Advertisement

இது உங்கள் இடம்

தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டாமா!எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுது கிறார்: அரசியல் பயணத்தை வெற்றிகரமாக துவக்கி இருக்கிறார், நடிகர் கமல். இது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பது, அவர்களின் அர்த்தமற்ற அறிக்கையின் மூலம் தெளிவாக தெரிகிறது.

'சினிமாக்காரனால் அரசியலில் ஜெயிக்க முடியாது' என, அபத்தமான வாதத்தை முன் வைக்கின்றனர்; இதை, ஏற்க முடியாது. தி.மு.க.,வில் இருந்த போதும், அ.தி.மு.க.,வை துவங்கிய பின்பும், எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு அடித்தளம் இட்டதே, சினிமா கவர்ச்சி தான்!

'கமல் காகிதப்பூ. அது என்றும் மணக்காது' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். அந்த கருத்தை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரும் ஆதரித்து பேசினார். மணக்கும் அழகான ரோஜா செடியின் அடியில் தான் பாம்பு பதுங்கி யிருக்கும்; மனதை மயக்கும் மல்லிகையின் வாசனை திரவியம், தோலில் அலர்ஜியை ஏற்படுத்தும். இதை எல்லாம் ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும்.

எதிரியை குறைத்து மதிப்பிடுவது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லை' என, அலட்சியமாக இருந்த ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட வரலாறும் உண்டு!

கடந்த, 1967ல் நடந்த, தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், சுதந்திரா கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழரசு கழகம், பிரஜா சோஷலிஸ்ட் போன்ற அனைத்து கட்சிகளையும் இணைத்து, மெகா கூட்டணியை ஏற்படுத்தினார், அண்ணாதுரை.

எதிரிகளை குறைத்து மதிப்பிட்ட காமராஜர், 'எட்டு நொண்டிகள் கொண்ட இந்த கூட்டணியை எதிர்த்து, படுத்த படியே ஜெயிப்பேன்' என, அலட்சியமாக கூறினார். தி.மு.க., மாணவர் தலைவர், பெ.சீனிவாசனிடம் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில், பரிதாபமாக தோற்றார் காமராஜர்.

'மணம் வீசாத ரூபாய் நோட்டு என்ற காகிதப் பூக்களை காட்டி, தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது' என்பதை, அ.தி.மு.க., உணரும் காலம் வெகு துாரத்தில் இல்லை. நேர்மை, தொலைநோக்கு சிந்தனை, மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அரசியலுக்கு வந்தால் தான், தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும்!

----

எதிர்மறையான சிந்தனைகள் வேண்டாம்!ஆர். சேஷாத்திரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், ஊழல் வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரி இருக்கும்' என்கின்றனர், சிலர்; அப்படி என்றால் சட்டம், நீதி எல்லாம் எல்லாருக்கும் பொது இல்லையா... நீதி ஜெயலலிதா போன்றோருக்கு வளைந்து கொடுக்குமா?

'கருணாநிதி மட்டும் நல்ல உடல் நிலையுடன் இருந்து இருந்தால், இத்தனை நாள், பழனிசாமி அரசை விட்டு வைத்திருக்க மாட்டார். ராஜதந்திரி வேலை பார்த்து, நிச்சயம் கலைத்து இருப்பார்' என, வேறு பலர் கூறுகின்றனர். இன்று, தீயவற்றை எல்லாம் நல்லவையாக எண்ணத் துவங்கி விட்டனர். நல்லக்கண்ணு போன்ற நல்லவர் எல்லாம், இன்று நாட்டில் பிழைக்க தெரியாதவர் என எண்ணுகின்றனர் போலும். ஊழல் செய்தவர்களை, கில்லாடி என்றும், சாமர்த்தியசாலி என்றும் சொல்கின்றனர்.

மெஜாரிட்டி அரசை எப்படி கவிழ்க்க முடியும்? ஸ்டாலினுக்கு அந்த வழி பிடிக்கவில்லை. கருணாநிதி அரசியல் வேறு; ஸ்டாலின் பாணி வேறு. 'ஜனநாயக ரீதியில், வெற்றி பெறுவோம்' என்ற நம்பிக்கையில், ஸ்டாலின் உள்ளார்.ஆர்.கே.நகர் தேர்தலில், பணத்தை தண்ணீராக வாரி இறைத்து, தினகரன் ஜெயித்தார். பணத்தை, அதுவும் ஊழல் பணத்தை வாரி இறைத்தார். இது தந்திரமா?

தமிழ் சினிமாக்களில், கல்லுாரி மாணவி கேரக்டரில் நடிக்கும் நடிகை, ரவுடிகளை காதலிப்பது போல் காட்டுகின்றனர். படித்த பெண்கள், ரவுடிகளை எப்படி விரும்புவர்? கொஞ்சமாவது, லாஜிக்கா படம் எடுக்க வேண்டாமா? அன்று, காதலை புனிதமாக படம் பிடித்து மக்களுக்கு காட்டினர். இன்று, எதிர்மறையான எண்ணங்களை நியாயப்படுத்துவதால், நாடு கெட்டுப் போகிறது. நல்லவர்களை ஆதரிக்க வேண்டும்; தீயவர்களை ஒழித்தே தீர வேண்டும்!
---

'ரப்பர் ஸ்டாம்ப்' காலம் மலையேறி போச்சு!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மாநிலத்தில், முதல்வர், துணை முதல்வர், உயர் கல்வி, பள்ளி கல்வித் துறை உள்ளிட்ட துறைவாரியாக அமைச்சர்கள் இருக்கின்றனர்; கல்வித் துறைக்கான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். இவர்கள் எல்லாம் சரியாக நிர்வாகம் செய்திருந்தால், பல்கலையின் நிலை, இன்று பல் இளித்து இருக்காது!

கோவை பல்கலையில், உதவி பேராசிரியர் பணிக்காக, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சிறை சென்ற துணைவேந்தர் கணபதி ஜாமினில் வெளி வந்துள்ளார். இன்னும் பல துணைவேந்தர்கள் மீது, முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. நாட்டில், ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் என்பது, வெறும், 'ரப்பர் ஸ்டாம்ப்' என, சர்வசாதாரணமாக கூறப்படும் கருத்தாக, அன்று இருந்தது. இன்று, நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்பதவியில் இருப்போர், மக்கள் நலனுக்காக, மாநில நலனுக்காக சாட்டையை சுழற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

உயர் கல்வித் துறையில் அதிகரித்து வரும் நிர்வாக சீர்கேடு, ஊழல் ஆகியவற்றை தட்டிக் கேட்க, தமிழக கவர்னர், புரோஹித், பல்கலை துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதிகாரிகள் கடமை தவறும் போது, தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை, கவர்னருக்கு ஏற்பட்டு விட்டது. பள்ளியின் முதல்வர் சரியில்லாததால், பள்ளியின் தாளாளர் களம் இறங்கி, நடவடிக்கை எடுப்பது போல், பல்கலை நிலை மாறி விட்டது.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற அமைப்பிலிருந்து போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து, அமைச்சர்கள், முதல்வர் இன்னும் பேசவில்லை. போராட்டக் குழு அமைப்பாளர்களை, அழைத்து பேசி, குறைகளை கேட்டு, கவர்னர் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

போக்குவரத்து, மின் வாரியம், மக்கள் நலத் துறை, டாஸ்மாக், ரேஷன் கடை என, அனைத்து துறைகளின் தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்து, கவர்னரே பேச வேண்டும் என்ற நிலைக்கு, அரசின் செயல்பாடுகள் உள்ளன. முதல்வரிடம் முறையிட்டு தீர்வு ஏற்படாதவற்றிற்கு, கவர்னரிடம் முறையிட்டு தீர்வு ஏற்பட்டு விட்டால், அது, மாநிலத்திற்கும், மக்களுக்கும் நல்லது தானே!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • POORMAN - ERODE,இந்தியா

    ஜாக்டோ - ஜியெவ். இவர்கள் தான் உண்மையிலேயே நாட்டை கொள்ளையடிக்கும் white color கிரிமினல்ஸ். சாதாரண தமிழனின் சராசரி தமிழனை விட இவர்கள் உண்மையில் 35 % உழைப்பை மட்டுமே தருகிறார்கள் . சம்பளம் மட்டும் லட்ச கணக்கில். தமிழ் நாடு உருப்படாமல் போக இவர்களே காரணம். நாட்டில் 20 % வருமானம் மட்டுமே அரசு உழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்ய பட வேண்டும். ஆனால் இவர்களுக்கு கடன் வாங்கி சம்பளம் போடும் நிலையில் அரசு உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement