Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: தமிழகத்தில், ஈ.வெ.ரா., குறித்து கலவரத்தை துாண்டும் வகையில் பேசியுள்ள ராஜாவை, தமிழக அரசு கைது செய்திருக்க வேண்டும். தமிழகத்திற்குள் நுழைய, ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்து தான், ராஜா மூலம், பா.ஜ., இப்படிச் செய்வதாகத் தெரிகிறது. இது போன்ற செயல், தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை, அதன் தலைமை உணர வேண்டும்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர், எம்.எல்.ஏ., தனியரசு பேட்டி: 'அ.தி.மு.க., இனி நிலைக்காது' என்ற எண்ணத்தில், நடிகர்கள் எல்லாம், முதல்வர் கனவில் உள்ளனர். நடிகர்களுக்கு ஓட்டு போட்டு, மக்கள் ஏமாற மாட்டார்கள். பிரிந்து நிற்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால், அ.தி.மு.க., பலப்படும். கமல், ரஜினியை, தமிழகத்தை ஆள அனுமதிக்க மாட்டோம்; வார்டு உறுப்பினர்களாக கூட, ஆகவிட மாட்டோம்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் துரைசாமி பேட்டி: தமிழக அரசியலில் கவர்ச்சிமிக்க, ஆளுமைத்திறன் கொண்ட தலைமை இல்லாதது உண்மை தான். இன்று, மக்கள் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு, எவரிடத்திலும் தலைமை, கவர்ச்சி, எழுச்சி என, எந்த பண்பும் இல்லாததால், ஒரு வெற்றிட அரசியல் ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: தன், 'டுவிட்டர்' பக்கத்தில், எச்.ராஜா பதிவிட்டது தவறு. கடுமையான எதிர்ப்பு வந்தவுடன், வருத்தம் அடைவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன், அந்தத் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என, பல முறை ஆராய்ந்து, அதன்பின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாமல், பதிவிடுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை: தமிழக அரசியலில், ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, ரஜினி தப்புக் கணக்கு போடுகிறார். வெற்றிடம் எப்போதும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை, தன் திறம்பட ஆட்சியால், ஜெயலலிதா நிரப்பினார். அவரை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பி, ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வருகின்றனர். சினிமா துறையைச் சேர்ந்த ரஜினி, வெற்றிடம் உள்ளதாக நினைத்து வந்தால், கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவார்.

'கட்சியில் சேர, துண்டு தயாராகிறது' என, நினைக்கத் தோன்றும் வகையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேட்டி: ரஜினியை திரைப்படங்களில் இயக்கலாமே தவிர, பொதுவெளியில் யாரும் அவரை இயக்க முடியாது. அவருக்குப் பின்னால், அவர் நம்பும் ஆண்டவன் துணை இருக்கிறார்; பா.ஜ., போன்ற சக்திகள் எதுவும் இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி என்றோ, ஆலோசனை பெறப்படும் என்றோ ரஜினி கூறவில்லை. ரஜினியை யும், கமலையும், பா.ஜ., இயக்குவதாகக் கூறுவது, முழுக்க முழுக்க மாய கற்பனை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது, தாழ்த்தப்பட்டோர் என்று கூறப்படுவோர் படித்ததால்தான் என்று பெரியார் கூறியது திருமாவுக்கு எட்டவில்லை போலும். இல்லை, நாங்கள் தாங்கிப்பிடிக்கும் மதத்தை பற்றி இழிவாகப்பேசியிருந்தால்தான் எங்களுக்கு கோபம் வந்திருக்கும், எங்கள் சாதியை எப்படி பேசியிருந்தாலும் கவலையில்லை என்று நினைக்கிறார்போலும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement