Advertisement

இது உங்கள் இடம்

பிழைக்க தெரியாதவர் மாணிக் சர்க்கார்!

என்.மல்லிகைமன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திரிபுரா மாநிலத்தில், 25 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த, கம்யூனிஸ்ட் ஆட்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

'ஆண்டது போதும் சாமி' என, அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்காருக்கு, சட்டசபை பொதுத் தேர்தலில், மக்கள் டாடா காட்டி, வீட்டுக்கு அனுப்பி விட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு, மம்தா விடை கொடுத்தார். அங்கு, அவர்களால், இரண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை; அதே நிலை, திரிபுரா மாநிலத்திற்கு வந்தாலும் வரும். முதல்வர் மாணிக் சர்க்காருக்குப் பிழைக்கும் வழிகள் தெரியவில்லை.

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகள் கவுன்சிலராக இருப்பவர், சொகுசு கார், பங்களாவுடன் கோடீஸ்வரராகிறார். பாவம்... மாணிக் சர்க்காருக்கு, விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யவும், ஊர் மக்கள் சொத்துக்களை கொள்ளை அடிக்கவும் தெரியவில்லை; அரிச்சந்திரனே வெட்கப்படும் அளவுக்கு அநியாயத்திற்கு உண்மை விளம்பியாக இருந்து விட்டார்.

திரிபுரா முதல்வராக, 25 ஆண்டுகள் இருந்த அவரது வங்கி இருப்பு வெறும், 1,450 ரூபாய் தானாம்... யாராவது நம்புவரா! மற்ற மாநில முதல்வர்களெல்லாம் கோடி கோடியாக சம்பாதித்து குபேர வாழ்க்கை வாழும்போது, இவர் இப்படி இளிச்சவாயராக இருக்கிறாரே என, திரிபுரா மக்கள் வெறுத்து விட்டனர் போலும்.

டாக்டர் அப்துல் கலாம், ஜனாதிபதியாக இருந்த போது, மிக எளிமையாக வாழ்ந்தார். அப்போது, ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் ஆடம்பரமாக வாழ வழியில்லாமல் அவதிப்பட்டனராம்; அவர் பதவி முடிந்து போன பின், மகிழ்ச்சியில் ஆனந்த நடனம் ஆடினராம்!

அதே போல், மாணிக் சர்க்கார், அநியாயத்திற்கு எளிமையாக வாழ்ந்ததால், மக்கள் கோபமாகி, குபேரன் கட்சியான, பா.ஜ.,விற்கு ஓட்டு அளித்து விட்டனர்! இப்போது, பா.ஜ., ஆட்சி மலர்ந்து இருக்கிறது. இனி, திரிபுரா வறுமையில் இருந்து மீளும் என நம்பலாம்!


பியூனுக்கு காட்டும் கரிசனம் நர்சுக்கு இல்லையா?

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடகா, பீஹார் மாநிலங்களில், மருத்துவர், செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு மாநிலங்களிலும், நோயாளிகள் சிலர் இறந்து போயினர்; தமிழகத்திலும், ஊதிய உயர்வு கோரி, செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்; சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்து, பணிக்கு திரும்பினர்.

நோயாளியை குணப்படுத்துவதில், மருத்துவரை காட்டிலும், செவிலியரின் பங்கு அதிகம் உள்ளது. மருத்துவர் கடவுளாகவும், செவிலியர், கடவுளின் சேவகர்களாகவும், நோயாளிகளுக்கு தெரிவர். அவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் பணிபுரியும், ஒவ்வொரு ஊழியருமே, நோயாளிக்கு முக்கிய மனிதர்களாக காட்சி அளிப்பர்!

மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டால், நோயாளிகளின் கதி என்னாவது என, அரசு எண்ணி பார்ப்பதில்லை. செவிலியரின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானது; அதை மறுப்பதிற்கில்லை.

ஆனால், தெருவில் இறங்கி தொடர் போராட்டம் நடத்தி, நோயாளிகளை அம்போ என விட்டுச் செல்வது நியாயமா?அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்கும் தமிழக அரசு, நோயாளிகளை சகிப்புத்தன்மையோடு பராமரிக்கும், செவிலியர்களுக்கு ஏன் கிள்ளிக் கொடுக்கிறது என, கேட்கவும் தோன்றுகிறது.

பணி நிரந்தரம் ஒருபுறம் இருக்கட்டும்... செவிலியர்களின் ஊதியத்தை ஏன் உயர்த்தி வழங்கக்கூடாது! மாத ஊதியம், 7,700 என்பது மிக குறைவான ஊதியம் என்பது அரசுக்கு தெரியாதா? செவிலியர்களுக்கு, 12 மணி நேர வேலை. ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்தால், ஊதிய உயர்வு வழங்கக் கூடாது என சட்டம் உள்ளதா? அரசு அலுவலகத்தில் பணிபுரியும், ஒரு பியூனின் குறைந்தபட்ச ஊதியமே, 25 ஆயிரம் ரூபாய்!

மேஜையை துடைக் கும் பியூனுக்கே, அதிக ஊதியம் வழங்கும் அரசால், நோயாளியை தொட்டு துடைக்கும் செவிலியருக்கு, திருப்திகரமான ஊதியம் வழங்க முடியாதா?

'கோல்டன் இந்தியா' கனவு பலிக்குமா?

எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: திரிபுரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. மேகலாயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., ஆதரவு கட்சிகள் ஆட்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பிராந்திய கட்சிகள் ஆட்சி நடக்கின்றன.

விரைவில், கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அங்கு ஆட்சியை பிடிப்பதில், பா.ஜ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க, காங்கிரசும், காவிரி நதி நீர் பிரச்னையை அரசியலாக்கி வருகிறது. தமிழகத்தில், மத்திய அரசை சார்ந்தே, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசை எதிர்க்கக் கூடிய மாநிலங்கள், மேற்கு வங்கமும், கேரளாவும் தான்.

அடுத்த நகர்வாக, கேரளாவில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ., காய் நகர்த்துகிறது. கேரள மாநிலம், மலப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு சமீபத்தில் நடந்தது. அதில், 'மதவாத சக்திகளை எதிர்ப்பதற்காக, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தால், கம்யூனிஸ்டுகள் மீது நம்பகத்தன்மை சிதைந்து விடும். காங்கிரசுடன் கை கோர்ப்பது சாத்தியமல்ல; மாற்று அரசியல் அணி உருவாக்க, இடதுசாரிகள் தான் முனைய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூ,, கட்சியைச் சேர்ந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

அவரது பேச்சிலிருந்து, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை, இடதுசாரிகள் தேடுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இதை சாதகமாக வைத்தே, பா.ஜ., கேரளாவில் ஆட்சியை பிடிக்க முனைகிறது. 'வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., வெற்றி அலை வீசியதற்கு காங்கிரஸ் தான் காரணம். எதிர்க் கட்சிகளுடன் இணக்கமான கூட்டணி உருவாக்க, காங்கிரஸ் முயற்சிக்கவில்லை' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

மாநில வாரியாக, பா.ஜ., ஆட்சி ஏற்பட்டு வருவதால், மம்தாவிற்கே கலக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க, அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சி ஏற்பட்டு, 'கோல்டன் இந்தியா' என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுமா... பார்ப்போம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மாணிக் சர்க்கார் பிழைக்க தெரியாதவர் என்று யார் சொன்னது? முறைகேடாக ஆசிரியர்களை சேர்த்துள்ளார். பள்ளிக்கூடங்கள் ரோட்டோரத்தில். கண்ட இடங்களில் சிலை வைக்க தெரிந்திருக்கிறது. பாடத் திட்டங்களில் பாரத தேச தலைவர்களை நீக்கி கம்யூனிஸ்ட் தலைவர்களை பற்றி பாடம் வைக்க தெரிந்திருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement