Advertisement

இது உங்கள் இடம்

எட்டு கோடி 'கஸ்டமரை' விடலாமா?

அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஏர்செல்' நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி, உரிமையை இழந்து நிற்கிறது. தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குப்படுத்தும், மத்திய அரசின் 'டிராய்' அமைப்பு, அந்நிறுவனத்தின் அவல நிலையை உறுதிப்படுத்தி விட்டது.

'ஏர்செல்' வாடிக்கையாளர்கள் எட்டு கோடி பேர், தங்கள் தொலைத்தொடர்பு சேவையை, வேறு நிறுவனத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'டிராய்' மற்றும் மத்திய அரசு இணைந்து, 'ஏர்செல்' நிறுவனத்தை அரசுவுடமையாக்கலாம்.

எட்டு கோடி பேரை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளாதது வியப்பு அளிக்கிறது.அப்படி செய்தால், மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதற்கு சொற்ப மாற்றங்கள் தேவைப்படுமே ஒழிய, பெரிய அளவிற்கு முதலீட்டு செலவுகளோ, கட்டமைப்போ, ஊழியர்களின் தேவையோ ஏற்படாது!

இதை செய்ய தவறினால், மோடி அரசின் மீது எதிர்க்கட்சிகள் அடிக்கடி சொல்லும் குற்றச்சாட்டான, 'கார்ப்பரேட் அரசு, பெரு முதலாளிகளுக்கான அரசு' என்பது உண்மையாகி விடும். மேலும், 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்திற்கு வழிவிடுவது போன்றதாகி விடும்.

எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களை, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு எதிர் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு, லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இது போன்று, இழிவை தேடிக் கொள்ளாமல், 'ஏர்செல்' வாடிக்கையாளர்களை, மத்திய அரசுக்கு சொந்தமான, பி.எஸ்.என்.எல்.,லுடன் இணைக்க வேண்டும். இல்லையேல், தனியார் வளம் கொழிப்பதை ஊக்குவிப்பதாகி விடும். இவ்விஷயத்தில், அதிரடி முடிவை எடுக்க வேண்டியவர், பிரதமர் மோடியே!திருப்பதி போல் 'கோட்டை' விட்டுடாதீங்க!

வி.கார்மேகம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திண்டுக்கல்லை லுாஸ்ல விட்டுட்டீங்களே!' என்ற தலைப்பில், இதே பகுதியில் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அவருக்கு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்...

அன்று, காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில், 'பெல்' நிறுவனத்தை அமைக்க, மத்திய அரசு முன் வந்தது. 'பெல் நிறுவனம் அமைக்க, மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை, மாநில அரசால் நிறைவேற்ற முடியாது. அதற்கான சூழலும், தமிழகத்தில் இல்லை' என, திட்டத்தை நிராகரிக்க என்னென்ன வழிகளோ, அத்தனையையும் கையாண்டனர், அதிகார வர்க்கத்தினர்!

'மத்திய அரசு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நிறைவேற்றி தருகிறேன்' என உறுதி மொழி அளித்தார், படிக்காத மேதை, காமராஜர்; அவரது முயற்சியால், திருச்சியில், 'பெல்' நிறுவனம் அமைந்தது.

'ஒரு கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்தினால், 'சிக்ரி' நிறுவனத்தை, தமிழகத்தில் அமைத்து தருகிறோம்' என்றார், அன்றைய பிரதமர் நேரு. அவர் அறிவித்த மறுநாளே, பிரதமரின் வீட்டில் பணத்துடன் போய் நின்றார், வள்ளல் அழகப்பர்; சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், சிக்ரி நிறுவனம் அமைந்தது.

தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இரண்டு ஆண்டுகளாக இடம் பார்ப்பதாக, மாநில அரசு கூறுகிறது. இதுவரை, ஆறு இடங்களை குறிப்பிட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மத்திய அரசு துாதுக் குழுவும் இடங்களை ஆய்வு செய்துள்ளது.

ஆறு இடத்தில் ஒரு இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை. மதுரையில் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே தவிர, அதற்கான ஒரு செங்கல் கூட, இதுவரை நகரவில்லை தமிழகத்தில், எந்த ஊரில், எய்ம்ஸ் அமைய வேண்டும் என்பது முக்கியமல்ல... தமிழகத்தின் எந்த ஊரிலாவது, அமைய வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பம்.

திருப்பதியை ஆந்திராவிற்கு தாரை வார்த்தது போல, எய்ம்ஸ் வாய்ப்பு, தமிழகத்தை விட்டு கைநழுவி போய் விடக்கூடாது!

கமல் பிழைக்க வழி...!

கு.அருணாசலமூர்த்தி, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அன்று, தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இருந்தது. ஈ.வெ.ரா., - ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை ஆகிய தலைவர்களிடம், கொள்கை ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன், நட்புடன் பழகினர்.

தேசிய அரசியலில், காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, மன்மோகன் சிங், ராகுலும், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, பிரதமர் மோடியும், விழாவில் சந்தித்து கொண்டால், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்றி தெரிவித்து கொள்வர்!

தமிழகத்தில், அண்ணாதுரை மறைவிற்கு பின், 1970ல், தி.மு.க.,வில், கருணாநிதி தலை எடுத்தார். அன்று முதல், அரசியல் நாகரிகம் மறைய துவங்கியது. கருணாநிதியை எதிர்த்து, 1972ல், அ.தி.மு.க.,வை துவக்கினார், எம்.ஜி.ஆர்.,அவரை, மிகவும் தரம் தாழ்த்தி, 'மலையாளி எல்லாம் நாட்டை ஆண்டால் உருப்படுமா' என்றெல்லாம், கருணாநிதி மேடையில் முழங்கினார்.

எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்த வரை, கருணாநிதியால் முதல்வராக முடியவில்லை. அவர் மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வை உடைத்து வெற்றி கண்டார். ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., வலுப்பெற்றதும், மீண்டும், தி.மு.க.,வால் எழுந்திருக்க முடியவில்லை. ஜெயலலிதா - கருணாநிதி இடையே, 15 ஆண்டு கால அரசியலில், காழ்ப்புணர்ச்சி அதிகளவில் இருந்தது. ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா முதல்வரானதும், சட்டசபைக்குள் கருணாநிதி தலைகாட்டவில்லை; இன்றும், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே பகைமை உணர்வு மாறவில்லை.

திராவிட கட்சிகளுக்கு மத்தியில், நடிகர் கமல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். கட்சி துவக்கும் முன், டில்லி முதல்வர், கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர், மம்தா, கேரள முதல்வர், பினராயி விஜயன் போன்றோரை சந்தித்து, ஆலோசனை பெற்று உள்ளார்.

தமிழக மூத்த அரசில்வாதி, நல்லகண்ணு முதல் முன்னாள் முதல்வர், கருணாநிதி, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.என்.சேஷன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். சக நடிகர்கள் ரஜினி, விஜயகாந்தை சந்தித்தும் வாழ்த்து பெற்றுள்ளார்; மதுரையில், கட்சியையும் துவக்கி விட்டார்.

இனி, தன் கட்சியை எப்படி காப்பாற்றுவது என்பதை, அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்து, இன்று பூஜ்ஜியமான, விஜயகாந்திடம், அவர் கற்க வேண்டும். தே.மு.தி.க., என்ற கட்சியை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டாலே, கமல் பிழைத்து கொள்ளலாம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement