Advertisement

இது உங்கள் இடம்

நிபந்தனைகளால் நெசவாளர்கள் நசுங்குகின்றனர்!

சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ், மண்டல மேலாளர் (பணி நிறைவு) சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகமெங்கும், 6.54 லட்சம் நெசவாளர்கள், நெசவுத் தொழிலை நம்பி வாழ்கின்றனர். இதில், 1,153 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள, நெசவாளர்களின் எண்ணிக்கை, 3.22 லட்சம்!

நெசவுத் தொழில் நலிந்து வருவதாலும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததாலும், பிழைப்பு தேடி, வேறு மாநிலங்களுக்கு, பலர் இடம் பெயர்ந்து வருகின்றனர். இதை தவிர்க்கும் நோக்குடன், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள, தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தில், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம், நெசவாளர்கள் பலர், பயன் பெற்று வந்தனர்.

ஊக்கத்தொகை பெற, கூட்டுறவு சங்கங்களுக்கு, தற்போது புதிதாக இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது, மத்திய ஜவுளித்துறை; இது, நெசவாளர்களையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகபட்சம், மூன்றாண்டுகள் மட்டுமே, ஊக்கத்தொகை வழங்கப்படும்; ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் சங்கங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட மாட்டாது' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, 285 கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும், 53 ஆயிரம் நெசவாளர்கள் மட்டுமே, ஊக்கத்தொகை பெற முடியும். எஞ்சியுள்ள, 868 கூட்டுறவு சங்கங்களில், 2.69 லட்சம் நெசவாளர்கள் ஊக்கத்தொகை பெற முடியாது.

நெசவாளர்களின் உற்பத்தி திறன் குறையும். கைத்தறி துணி ரகங்களின் உற்பத்தி சரிந்தால், தமிழகம் முழுவதுமுள்ள நெசவாளர் சங்கங்களில், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்வதும் குறைந்து விடும்.

கைத்தறி துணிகளில், புதிய ரகங்கள் வரவில்லை என்றால், கோ - ஆப்டெக்சின் விற்பனையும் பாதிக்கும்.கைத்தறி தொழில் முடங்காதிருக்க; நெசவாளர் வேறு பணி நாடிச் செல்லாமல் இருக்க, இரண்டு புதிய நிபந்தனைகளையும், மத்திய ஜவுளித் துறை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டத்தின்படி, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, மத்திய - மாநில அரசுகள் முன் வர வேண்டும்!


ஆறுகளை காப்பாற்றுங்கள்!

எஸ்.ராஜகோபாலன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவிரியின் கிளை ஆறுகளான, அரசலாறு, திருமலைராஜன், குடமுறுட்டி, வெட்டாறு, வீரசோழன், வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறுகள், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் பாய்கின்றன. இந்த ஆறுகள் தற்போது வறண்டு கிடப்பதால், சீமை காட்டாமணி, ஆகாயத்தாமரை மற்றும் நாணல் புதர்கள் மண்டி கிடக்கின்றன.சில இடங்களில் ஆறுகள் சுருங்கி, வாய்க்கால் போல் காட்சியளிக்கின்றன. ஒருகாலத்தில், கிளை ஆறுகள் அனைத்திலும், இரு கரை தொட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும்.

இன்று, ஆக்கிரமிப்புகளாலும், மணல் அள்ளப்படுவதாலும், நீரை உறிஞ்சும் சீமைகாட்டாமணி, ஆகாயத்தாமரைகள் வளர்ந்ததாலும், ஆறுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன; போதாத குறைக்கு, மணல் திருட்டு வேறு!

கிளை ஆறுகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டு விட்டது. நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கிளை ஆறுகள் மூலம், கடை மடை வரை, தண்ணீர் வந்து சேராது; விவசாயம் செழிக்காது!

காவிரியின் கிளை ஆறுகள் சிலவற்றில், தடுப்பு அணை ஏற்படுத்தலாம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆறுகளை பாதுகாக்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, கிளை ஆறுகளில், சீமைகாட்டாமணியை அகற்றலாம் அல்லது இயந்திரங்களை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெறுவது ஒருபுறம் நடந்தாலும், தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உண்டு. இனியும் தாமதிக்காமல், ஆறு, குளம், ஏரி, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை, முதல்வர் பழனிசாமி எடுத்தாக வேண்டும்!

அரசுக்கு இல்லையே உணர்வு!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'எய்ம்ஸ்' மருத்துவமனை, தமிழர்களின் பகல் கனவாக இருந்து வருகிறது. அன்று, மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., கூட்டணி ஆட்சி, மத்தியில், 10 ஆண்டுகள் நடந்த போது, லாபம் தரும் இலாகாக்களை பேரம் பேசி, கருணாநிதி வாங்கிக் கொண்டார்.

போதாக்குறைக்கு, தன் மகன் அழகிரியை, கேபினட் அமைச்சராக்கி அழகு பார்த்தார். தமிழகத்தையும், தமிழர்களையும் பற்றி சிந்திக்க, கருணாநிதிக்கு நேரமில்லை. அன்றே, எய்ம்ஸ் மருத்துவமனையை, உரிமையுடன் தமிழகத்திற்கு போராடி பெற்று இருக்கலாம்!

எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விட்டால், தனியார் மருத்துவமனைகளுக்கு வருமானம் பறி போய் விடும் என்ற சுயநலத்துடன் இருந்து விட்டார் போலும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தேவையான இடங்களை தேர்வு செய்து கொடுக்க, மோடி தலைமையிலான, மத்திய அரசு கேட்டுள்ளது. பெருந்துறை, செங்கல்பட்டு, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களை தேர்வு செய்துள்ள, தமிழக அரசு, முடிவான ஒரு ஊரை இன்னும் கூறவில்லை.

மத்திய அரசு குழுவினரும், தமிழக அரசு குறிப்பிட்டுள்ள இடங்களை பார்த்து சென்றுள்ளனர். மத்திய அரசுக்கு, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., மாநில அரசு, தொடர் அழுத்தம் கொடுக்காத காரணத்தால், எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் பகல் கனவாக உள்ளது. மத்திய பட்ஜெட்டிலும், தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு, நிதி ஒதுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய, சிறு கல்லை கூட நகர்த்தவில்லை. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பொது நல வழக்காக, மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய போராடுகிறார்.தனி மனிதனுக்குள்ள உணர்வு, அரசுக்கு இல்லாததது வேதனை அளிக்கிறது!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement