Advertisement

கலெக்டர், காவலர் பணி அவ்வளவு எளிதல்ல

சென்னையில், முதல்வர் பழனிசாமி தலைமையில், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்திருக்கிறது. ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை, இது பிரதிபலித்திருக்கிறது. ரவுடிகள், முன்விரோதம் அல்லது வேறு பல காரணங்களால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்தது, தமிழகம் எந்த அளவு தன் முந்தைய நிலையில் இருந்து இறங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, மதுரை, தென்கோடி மாவட்டங்கள் என, பல இடங்களில், ஆயுதங்களுடன் குழுக்களாக வலம் வருதல், சமயங்களில் இரு குழுக்களிடையே மோதல், மதுரை அருகே நடந்த ரவுடி என்கவுன்டர் சம்பவம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, இவர்கள் வாழும் பகுதியில், அப்பாவி மக்களும் அன்றாட வாழ்வை நடத்துகின்றனர் என்பது தெரிகிறது. இச்சம்பவங்களில் கைது செய்யப்பட்ட சிலர், சிறைக்கு போகும் போது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டனரா என்பதும் கூடுதலாகத் தெரியவரும். தேசப் பாதுகாப்பிற்கும், மாநிலப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் இக்கூட்டத்தில் வலியுறுத்திஉள்ளார். இவர்களில், நக்சல் ஆதரவு சக்திகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் இருக்கலாம். தெலுங்கானாவில் வேட்டையாடப்படுவதால், இங்கே வந்து பாமர மக்களுடன் இணையும் அபாயம் அதிகம். கலெக்டர்களும், காவல் துறை அதிகாரிகளும் இரு கண்களைப் போல செயல்படுவது நல்லது என்றாலும், ஐகோர்ட்டில் அளிக்கப்படும் பல்வேறு பொதுநல வழக்கின் தீர்ப்புகளைப் பார்க்கும் போது, காவல் துறை மற்றும் நிர்வாகம் தாமதமாக செயல்படுவதை உணர முடியும். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர், 'சைபர் கிரைம்' உட்பட சில விஷயங்களை, சிறப்பாக கையாளும் போது, பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கமாகி வருகிறது. இம்மாதிரி ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு ஏற்படும் பட்சத்தில், அடிப்படை விஷயம் மங்கிப் போவது இயல்பு. அப்படி குழப்பங்கள் அதிகரிக்கும் போது, 'கோப்புகள், காகித நிலை'யைத் தாண்டி செயல்படும் கருவியாக மாறுமா என்பது இனி தெரியும்.குட்கா, போதைப் பொருள் கடத்தல், தமிழகத்தில் மிகவும் அதிகம் என்ற கருத்தை ஏற்படுத்தும் வகையில், அதிகமாக அவை பிடிபடுகின்றன. சிலர் கஞ்சா செடியை வளர்த்து, அதை இட்லிமாவில் சேர்த்து பணியாரம் ஆக்கும் தகவல், தமிழகத்தின் புதிய சமையல் கலாசாரம். போதை, தங்கம் கடத்தலில் கருவியாக செயல்படுபவரை இயக்கும், 'தாதா' எவர் என்பதை எளிதில் கண்டறிவது சுலபம் அல்ல. இதைவிட சிறிய நகரங்கள் உட்பட பல நகரங்களில், தங்கச்செயின் பறிப்பு, கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்து பணம் சம்பாதிக்கும் செயல், ஒரு பெரும் அபாயமாகும்.வளர்ந்து வரும் சிற்றுார்களில், கறைபடியாத போக்கும், சைபர் கிரைம் பற்றிய அடிப்படை அறிவும் கொண்ட காவலர் நிறைய தேவை. இவர்களை பணி நியமனம் செய்வதால், சட்டம் - ஒழுங்கு முக்கியத்துவம் பெறலாம். மாவட்ட கலெக்டர்களுடன் அல்லது அதற்கடுத்த பொறுப்பில் உள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் எளிதாகவும் செயல்பட முடியும்.தண்ணீர் கிடைக்காத பிரச்னை, நீர்நிலைகளில் கழிவு கலப்பு, அபார அளவுக்கு குப்பை சேர்ந்து அதனால் எழும் பாதிப்புகள், மருத்துவமனையில் திடீர் மரணங்கள் ஏற்பட்டால், அதை எதிர்த்து சிறிய கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் என்பனவும், இப்போது நிர்வாக இயந்திரத்தின் தினசரிப் பணிகளைத் தடுக்கும் சம்பவங்களாகி விட்டன.சமூக விரோத கும்பலையும், அவர்களைத் துாண்டுவோர் யார் என்பதையும் எளிதில் அடையாளம் காணுவது, உள்ளூர் போலீசாருக்கு எளிதானது என்ற காலம் மாறிவிட்டது. காரணம், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், குறைந்த சம்பளப் பிரிவினர், எங்கு குடியமர்ந்து வாழ்கின்றனர் என்பதைக் கண்டறிய, இதுவரை ஒரு நிரந்தர செயல்திட்டம் கிடையாது. 'ஆதார்' அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, மொபைல் எண் ஆகியவை மட்டுமே, ஓரளவு ஆதாரங்களாக உள்ளன.காவல் துறை புதிது புதிதாக வரும் குற்றங்களை சமாளிக்க, என்கவுன்டரில் இறங்கினால், அது தீர்வாகாது.இதில், கோவில்களில் தீ, அங்குள்ள விலைமதிப்பற்ற சிலைகள் பல ஆண்டுகளாக காணாமல் போன விவகாரம், பாலியல் தொடர்பான கொலைகளில் புதிய புதிய உத்திகள், திருட்டு சம்பவம் அதிகரிப்பு ஆகியவை காவல் துறைக்கு இப்போதுள்ள புதிய சவாலாகும்.பல விஷயங்களில், மாவட்டங்களில் ஏற்படும் அன்றாடப் பிரச்னைகளை கையாளுவதில், பாரபட்சமில்லாத புதிய பார்வையை அரசு உருவாக்க, இந்த ஆலோசனை பயன்பட வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement