Advertisement

இது உங்கள் இடம்

ஒரு வெற்றிடமும் ஏற்படவில்லை!டாக்டர் கே.தங்கமுத்து, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் பழனிசாமி-யும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து, போராடி, எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட, அ.தி.மு.க.-,வின் கொடியையும், சின்னத்தையும் மீட்டுள்ளனர்.

பழனிசாமி-யின் அமைச்சரவையில், கல்வித் துறை பொறுப்பு வகிக்கும், செங்கோட்டையன், ஆரவாரமின்றி, விளம்பரமின்றி, பள்ளி கல்வித் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். 'நீட்' தேர்விற்கு மாணவர்கள் தயாராக, பல மையங்களை உருவாக்கி உள்ளார்.பத்திரப்பதிவுகள் அனைத்தும், இணயதளம் மூலம் எளிதாக்கப்பட்டு உள்ளதால், லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சாமர்த்தியமாக, தமிழக அரசு சமாளித்துள்ளது. இப்படி, ஜெயலலிதா இல்லாமல், அ.தி.மு.க., ஆட்சியில் ஓராண்டு சாதனை பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு, மானிய விலையில், 'டூ - வீலர்' வினியோகிக்கப்படுகிறது. காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்றாக அழைத்து, பிரதமரை சந்திக்க தீர்மானத்தையும் போட்டார், முதல்வர் பழனிசாமி.

சென்னை அருகே, தனியார் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து பேசிய நடிகர் ரஜினி, 'தமிழகத்தில் நிலவி வரும் வெற்றிடத்தை நிரப்ப தயாராக இருக்கிறேன்' என, கூறியுள்ளார்.

சினிமாவில் நடித்து, பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ள, ரஜினி, கமல் போன்றோர், வயதாகி ஓய்வு எடுக்கும் காலத்தில், அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

முழு நேர அரசியல்வாதியான, பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரால் சிறப்பான முறையில், ஆட்சி நடந்தபடி தானே இருக்கிறது! ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வில் எவ்வித வெற்றிடமும் ஏற்படவில்லை.

அடுத்த கட்ட தலைவர்கள் திறம்பட கட்சியையும், ஆட்சியையும் நிர்வகிக்கின்றனர். ரஜினி, கமல் போன்றோரால், அரசியலில் எதுவும் சாதிக்கவே முடியாது!

வெண்ணெய் திரளும் போது பானையை உடைக்காதீர்!
சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: காவிரி நதி நீர் தொடர்பாக, 'ஆறு வார காலத்திற்குள், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்; மேலும் கால நீட்டிப்பு கோரக்கூடாது; உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து, 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்யக்கூடாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு விதிக்க முடியாது' என கூறியிருப்பது, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது. வெண்ணெய் திரண்டு வரும் வேளையில், பானையை உடைத்த கதை போல், அவரது கூற்று அமைந்துள்ளது; இது, கண்டிக்கத்தக்கது.

தமிழகம் வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். மானிய ஸ்கூட்டர் வினியோகத்தை துவக்கி வைத்த பிரதமர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் சென்றது, தமிழக மக்களையும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த தண்ணீரை கர்நாடகம் வழங்க, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழக அரசும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்!

உயர் போலீஸ் ஆபீசருக்கு கவுன்சிலிங் தேவை!
என்.நக்கீரன், ராமேஸ்வரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை அயனாவரம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவு, எஸ்.ஐ., சதீஷ்குமார், மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பணியாற்றிய ஆயுதப்படை போலீஸ்காரர், அருண்ராஜ் போன்றோர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தனர் என்ற செய்தி, போலீஸ்காரர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றுகின்றனர் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.பெயரளவிற்கு, போலீசாருக்கு மனவலிமை பயிற்சி கொடுப்பது என்பதெல்லாம் சரியான பரிகாரம் ஆகாது. போலீஸ்காரர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் என்னென்ன என்பதை பார்ப்போம்...l ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே, காவலர்கள் என்றாலே, 'நமக்கு கிடைத்த நல்ல அடிமைகள்' என்பது, உயர் போலீஸ் அதிகாரிகள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது; அந்நிலை மாறியே தீர வேண்டும்

l இன்றும், ஏராளமான போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளின் இல்லங்களில், 'ஆர்டர்லி' எனப்படும், எடுபிடி வேலையாட்களாக சேவை செய்கின்றனர். இவர்களை, எவ்வளவு கேவலமாக நடத்த முடியுமோ, அந்தளவுக்கு அதிகாரிகளின் மனைவி, மகள், மகன்கள் நடத்துகின்றனர்; இதற்கு, விடிவு பிறக்க வேண்டும்

l சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் பனியிலும் பணிபுரியும் போலீசாருக்கு, ஓய்வு, விடுப்பு எல்லாம் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்; ஆனால், தரப்படுவதில்லை

l உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம், மனைவி, மக்களோடு வீட்டில் ஜாலியாக, 'டிவி' பார்க்கின்றனர். பந்தோபஸ்து, இரவு ரோந்து பணி, விபத்தில் இறந்து போனவர்களின் உடல்களை பாதுகாப்பது என, போலீசாருக்கு மட்டும் ஏகப்பட்ட பணிகள் தரப்படுகின்றன

l உயர் அதிகாரிகளின், 'டார்ச்சர்' தாங்கமுடியாமல், ஐ.பி.எஸ்., அதிகாரி கூட, தற்கொலை செய்த சம்பவம், தமிழகத்தில் நடந்திருக்கிறது; அது எல்லாம், 'ஈகோ'வால் ஏற்பட்டது தான்.ஆங்கிலேயர் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட உளுத்துப்போன நெறிமுறைகள், இன்றும் அப்படியே காவல் துறையில் கடைபிடிக்கப்படுகின்றன. இவற்றில் மாற்றம் செய்தாலே போதும்; மனித நேயத்துடன் நடத்தப்பட்டு, மன உளைச்சல் இன்றி, பணி செய்ய போலீசாருக்கு வழி பிறக்கும்.எனவே, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தான் இன்று, கவுன்சிலிங் தேவைப்படுகிறது.

தமிழகத்திற்கு உருப்படியான திட்டங்கள் வராது!

அ.சேகர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னையில், மானிய விலையில், பெண்களுக்கு டூ - வீலர் வழங்கும் அரசு விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், பிரதமர் மோடியும் பங்கேற்றார்; அதில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து, எதுவும் பேசாமல் சென்றார்.

'பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, 1 சதவீதம் கூட, நேர்மையாக ஆட்சி செய்யவில்லை; வரும் தேர்தல்களில், தனிப்பட்ட முறையில், பா.ஜ., கட்சிக்கு லாபம் இல்லை' என, மோடி தெரிந்து கொண்டார் போலும். அதனால் தான், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசவில்லை.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'ஆறு வார காலத்திற்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர முடியாது' என, கூறியுள்ளார்; இதிலிருந்தே, வாரியம் அமைக்க, மத்திய அரசு முன் வராது என்பது தெளிவாக தெரிகிறது.

மத்திய அரசின் தயவால் மட்டுமே, ஆட்சி செய்ய முடியும் என கருதும், முதல்வர் பழனிசாமி தரப்பினர், பா.ஜ., குறித்தோ, பிரதமர் குறித்தோ கருத்து ஏதும் கூறாமல் உள்ளனர்.தமிழகத்தில், எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்கும், பா.ஜ.,விற்கோ, அதற்கான வாய்ப்பே இல்லை. அண்டை மாநிலமான, கர்நாடகாவில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதுவரை, ஒரு துளி காவிரி நதி நீர் கூட வந்து சேரப்போவதில்லை.ஆறு வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமையவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தமிழக அரசு தொடரலாம்.

மோடியும், நிதின் கட்கரியும், தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும் எனில், தமிழக மக்கள், பா.ஜ.,விற்கு ஆதரவான மனநிலைக்கு வர வேண்டும்; இது, இப்போதைக்கு சாத்தியமில்லை. காவிரி நதி நீர் பிரச்னையில், பா.ஜ., மட்டுமல்ல; காங்கிரசும் கண்டுகொள்ளாது.கர்நாடக மாநிலத்தை தக்க வைக்க, ஆளும் காங்கிரசும், ஆளத் துடிக்கும், பா.ஜ.,வும், தமிழகத்திற்கு எதிரான நிலைபாட்டை தான் எடுக்கும். ஓட்டு வங்கியை கணக்கிடும், தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு, உருப்பாடியான திட்டங்கள் கிடையாது!


வாங்கிய கடனைசெலுத்தாதோருக்கு 'ஆப்பு' வைக்கணும்!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற பெரும் புள்ளிகள், வங்கிகளில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல், 'ஏப்பம்' விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.

இன்று, பெற்றோர் பலர், வங்கி பணியாளர்களிடம், மேலாளரிடம், கெஞ்சி, கை கட்டி நின்று, தங்கள் குழந்தைகளுக்கு கல்விக்கடன் பெறுகின்றனர். கல்விக் கடன் பெற்ற பின், அதை திருப்பி கேட்கும் வங்கிகளிடம், நிமிர்ந்து நின்று, 'இப்போதைக்கு தர முடியாது' என கறாராக கூறுகின்றனர்.

கடன் வாங்கும் போது, ஒரு பேச்சும், கடனை திருப்பிக் கட்டச் சொன்னால், வேறு மாதிரியும் பேசுகின்றனர். வங்கிகளில் கடனை வாங்கி, தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக நினைத்து, கடனை திருப்பிச் செலுத்தாமல் நிமிர்ந்து நடப்பவர்களால், இன்று வங்கிகள் தலைகுனிந்து போய் விட்டன.

நாடு சுதந்திரமடைந்த பின், அரசு வங்கிகளில் கடன் பெற்றோர் பலரும் திருப்பி செலுத்துவதில்லை. வசதி இருந்தும், கடனை கட்டாமல் இருப்பவர்கள் தான் அதிகம். பல லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன், வங்கிகளுக்கு உள்ளது.

பெரிய நிறுவனங்கள், தொழிலகங்கள், கம்பெனிகள், பல நுாறு கோடி ரூபாய் கடனை வாங்கி, ஏப்பம் விட்டு நிமிர்ந்து நிற்கின்றன. இப்படியாக, வசதி படைத்தவர்களே அரசு பணத்தை அனுபவித்து வருகின்றனர்.

தன் மகன், மகளுக்காக, வங்கியில் வாங்கிய கல்வி கடனை செலுத்தாமல் பலரும் காலத்தை கடத்துகின்றனர். கடன் வாங்கி படித்த பின், அரசு பணியில் சேர்ந்த பிறகும் கூட, கடனை செலுத்த மறுக்கின்றனர். 'கல்விக் கடன், கல்வி கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும்' என்ற எதிர்பார்ப்பில், பலர் காத்து இருக்கின்றனர். இந்த மனநிலையை மாற்ற, வங்கித் துறை, மத்திய அரசு தெளிவான முடிவை சொல்ல வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தாத, சாமானியர் முதல், பெரிய பணமுதலைகள் வரை, யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சரியான நடவடிக் கை எடுத்தாக வேண்டும்!
மோடியால் ஊழலற்ற பாரதம் உருவாகட்டும்!
ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: வங்கிக் கடன் மோசடி மற்றும் பொருளாதார குற்றங்களை செய்து, வெளிநாடு தப்பி செல்லும் ஊழல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் ஏமாற்று ஆடிட்டர்களுக்கு எதிராக, மத்திய அரசு புதிய சட்டம் அமல்படுத்த உள்ளது; இது, மிகவும் வரவேற்கத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே, இத்தகைய சட்டம் இயற்றப்பட்டு இருந்தால், வங்கிகளின் வாராக்கடன்கள் பெருமளவில் குறைந்திருக்கும்; அரசு கஜானாவும் நிறைந்திருக்கும். விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற ஊழல்வாதிகள் உருவானதையும் வேரோடு களைந்திருக்கலாம்.தற்போது, காலங்கடந்து இயற்றப்படும் சட்டமாக இருந்தாலும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டப்படி, குற்றத்தால் கிடைக்கும் லாபத்திற்கு நிகரான சொத்துகளை மட்டுமே, பறிமுதல் செய்ய முடியும்!

புதிய சட்டப்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும். இதை எதிர்த்து, ஊழல்வாதிகள், எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதும், இச்சட்டம் பாய வேண்டும். ஒரு அரசியல்வாதி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, குறிப்பிடும் சொத்து மதிப்பை விட, தன், ஐந்தாண்டு ஆட்சி காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்திருந்தால், உடனடியாக, இச்சட்டத்தால், அவரது அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், வருங்காலங்களில், ஊழல்வாதிகளின் அரசியல் படையெடுப்பு முற்றிலும் குறைந்து விடும். நல்லவர்கள் பெருமளவில் தைரியமாக, அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். நாட்டில் துாய்மையான அரசியல் மலரும்; எங்கும், எதிலும் நேர்மையை காணலாம்.தமிழகத்தில், மீண்டும் காமராஜர் ஆட்சி மலர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மோடி அரசின் அதிரடி சட்டத்தால் ஊழலற்ற பாரதம் உருவாகட்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement