Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இந்த விவகாரம் தெரியாமலா, பிரதமர் மோடி காய் நகர்த்துவாரு...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், ஆந்திர மாநில நகரி தொகுதி, எம்.எல்.ஏ., நடிகை ரோஜா பேட்டி: மத்திய அரசில், கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி அனுபவித்து வந்த, தெலுங்கு தேச அமைச்சர்கள் இருவர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது, வெறும் நாடகம். ஆந்திராவில், இவ்வாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் வர உள்ளன. இதனால், மக்களை சந்திக்க, மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை, முதல்வர் சந்திரபாபு கையில் எடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நான்கு மாநிலத்திற்கு தேவையான நீரை, காவிரி மேலாண்மை வாரியம் வழங்கும். நதிநீர் பங்கீடு குறித்து, தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நான்கு மாநிலங்களை அழைத்து பேசவோ, ஆய்வு செய்யவோ, எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசு காலதாமதம் செய்யக் கூடாது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: ஈ.வெ.ரா.,வை மீண்டும் மீண்டும், எச்.ராஜா விமர்சிப்பதற்கு, பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும் கொடுக்கும் ஆதரவே காரணம். 'ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என, அமித் ஷா கூறியுள்ளார். ராஜாவின் வரம்பு மீறிய பேச்சின் பின்னணியில், மோடியும், அமித்ஷாவும் இருப்பதையே இது காட்டுகிறது.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமல் பேச்சு: ஊழல் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பதை, பகிரங்கமாக அறிவிக்கிறேன். ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து, ஒரு கும்பிடு போட்டு நான் சென்றிருக்கலாம். அங்கு, மக்கள் ஆட்சியாக அமையாது என்பதால் போகவில்லை. கயவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். இது, தேர்தல் வாக்குறுதி அல்ல; கட்சி ஆரம்பிக்கும்போதே கொடுக்கும் வாக்குறுதி.

தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி அறிக்கை: சரிபாதி பெண்கள் வாழும் நாட்டில், 33 சதவீத இடஒதுக்கீட்டிற்காக இன்னும் போராடத்தான் வேண்டியுள்ளது. சமூகமும், அரசும், வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சற்று தள்ளி நின்றே வேடிக்கைப் பார்க்கின்றன. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பும், 21ம் நுாற்றாண்டில் தான், பெண் சிசுக் கொலைகளும், வரதட்சணைக் கொடுமைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கதையாக உள்ளன.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு: நான் ஒரு ஹிந்து; அதில் பெருமையடைகிறேன். நான், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட மாட்டேன். யாராவது ரம்ஜான் பண்டிகையை, அமைதியாகக் கொண்டாட எண்ணினால், அரசு அவர்களுக்கு முழு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வழங்கும். நான், வீட்டில் பூணுால் அணிந்து வழிபாடு செய்துவிட்டு, வெளியே குல்லா அணிந்து தொழுகையில் ஈடுபடுவதில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement