Advertisement

இது உங்கள் இடம்

தேர்தல் நேரத்தில் சரியான பதிலடி கிடைக்கும்!
கு.அருணாசலம், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடலுார் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவர், பிரசாத் மு.வடநேரே; மிக நேர்மையான, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மக்கள் குறைதீர் தீர்க்க, அரசு பஸ்சில் பயணித்து, கிராமங்களுக்கு சென்றார்.

கலெக்டர் வீட்டில் வேலை செய்யும் சமையல்காரரே, காய்கறி வாங்க அரசு காரை உபயோகிக்கும் இக்காலத்தில், டவுன் பஸ்சில், கலெக்டர் சென்றார் என்ற செய்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கடலுார் மாவட்ட அரசு அலுவலகங்களில், ஒழுங்காக பணிகள் நடந்தேறின. கலெக்டரை பார்த்து நேரில் மனு கொடுத்தால், கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை, ஏழை - எளிய மக்களுக்கு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் நிரப்பப்படாமல் இருந்த, அங்கன்வாடி பணியாளர்கள் பதவியை, லஞ்சம் பெற்று நிரப்பலாம் என, கங்கணம் கட்டி, ஆளும் கட்சியினர் களம் இறங்கினர். சிபாரிசுகளை ஏற்காமல், தகுதியுள்ளோருக்கு பணிகளை வழங்க ஏற்பாடு செய்தார், கலெக்டர். கடுப்பான, ஆளும் கட்சியினர், 'கலெக்டரை மாற்றியே தீர வேண்டும்' என, போர்க்கொடி துாக்கினர்.

மானிய விலையில், டூ - வீலர் வினியோக திட்டம் தற்போது, மாநில அரசால் துவக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டோருக்கு, வாகனத்தை வாங்கி தர, ஆளும் கட்சி தரப்பினர் முயன்றனர். 'தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வாகனத்தை நிச்சயம் பெற்று தருவார்; முறைகேடு எதுவும் நடக்காது' என, மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர்.அதற்குள், கலெக்டர் பிரசாத், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மிகவும் பின்தங்கிய மாவட்டமான, கடலுாருக்கு கிடைத்த நேர்மையான அதிகாரியை, ஆளும் கட்சியினர் துாக்கி அடித்துள்ளனர்.

அன்று, மதுரையில் கனிமபொருட்கள் கொள்ளையை தடுத்த, கலெக்டர் சகாயம், பல துறைகளுக்கு துாக்கியடிக்கப்பட்டார். இன்று, ஏழை மக்களுக்கு, அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைய வேண்டும் என கருதிய, நேர்மையான, மற்றொரு கலெக்டர் பந்தாடப்படுகிறார். இதற்கெல்லாம், தேர்தல் நேரம் வரும்போது, சரியான பதிலடி கிடைக்கும்!


கட்சி போணியாக 'திராவிடம்' தாங்குகின்றனர்!

எல்.விஜயராகவன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'சமத்துவம் காக்குமா திராவிடம்?' என்ற தலைப்பில், இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், நீதி கட்சி உருவான கதையை கூறி இருந்தார்.

அன்றைய சென்னை மேயரை, சென்னை கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, கோபுரத்தின் மீது ஏற விடவில்லை என, கூறி இருந்தார்.வாசகருக்கு சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்... சென்னை கபாலீஸ்வரர் கோவில் போன்று, எந்த சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தாலும், முதலில் ஹோமங்கள், யாகசாலை மற்றும் கலச பூஜைகள், ஆகம முறைப்படி நடந்தேறும்; அதற்காகப் பணிக்கப்பட்டோர் அதை செய்வர்.

அதுபோல, கும்பங்களுக்கு நன்னீராட்ட, புனித நீரை, அதற்காக பணிக்கப்பட்ட, 'ஆதி சைவர்கள்' எனப்படும் சிவாச்சாரியார்கள் மட்டுமே, கோபுரத்தின் மேல் எடுத்துச் செல்வர். மந்திரங்கள் ஓதி, அப்பணியை முறைப்படி செய்து முடிப்பர். அங்கு, அவர்களுக்கு வேறு பணி கிடையாது.அதற்காக நியமிக்கப்பட்டவர்களே அன்றி, வேறு எவரும், அவர்கள் அந்தணர்களே ஆனாலும், அல்லது செல்வாக்கு மிக்க முக்கியப் பிரமுகராக ஆனாலும், கோபுரத்தின் மீது ஏற முயல மாட்டார்கள்.

கோவில்களை கட்டிய மன்னர்களும், கோவிலுக்காக மானியங்களை வாரி வழங்கிய புரவலர்களும், பூசனைகள், குடமுழுக்கு போன்ற கோவில் விழாக்கள், ஆகம முறைப்படி நடைபெறுகிறதா என்பதில் கருத்தாக இருப்பர்; அவர்களுக்கும், கோபுரத்தின் மேல் செல்லும் வழக்கம் இல்லை.

இங்கு எது முக்கியம் என்றால், சமூகப் பிரிவு பிரச்னையோ, பதவிப் பிரச்னையோ அல்ல. பல்லாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய புனித நிகழ்வில், அன்று போல், ஆகம முறை பின்பற்றப்படுகிறதா என்பதே தவிர, வேறு சர்ச்சைகளுக்கு இடமில்லை!

இன்றைய சூழலில், ஆரியம், திராவிடம் என்பதெல்லாம், காலாவதி ஆகிவிட்ட மாயைகள்; இதை, 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று பாடிய, நாமக்கல் கவிஞர், தன் நுாலில் தோலுரித்துக் காட்டி விட்டார்.தமிழகத்தில் மட்டும், திராவிட என்ற சொல், 'பிராண்ட் பெயர்' போல், பல கட்சிகளுக்கு ஆகி விட்டது. கட்சியின் பெயரில், அது இருந்தால் தான், கட்சி போணியாகும் என எண்ணியே, அதைக் கெட்டியாக பிடித்து வைத்துள்ளனர்!


சகிப்புத்தன்மை இல்லையே...!

-மா.கருணாநிதி, காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவல் துறையிலும், ராணுவத்திலும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள் கையில் அலுவல் அடிப்படையில், உயிரை கொல்லக்கூடிய ஆயுதமான, துப்பாக்கி கொடுக்கப்பட்டிருப்பது தான்!

பயிற்சியின் துவக்கத்திலேயே, ஆயுதங்களை எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம், நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு பின், அவர்கள் மனதளவில் பக்குவம் அடைந்து விட்டதை, உறுதி செய்த பின் தான், ஆயுதங்கள் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

எல்லா துறைகளிலும், புதிதாக பணியில் சேர்ந்து பணியாற்ற துவங்குவோருக்கு, ஆரம்ப கால சிரமங்கள் சற்று கடுமையாக இருக்கும். சரியான முறையில் பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளாதோருக்கும், திறமையற்றோருக்கும், கீழ் பணிபுரிவோரை வரம்பின்றி திட்டி தீர்க்கும் பலவீனமான அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டோருக்கும்,

தாங்கள் பணிபுரியும் இடம் நரகமாக தான் இருக்கும்! 'எதுவும் நிரந்தரமில்லை; இதுவும் கடந்து போகும்' என்ற மனத் துணிவு தான், அவர்களுக்கு துணை. அவர்கள் பணி மூப்பு அடையும்போது, புதிதாய் வருவோரை பாடாய்படுத்தாமல் இருக்க, உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறு வயதிலேயே காவல் துறையினர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வதற்கு காரணம், இளைஞர்களிடம் காணப்படும் பொறுமை யின்மை, சகிப்புத்தன்மை இன்மை தான்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement