு, இது தான் காரணம்.

தமிழக காவலர் நலப்பிரிவு, ஏ.டி.ஜி.பி., ராஜிவ்குமார் பேட்டி: காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு, பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பணி நேரங்களில், அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், நாங்கள் கண்டிப்பாக தீர்வு காண்கிறோம். அவர்களுக்கு, வீட்டில் பிரச்னை இருந்தால் ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க, கவுன்சிலிங் கூட வழங்கப்படுகிறது. பணியால் தான் மன உளைச்சல் என்பதை, முழுமையாக ஏற்க முடியாது.

'இப்படி ஏடாகூடமாய் பேசிடாதீங்க... உங்க கூற்றுப்படி, தவறு செய்பவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று அர்த்தமாகி விடும்' எனச் சொல்லத் தோன்றும் வகையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: ராஜிவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக, ராகுல் கூறியிருப்பது, அவரது மனித நேயத்தை காட்டுகிறது. அதை, நான் வரவேற்கிறேன். ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை காலம் முடிந்து சிறையில் இருப்பவர்களை விடுவிக்க, ஜனாதிபதிக்கு, சோனியா பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது தான், சிறையில் உள்ள தமிழர்களுக்கு, அது பயனளிக்கும்.

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு: எங்களுக்குள் இருக்கும் கசப்புணர்வை பயன்படுத்தி, கட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் கனவு பலிக்காது. புதிதாக கட்சி ஆரம்பித்து, 'அ.தி.மு.க.,வை கைப்பற்றுவோம்' எனக் கூறும் கோழிக் குஞ்சுகளால், எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் இருக்குமிடம் தான், உண்மையான, அ.தி.மு.க.

'அடடடடடா... இவங்க பேசி தான், தமிழகத்துக்கு உண்டான அனைத்து உதவிகளும், நிதிகளும் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது பாருங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சட்டத் துறை அமைச்சர், சண்முகம் பேச்சு: காவிரி பிரச்னைக்காக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என, ஸ்டாலின் சொல்கிறார். கனிமொழியை ராஜினாமா செய்ய ஏன் வலியுறுத்தவில்லை? அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டை நடத்த விடாமல் முடக்கி உள்ளனர். நாங்கள் ராஜினாமா செய்தால், யார் பார்லிமென்டில், தமிழகத்திற்காக குரல் கொடுப்பது?

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    என்னையும் விருந்துக்கு கூப்பிடுங்கள் என்ற ரீதியில் கருத்து சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement