Advertisement

பிறக்கட்டும் நல்லவழி...

அதிக குற்றச்சாட்டுகளுக்கு பொதுத்துறை வங்கிகள் ஆளாகி இருக்கும் நிலையில், அவை தனியார்மயமாகி விடும் என்ற, பரப்புரையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.இன்றைய நிலையில், பார்லிமென்டின் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில், பொதுத்துறை வங்கிகளின், 'வாராக்கடன்' எந்த அளவு அவற்றைச் சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கிறது என்ற, நுட்பமான தகவல் வெளிவந்தால் நல்லது. வங்கி பணத்தை மோசடி செய்ததில் தொழில் அதிபர் மல்லையாவை விட, வைர வியாபாரிகள் நிரவ் மோடியும், அவரது உறவினர் சோக்சியும் நடத்திய சாமர்த்திய செயல்கள், வங்கித் தலைமை மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றிற்கு பாடமாகும். பட்டை தீட்டப்படாத வைரத்தை இறக்குமதி செய்தல், அதை மதிப்புக் கூட்டிய பொருளாக்கி, உலகின் பல பாகங்களில் விற்றல், அதற்காக வங்கியில் வாங்கிய கடன்களை கட்டாமல், மோசடி செய்தது தனி ரகமாகும். அந்த ஏற்றுமதியில் வரும் அதிக பணத்தை கணக்கில் காட்டாமல், ரியல் எஸ்டேட் அல்லது பங்குச்சந்தையில் தங்களுக்கு வேண்டிய ஸ்டாக்குகளை அதிக விலையாக்கி, அப்பணத்தை உறிஞ்சுதல் ஆகியவை, 'நாணயமான மோசடி' என்றே கூறலாம்.விஜய் மல்லையா மட்டும் அல்ல, நிரவ் மோடி போன்றோர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதை, உடனே தடை செய்ய சரியான சட்டம் கிடையாது. இந்த விஷயங்களுக்கு சம்பந்தமில்லாத மற்றொரு விவகாரத்தில், நம் ஊரில் கார்த்தி சிதம்பரம், பல்வேறு வழக்குகளை சந்திக்கிறார். நீதிமன்ற அனுமதி பெற்று லண்டன் போய்த் திரும்பி வந்த போது அவர் பிடிபட்டார்.வெளிநாட்டில் உள்ள, பல்வேறு வங்கி கணக்குகளை நிறைவு செய்யவே, அவர் லண்டன் சென்றிருந்தார் என்று, சி.பி.ஐ., சில ஆவணங்களுடன், குற்றம் சாட்டியிருப்பதைப் பாருங்கள். இது ஊழலில், 'ஹையர் கிரேடு' என்றழைக்கலாம். இவற்றை, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.ஆனால், நிரவ் மோடி விஷயத்தில், அவர் வங்கிக் கணக்கு வைத்திருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உயர் அதிகாரிகள் கைது, அதே போல, 'வாராக்கடன்' விஷயத்தில் மற்றொரு பெரிய வங்கியின் தலைமைப் பெண் அதிகாரி கைது என்பதைப் பார்க்கும் போது, பொருளாதார மோசடிகள் தலை சுற்றலை ஏற்படுத்தும்.முதலில் வங்கிகளின் வெளிநாட்டுக் கணக்குகளை கண்காணிக்கும், 'ஸ்விப்ட்' நடைமுறைகளை ரிசர்வ் வங்கி கவனித்தாக வேண்டும். அதேபோல வங்கிகளில் உள்ள இம்மாதிரி வர்த்தகப் பரிமாற்றங்களை ஆராயும் கணக்குத் தணிக்கைக் குழு சற்று கண்ணயர்ந்தாலும், நுாற்றுக்கணக்கான கோடிகள் பறந்து விடும்.கடைசியாக இவற்றைக் கண்காணிக்க ஒரு நிரந்தர அமைப்பு தேவை என்ற அடிப்படையில், பணத்தை சுருட்டியபின், வெளிநாடுகளில் சொகுசாக வாழும் நிரவ் போன்றவர் களின், இங்குள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் தீர்வுக்கான மசோதாவை, மத்திய அரசு அடுத்த சில நாட்களில் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது.ஏனெனில், மல்லையா, நிரவ் மோடி, சோக் சி போன்றோர் இங்கே வைத்திருக்கும் அசையாச் சொத்துகளை தற்போது முடக்கம் செய்தாலும், வாங்கிய கடனில், 60 சதவீதம் வரையாவது கையகப்படுத்த வழி ஏற்படும்.அதைவிட யாரெல்லாம், 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றிருக்கின்றனர்? இவர்கள் பணப்பரிமாற்றம் செய்ய வைத்திருந்த, 'மோசடி லெட்டர் பேடு கம்பெனிகளில் உள்ள ஆஸ்தி' ஆகியவற்றையும் வரித்துறை ஆய்வு செய்கிறது.இன்றைய நிலையில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வரும் செய்திகளில், இந்த மோசடி எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அதிலும், ஐந்து முதல், 10 ஆண்டுகள் பின்னணியையும் இவை பெரும்பாலும் கொண்டிருக்கின்றன.இதை அனைத்தையும் உரிய சட்ட நடைமுறைகளில் அரசு பணமாக்கி, அவற்றை மீண்டும் வங்கி கஜானாக்களில் சேர்க்குமா என்ற கேள்விக்கு, எளிதாக பதில் கிடைக்காது.ஏனெனில், வங்கியின் உயர் அதிகாரிகள் தங்கள் மீதான நடவடிக்கைகளின் விசாரணைகளில், தங்களது பின்னணியில் உள்ளவர்களை காட்டினால், அதை விசாரிக்க வேண்டி வரும். அரசு கொண்டு வரும் ஆடிட்டர்களின் முறைகேடுகளை தடுக்கும் சட்ட அமைப்பானது, 'கம்பெனிகள் சட்டத்தின் கீழ் வருவது' ஊழல்களை ஒழிக்க வழிகாணலாம்.மத்தியில் ஆளும், பா.ஜ., எத்திட்டத்தை மேற்கொண்டாலும், அதை எதிர்க்கும் காங்கிரஸ், உலக அளவில் நிதிச் சீரமைப்பு நிறுவனங்கள் போல இந்தியாவில் ஏற்பட உரிய முயற்சி மேற்கொள்வதை அரசியலாக்கக் கூடாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement