Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி பேட்டி: தற்போது, ௧௦௦ சதவீத மின்மிகை மாநிலமாக, தமிழகம் இருக்கிறது; எதிர்காலத்திலும் இருக்கும். மக்களின் மின் தேவையை கணக்கிட்டு, அதற்குத் தகுந்தபடி, புதிய மின் உற்பத்தி திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்பாடுகளால், கோடை காலங்களில் கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை.

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், 'டுவிட்டரில்' கருத்து பதிவு: சிரியாவில் அப்பாவி மக்களும், ஏதுமறியாத சிறு குழந்தைகளும், கொத்து கொத்தாகக் கொல்லப்படுவது, இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பயங்கரவாதிகளும், அவர்களுடன் மோதும் ராணுவமும், துணை நிற்கும் வல்லரசுகளுமாக, பலமுனை தாக்குதலில் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை, ஐ.நா., சபை தலையிட்டு, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தினகரன் ஆதரவாளர், தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி: குக்கர் சின்னத்தையும், 'அ.தி.மு.க., அம்மா அணி' என்ற பெயரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், எங்கள் அணி சார்பில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, 100 சதவீதம் வெற்றி பெறுவோம். பின், அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றுவோம்.

ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ அறிக்கை: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, நாம் கோரி வரும் நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களை, பெட்ரோலிய ரசாயன மண்டலமாக, மத்திய அரசு அறிவித்து விட்டது. மேலும், மேகதாது, ராசி மணலில், காவிரிக்கு குறுக்கே, கர்நாடகா புதிய அணைகள் கட்ட, மத்திய அரசு ரகசியமாக பச்சைக்கொடி காட்டி உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு, சொட்டு தண்ணீர் கூட வரப்போவது இல்லை.

'வாங்கய்யா... வாங்க... மாட்டிக்கிட்டீங்களா...' என்ற மன ஓட்டத்துடன், பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: ஈ.வெ.ரா., குறித்து முகநுாலில், எச்.ராஜா பதிவு செய்யவில்லை. அதற்காக, அவரும் மன்னிப்பு கேட்டு விட்டார். விநாயகர் சதுர்த்தி நாளில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், முகநுாலில் வாழ்த்து தெரிவித்துவிட்டு நீக்கினார். அப்போது, 'அட்மின்' தான் அதை பதிவு செய்ததாகக் கூறினார். அது போலத் தான், இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

'அச்சச்சோ... பிரதமர் பதவிக்கெல்லாம் யாராவது வந்துட்டா, நாட்டுக்கே ஆபத்தாச்சே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர் பேச்சு: ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு, மோடி பதில் கூற முடியாமல் திணறி வருகிறார். அடுத்து வரும் தேர்தலில், ராகுல் பிரதமர் ஆவார்; தமிழகத்தில், காங்., மேலும் வலுப்பெறும்.

மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல் பேச்சு: எனக்கு பிடித்த தலைவர் என்றால், என் அம்மா தான். எங்கள் அம்மாவுக்கு அரசியல் தெரியாது. அன்பு மட்டும் தான் தெரியும். அவர் கடைசி வரை எனக்கு, தலைவியாக வாழ்ந்து தான் மாண்டார். எங்களை பராமரித்தவர்கள், அவரை பராமரிக்கவில்லை. அதனால் தான், அவர் இல்லாமல் போய்விட்டார். அவரை மிஞ்சிய தலைவியை தேடிக் கொண்டிருக்கிறேன்.

'நீங்க இப்படி இடித்துரைக்கிறது, அந்த அமைச்சர்கள் காதுல ஏறுதான்னு பார்ப்போம்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி: அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையின் முகத்தைப் பார்க்கும்போது, பழைய நடிகை அங்கமுத்துவின் ஞாபகம் தான் வருகிறது. இத்தனைக் குறைபாடுகள் இருந்தபோதும், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சுருட்டிக்கொண்டு போவோம் என்ற ஒரு விஷயத்தில் மட்டும், அத்தனை அமைச்சர்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

'எல்லாத்துக்கும் அவசரக் குடுக்கையா நீங்க செயல்படுறதுலேர்ந்தே, உங்களிடம் தலைமைப் பண்பே இல்லேங்கறது வெட்ட வெளிச்சமாகுது... பேசாம, குடும்பத்தோடு, 'செட்டில்' ஆகிடுங்க... அது தான் உங்களுக்கு நல்லது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ஜெ., அண்ணன் மகள் தீபா பேட்டி: அத்தை மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை கண்டுபிடித்ததை, மக்களுக்கு தெளிவுப்படுத்தத் தவறிவிட்டது. சசிகலாவுக்கு எதிராக துவங்கப்பட்ட இந்த விசாரணை ஆணையம், அவருக்குச் சாதகமாகச் செயல்படுகிறதோ என, நினைக்க வைக்கிறது. இதனால் தான், அத்தையின் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்கிறேன்.

'கருணாநிதிக்கு மட்டும் பேச முடிஞ்சிருந்தா, உங்க கதை கந்தல் தான்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மைச் செயலர் துரைமுருகன் பேட்டி: நான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன். கருணாநிதியை விட, செயல் தலைவர் ஸ்டாலின், விவேகமாக செயல்படுகிறார்.

'கடந்த தேர்தல் கூட்டணிகளை எண்ணி அசைபோடும்போது, சில பேர், வாயைத் திறக்காமல் இருந்திருந்தாலே, தமிழகத்துக்கு நல்லது நடந்திருக்குமோன்னு தோணுது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேட்டி: அ.தி.மு.க., தன் கடைசி அத்தியாயத்தை எழுதி வருகிறது. அ.தி.மு.க.,வின் அழிவு, தி.மு.க.,வுக்கு சாதகமாக மாறும் என, ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை. நல்ல மாற்றம் வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிக்கட்சி முதல், தற்போதுள்ள திராவிட இயக்க சிந்தனைக்கு முடிவுரை எழுதும் காலம், ரஜினி மூலம் கனிந்து விட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement