Advertisement

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆர்., மாண்பை யாரும் குறைத்து பேசாதீர்!

டாக்டர் கே.தங்கமுத்து, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காமராஜர் முதல்வராக இருந்த போது, தன் சொந்த கிராமத்திற்கு சென்று, தாயை சந்தித்தார். அப்போது, 'வீட்டிற்கு, புதிதாக குடிநீர் இணைப்பு வேணும்ப்பா' என, அவர் தாய் கேட்டார். அதற்கு, அதிகாரிகள் சம்மதித்தும், 'சட்டத்திற்கு புறம்பாக, என் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு தேவை இல்லை' எனக் கூறியவர், காமராஜர்!

முதல்வராக அண்ணாதுரை பதவியேற்றதும், அவரது வீட்டிற்கு நகராட்சி அலுவலர்கள் வந்தனர். 'உங்கள் வீட்டு மாடியில் கட்டப்பட்டுள்ள அறை, விதி மீறி கட்டப்பட்டுள்ளது என, நோட்டீஸ் கொடுத்து இருந்தோம்; அதை, தற்போது வாபஸ் பெற்று கொள்கிறோம்' என்றனர்.

அண்ணாதுரை, 'விதி மீறி கட்டடம் கட்டி இருப்பதாக, நோட்டீஸ் கொடுத்த நீங்கள், உங்கள் கடமையை செய்து உள்ளீர்கள்; அதை, ஏன் வாபஸ் பெற வேண்டும்? சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்' என்றார். இவர்கள் தான், நேர்மைக்கும், உண்மைக்கும் சான்றாக இருந்த முதல்வர்கள்...

சென்னையில் நடந்த, ஒரு பொதுக்கூட்டத்தில், காமராஜர் முன்னிலையில், எம்.ஜி.ஆர்., பேசுகையில், 'காமராஜர் என் தலைவர்; அண்ணாதுரை எனக்கு வழிகாட்டி' என்றார். இரு பெரும் தலைவர்களை ஆசானாக ஏற்ற, எம்.ஜி.ஆர்., 1984-ல், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவரும், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தந்தார்.

அப்பேற்பட்ட மாசற்ற, கறைபடாத, எம்.ஜி.ஆரிடம், தான் கேட்ட உதவி குறித்து, சென்னை, வேலப்பன் சாவடி, தனியார் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில் பேசியுள்ளார், ரஜினி!

அங்கு, எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசிய அவர், '1984ல், கோடம்பாக்கத்தில், நான் கட்டிய திருமண மண்டப கட்டடத்திற்கு, தடையில்லா சான்றிதழ் பெற முயன்றும், கிடைக்கவில்லை. கடைசியில், எம்.ஜி.ஆரை நேரில் அணுகி, முறையிட்டதால் தான், தடையில்லா சான்றிதழ் கிடைத்தது' எனக் கூறியுள்ளார்.

விதிமீறி கட்டப்பட்டதாக கூறி, அவரது திருமண மண்டபத்திற்கு, தடையில்லா சான்றிதழ் கொடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். எம்.ஜி.ஆரிடம் வற்புறுத்தி, சான்றிதழை பெற்றது போல், அவர் பேச்சு உள்ளது; இது, எம்.ஜி.ஆரின் மாண்பை குறைப்பது போலும் தெரிகிறது. என்னை போன்ற, அவரது ரசிகர்களால், இந்த பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது!

'பஞ்ச் டயலாக்' இனியும் வேண்டாம்!

என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் பேசினால் மட்டும், அந்த மொழி வளராது; தமிழன் வளர்ந்தால் தான், தமிழ் மொழி வளர முடியும். தமிழன் வளர, அவன் ஆங்கில மொழியில் படித்து, அறிவு ஜீவியாக, தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என, திருவாய் மலர்ந்திருக்கிறார் ரஜினி!

அவருக்கு, சில உண்மைகளை உணர்த்த விரும்புகிறேன்... தமிழன் வளர்ந்தால் தான், தமிழ் வளர முடியும் என்பது எவ்வளவு அபத்தமானது என்பதை, புரிய வைத்தவர்கள், தி.மு.க., தலைவர்கள்.சமஸ்கிருத மொழியில் இருந்த, தங்கள் பெயர்களை துாய தமிழ்ப் பெயர்களாக மாற்றினர். சோமசுந்தரம், மதியழகன் ஆனார். அன்பழகன், அறிவழகன், பரிதி இளம்வழுதி, நெடுஞ்செழியன் என, பெயரிட்டு கொண்டனர்.

மேடைகளில், தமிழில் எதுகை, மோனை ததும்ப முழக்கம் செய்து ஆட்சியைப் பிடித்தனர். உலக கோடீஸ்வர பட்டியலில் இடம் பிடித்தனர். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது, தமிழாக இருக்கட்டும்' என, 'பஞ்ச் டயலாக்' பேசினர்.

கடைசியில் என்ன நடந்தது... 'தமிழுக்காக உயிரையும் கொடுப்போம்' என, 'டயலாக்' பேசிய தலைவர்களின் வாழ்க்கை வளமானது.பாவம்... தமிழ் மொழிதான் படுகுழியில் விழுந்தது. இன்று, அரசு பள்ளிகளில், தமிழ் மொழி வாயிலாக, கல்வி கற்பிப்பதையே நிறுத்தி விட்டனர். நடிகர் ரஜினி சொல்வது போல், தமிழன் ஆங்கிலம் கற்றால், அவன் வாழ்வான்; ஆனால், தமிழ்மொழி வாழ வழி இல்லாமல் போய் விடும்.

'ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தங்கள் பெயரை பிழையின்றி, தமிழில் எழுத தெரியவில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வருத்தப்பட்டார் என்ற செய்தி, ரஜினிக்கு தெரியாது போலும்!

மலையுடன் மடுவை மோத விடலாமா?
சிவ அண்ணாமலைதேசிகன், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனின், குரூப் - 4 போட்டித் தேர்வு, சமீபத்தில் நடந்தது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், இத்தேர்வை எழுதலாம். மொத்தமுள்ள, 9,351 பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், 17.50 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதில், பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள், 1.90 லட்சம் பேரும், எம்.பில்., பட்டம் பெற்றவர்கள், 2.53 லட்சம் பேரும், பிஎச்.டி., பட்டம் பெற்ற, 992 பேரும் பங்கேற்றனர் என்ற தகவல், மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

உயர் கல்வித் தகுதியை மறந்து, குரூப் - 4 தேர்வில் பலர் பங்கேற்றது, குண்டு கல்யாணத்துடன், தயிர்வடை தேசிகனை, மல்யுத்தத்திற்கு அழைப்பது போல் உள்ளது! ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற கல்வியை, அடிப்படை தகுதியாக வைத்து, பணிகளை தேட வேண்டும்; இல்லாவிடில், சுயமாக ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம்.

மாவட்ட தொழில் மையத்தை அணுகி, ஆலோசனைகளை பெற்று, தொழிலை துவக்கி, முதலாளி என்ற அந்தஸ்தில் வாழ வழி தேடலாம். அதை விடுத்து, இது ஏன் என, தெரியவில்லை.உருண்டை சாதத்திற்காக, துதிக்கையை துாக்கும் யானைகள், வருவோர், போவோருக்கெல்லாம் ஆசீர்வாதம் செய்யுமாம். அது போல், அடிமையாக வாழ நினைப்பது நல்லதா என, மெத்த படித்தோர் எண்ணி பார்ப்பது நல்லது!

தமிழகத்தின் மக்கள் தொகை, 7.50 கோடி. இதில், அரசு ஊழியர்கள் வெறும், 18 லட்சம் பேர் மட்டுமே; அப்படி எனில், மற்றவர்கள் எல்லாம், வாழாமல் பிச்சையா எடுக்கின்றனர்... படிக்காத கொத்தனார், கட்டுமான தொழிலை கற்று, தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து, மாதம், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்!

எம்.ஏ., - எம்.காம்., பட்டம் பெற்ற பலர், ஜவுளி, மளிகை கடைகளில், கால்கடுக்க, 12 மணி நேரம் நின்று, மாதம், 6,000 - 8,000 ரூபாய் வரை, சம்பளம் பெறுகின்றனர்; இந்நிலை மாற வேண்டும்.உயர் கல்வி படித்த இளைஞர்களே... நாட்டில், ஆயிரத்து எட்டு தொழில்கள் உள்ளன. அதில், ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, தலை நிமிர்ந்து, தன்மானத்துடன் நெஞ்சை நிமிர்த்தி, நடக்க வழி பாருங்களேன்!lll

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • raja - Kanchipuram,இந்தியா

    டாக்டர் கே.தங்கமுத்து, பொள்ளாச்சி,அவர்களே எம்ஜியார் பற்றி அறிய அன்றைய நாளிதழ்கள் படித்திருக்க வேண்டும் அல்லது அன்றைய மனிதர்களிடம் கேட்டிருக்க வேண்டும். அவருக்கு சமையல் செய்தவர், பாதுகாவலர் முதல் அவரிடம் மந்திரிகளாக இருந்தவர்கள் தான் இன்றைய கல்வி தந்தைகள் மற்றும் பல் கட்சிகளின் தலைவர்கள் இது தெரிந்தாலே எம்ஜியார் எப்படி பட்டவராக இருந்திருப்பார் என்பதை உங்களை போன்றோரால் ஊகிக்க முடியும்.

  • skv - Bangalore,இந்தியா

    தமிழகத்தின் கிராமங்களில் நன்னபடிச்சு பட்டதாரி இளைஞர்களுக்கு உங்க அரசூலே வேலை கிடச்சுருக்கு தனியார்கல்லூரிலே படிச்சால் கேம்பஸ் இன்டெர்வியு லே ஜாப் நிஸ்ச்சயம் அரசுக்கல்லூரிலே பண்டிட்=ச்சு ரேங்க் இருந்தும் வேலைகிடைக்காமல் சொத்துக்கேவழியே இல்லேன்னு தவிக்கும் கூட்டம் இருக்கே தெரியுமா அரசுக்கு அதுமட்டுமா அந்த பட்டதாரி பிராமின் என்றால் அவ்ளோதான் படிச்சுட்டு வீட்டுலே தான் கிடப்பான் இருந்த நிலத்தை விருப்படிக்கவச்சார் அப்பா இன்று அம்மா நாள் வீட்டுலே சமையல் பண்ணி புருஷனுக்கும் பிள்ளைக்கும் சோறுபோடும் நிலைமை தேவையா ????????/ஜஸ்ட் பாஸ்மார்க் வாங்கிட்டு அரசூலே வேலைபார்க்கிறானுக லஞ்சம் வங்கின்னு

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    குறைந்த பட்சத் கல்வித்தகுதி உள்ளதுபோல் அதிகப் பட்சத் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு மீறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement